Saturday, April 27, 2024
Home » சிறுவர், முதியோர் உரிமைகளை வலியுறுத்தி ஒக்டோபர் மாதத்தை விழிப்புணர்வு காலமாக அனுஷ்டிக்க வேண்டும்!

சிறுவர், முதியோர் உரிமைகளை வலியுறுத்தி ஒக்டோபர் மாதத்தை விழிப்புணர்வு காலமாக அனுஷ்டிக்க வேண்டும்!

by mahesh
October 4, 2023 6:32 am 0 comment

ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினமும், சர்வதேச முதியோர் தினமும் ஆகும். சிறுவர்களும், முதியோர்களும் ஒரு சமூகத்தின் பிரதான இரு தூண்களாகும். ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் பிரகடனங்கள் அடிப்படையில் 1954 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று 1991 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச முதியோர் தினம் பின்பற்றப்படுகிறது.

ஒவ்வொரு மனிதரதும் வாழ்வில் சிறுபராயம் என்பது மிகவும் இனிமையான காலமாகும். முதுமைக் காலம் என்பதும் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைக் கடந்த அனுபவ முதிர்ச்சியைப் பெற்ற ஓய்வுநிலைக் காலமாகும்.

சிறுவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சமூக அச்சாணியாக இருப்பவர்கள். எனவே சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக அதிக ஆர்வம் செலுத்த வேண்டியது பெரியோர்களின் தலையாய கடமையாகும்.

சிறுவர்கள் சகல உரிமைகளோடும் வாழ்வதற்கும், வளர்ச்சி பெறுவதற்குமான உரிமைகளைப் பெற்றுள்ளனர். பிறப்பின் போதே பெற்றோர் மூலமாக சட்டரீதியாக பெயரொன்றையும் இனஅடையாளத்தையும் பெற்றுக் கொள்ளும் உரிமைகளுக்கு சட்ட அங்கீகாரம் உள்ளது. பெற்றோர்களை தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை மற்றும் பெற்றோரிடமிருந்து தனிமைப்படுத்தப்படாது இருப்பதற்கான உரிமையும் முக்கியமானதாகும்.

சிறுவர்களினதும் முதியோர்களினதும் உரிமைகள், நலன்களில் அக்கறை கொண்டு அவர்களது பாதுகாப்பு வாழ்வியல் விடயங்களை முதன்மைப்படுத்தும் முகமாக புரிந்துணர்வையும், பொதுநிலைப்பாட்டையும் வலியுறுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று உலக மக்கள் சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் சிறுவர்களாவர். அதேபோன்று உலகளாவிய ரீதியில் 60 கோடி முதியவர்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் சுமார் 22 இலட்சம் முதியோர் உள்ளனர். மொத்த சனத்தொகையில் இது 13 சதவீதமாகும்.

பொருளாதார சுரண்டல்களிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் உரிமை, பாலியல் வல்லுறவுகளில் இருந்து பாதுகாக்கும் உரிமை, சித்திரவதைகள் குரூரமாக நடத்தப்படுதல் போன்ற தண்டனைகளில் இருந்து தம்மை தவிர்த்துக் கொள்ளும் உரிமை மற்றும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்புக்குமான அனைத்து உரிமைகளும் சிறுவர்களுக்கு உரித்தானவையாகும்.

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது சிறுவர்களை தவறாக வழிநடத்தும் அனைத்துவித தவறுகளையும் உள்ளடக்குகின்றது. சிறுவர் மீதான துஷ்பிரயோகம் என்ற விடயமானது இன்று ஒட்டுமொத்த உலகையும் உலுக்கிக் கொண்டிருக்கும் பேராபத்தாக உள்ளது. சமூக கட்டமைப்புகள் அடிப்படையில் ஆண் பிள்ளைகளாலும், பெண் பிள்ளைகளானாலும் சரி இன்று பிள்ளைகளை கொண்டுள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகள் வளர வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்வதாகவே உணர்கின்றனர்.

அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் காரணமாக குடும்பங்கள் ரீதியாகவும் சமூகங்கள் ரீதியாகவும் ஏற்படும் சூழ்நிலைகளால் சிறுவர்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அதிகமாக பாதிப்புக்குள்ளாகின்றனர். விபரமறியாத சிறுவர் சிறுமியரை வயதில் மூத்தவர்கள் தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. சிறுவர்களை வேலைக்கமர்த்தும் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்களது உரிமைகளும் மறுக்கப்படுகின்றமை வேதனைக்குரியது மட்டுமல்லாமல், அது தண்டனைக்குரிய பாரிய குற்றமாகும்.

நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், ஆபாச மற்றும் கொடூர காட்சிகளைக் கொண்ட சினிமா, போதை மற்றும் புகைத்தல், ஏனைய சமூகக் காரணிகள் காரணமாக சிறுவர்கள் பல்வேறு பாதிப்புகளையும் சவால்களையும் எதிர்நோக்குகின்றனர்.

பொலிஸ்துறை, நீதிமன்றம் சார்ந்த அமைப்புகள் சிறுவர் நாலன்கள் தொடர்பான பாதுகாப்பு அதிகாரசபை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் எவ்வளவுதான் சட்டதிட்டங்களை சுற்றுநிரூபங்களை, அறிவிப்புகளை பகிரங்கப்படுத்துகின்ற போதிலும் தெருவோரங்களில் பிச்சையெடுப்பதற்காக பயன்படுத்தப்படும் சிறுவர்களை பார்க்கும் போது வேதனையளிக்கிறது.

சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு நாகரீகத்தின் இறுதி அளவீடு என்பதால் தற்போதைய சிறுவர் பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் முகமாக தேவையான சட்ட ரீதியான சீர்திருத்தங்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். வெறும் வார்த்தை ஜாலங்களுக்கு பதிலாக ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தேவைப்படுகிறது.

சிறுவர்கள் உடல்ரீதியாக, பாலியல்ரீதியாக, உளரீதியாகவும் துன்புறுத்தப்படுவதை முழுமையாக தடுப்பதற்காக ஐ.நா. சிறுவர் உரிமை சாசனத்தின் புதிய வழிகாட்டல்கள் அடிப்படையில் தண்டனைச்சட்டக் கோவை பலப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தை வலியுறுத்த வேண்டும்.

சிறுவர்களால் தங்களை வெளிப்படுத்த முடிவதில்லை. நலிவுற்றவர்களாக மற்றும் தீங்கு விளைவிக்கப்படும் அல்லது சுரண்டப்படும் அபாயத்தில் உள்ளவர்களை மீட்க வேண்டும். கட்டாய வேலைக்கமர்த்தல், உடல், பாலியல் மற்றும் உளஉணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு எதிராக அதிகார பதவிகளில் இருப்பவர்கள், பெற்றோர், ஆசிரியர், மதத்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், ஊடகவியலாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அதேசமயம் முதியோர் விடயத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு, உணவு, உறைவிடம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சமூகம் மற்றும் சட்டரீதியான பாதுகாப்பளித்தல், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை முதியோர் அனுபவிக்க வழிவகை செய்தல் போன்ற முதியோர் நலன்கள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தப்படுவதும் அவசியமாகின்றது.

தெய்வானை சிவலிங்கம்… 
ஜே.பி, மனிதவுரிமை ஆர்வலர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT