Thursday, May 9, 2024
Home » காலிஸ்தான் முக்கியஸ்தர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை; கனடா-இந்தியா இடையே அதிகரிக்கும்இராஜதந்திர முறுகல்!

காலிஸ்தான் முக்கியஸ்தர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை; கனடா-இந்தியா இடையே அதிகரிக்கும்இராஜதந்திர முறுகல்!

இந்தியாவுக்கு எதிரான விசாரணையை கண்காணிக்கும் ஐந்து கண்கள்!

by gayan
September 23, 2023 12:51 pm 0 comment

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதலில் ‘ஃபைவ் ஐஸ் உளவுக்குழு’, அதாவது Five Eyes intelligence என்ற அமைப்பு இந்தியாவுக்கு எதிரான விசாரணையை கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இக்குழு வெளிப்படையாக இதில் கூட்டு அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், இவ்விடயத்தில் விசாரணை வேண்டும் என்பதில் Five Eyes intelligence குழு தீர்க்கமாக உள்ளது.

கனடாவில் உள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகில் வைத்து சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை சர்வதேசரீதியில் ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கிக் கொண்டே போனார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே ‘நம்பகமான’ தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறியிருந்தார். அண்மையில் புதுடில்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்தக் கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்குப் பின்னணியில் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் முகவர்கள் மூலம் கொலை நடந்து இருக்கலாம்’ என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக கனடா பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால், அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது கனடாவின் இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு இக்ெகாலைச் சம்பவம் முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்’ என்று கனடா பிரதமர் கூறியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு எதிராக இவ்வாறு குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், உலக நாடுகளை இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக ஒன்றுதிரட்ட கனடா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே கனடா பிரதமர் உலக நாட்டுத் தலைவர்களுடன் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில்தான் இந்தியா_ கனடா இராஜதந்திர மோதலில் ‘ஃபைவ் ஐஸ்’ உளவுக்குழு அதாவது Five Eyes intelligence என்ற அமைப்பு இந்தியாவிற்கு எதிரான விசாரணையை கண்காணித்து வருகிறது. இவர்கள் வெளிப்படையாக இதில் கூட்டு அறிக்கை வெளியிடவில்லை என்றாலும் இதில் விசாரணை வேண்டும் என்பதில் இந்தக் குழு தீர்க்கமாக உள்ளது.

‘ஐந்து கண்கள்’ என்பது அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு உளவுத்துறை கூட்டணியாகும். இது 1946 இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டணியானது கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல் பகிர்வு தொடர்பான அமைப்பு ஆகும்.

முதலில் அமேரிக்கா – ஐரோப்பா இடையிலான இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் ‘யுனைடெட் கிங்டம் -யுனைடெட் ஸ்டேட்ஸ் கொம்யூனிகேஷன் இன்டலிஜென்ஸ் அக்ட்’ (UKUSA) ஒப்பந்தம் என்று இது அழைக்கப்பட்டு வந்தது.

அதன் பின்னர் மற்றைய 3 நாடுகள் இதில் சேர்க்கப்பட்டன. தற்போது இந்தக் குழு Five Eyes intelligence alliance என்று அழைக்கப்படுகிறது. இந்த 5 நாடுகள் தங்களுக்கு உள்ளேயே உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளும். முக்கியமான உளவு விஷயங்களை பகிர்ந்து அதில் நடவடிக்கை எடுக்கும். பெரிய விசாரணைகளில் உதவும். 2005 வரை இந்தக் குழு இரகசியமாக இயங்கி வந்தது.

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா மற்றும்- ஐரோப்பா இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது. மேற்கு உலகின் அதிதீவிர இரகசியங்களை இந்த நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும். இதைப் பகிர்வதற்கு STONEGHOST network என்ற நெட்வேர்க்கை இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தகவல்கள் கசியாமல் மிக கச்சிதமாக இவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த அமைப்புதான் இந்தியாவிற்கு எதிரான புகாரில் கூட்டறிக்கை வெளியிட வேண்டும், விசாரணை செய்ய வேண்டும் என்று கனடா கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த நாடுகள் இதில் கூட்டறிக்கை வெளியிடவில்லை. மாறாக இதில் நாடுகள் தனித்தனியாக விசாரணை அவசியம் என்று கூறியுள்ளன.

இந்த நிலையில்தான் இந்தியா_- கனடா மோதல் விவகாரத்தில் தற்போது அமெரிக்கா மூக்கை நுழைத்து உள்ளது. இதனால் இந்தியாவிற்கு அழுத்தம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறுகையில், “பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். கனடா அரசுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். கனடாவின் விசாரணை தொடர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

“குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது முக்கியமானது. அதனால் நாங்கள் விசாரணையை ஆதரிக்கிறோம்” என்று வெள்ளை மாளிகை இந்தியாவிற்கு எதிரான தொனியில் பேசி உள்ளது. அத்துடன் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “கனடா நடத்தும் காலிஸ்தானி தலைவர் படுகொலை விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும், இந்தக் கொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

1990களில் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிஜ்ஜார் பிணையில் விடுதலையாகி கனடாவுக்கு தப்பி ஓடினார். அங்கிருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நிலையிலேயே நிஜ்ஜார் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு பங்கு இருக்கிறது என கனடா பகிரங்கமாக குற்றம் சாட்டிய பின்னரே இவ்விவகாரம் சூடு பிடித்தது.

அத்துடன் கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரியையும் அந்நாட்டில் இருந்து வெளியேற கனடா உத்தரவிட்டது. இதற்குப் பதிலாக இந்திய மத்திய அரசும், இந்தியாவில் இருந்து கனடா தூதரக மூத்த அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கனடாவில் வசிக்கும் இந்துக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டு சீக்கிய பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேசமயம் கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

இந்நிலையில் ஆளும் பா.ஜ.கவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கனடா அரசு அதிகாரபூர்வமாக தடை செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுவரை கனடா அரசு அதிகாரபூர்வமாக ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கு தடை விதித்ததாக அறிவிக்கவில்லை.

அதேநேரத்தில் கனடாவைச் சேர்ந்த முஸ்லிம் கவுன்சில் ஒன்றுதான், பா.ஜ.கவின் தாய்அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அந்நாட்டில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. மேலும் கனடாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எவ்வாறான இந்துத்துவா செயற்பாடுகளில் ஈடுபடுகிறது என்பதையும் அந்தக் கவுன்சில் பட்டியல் போட்டு விபரித்துள்ளது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்திருந்த ஜஸ்டின் ட்ரூடோ, டெல்லி லலித் ஹோட்டலில் சாதாரண அறையிலேயே தங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர் தனது வெறுப்பை வெளிப்படுத்தவே இவ்வாறு நடந்து கொண்டதாக ஊடகங்கள் ஊகம் தெரிவித்திருந்தன.

இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் அமைப்பு காலிஸ்தான் ஆகும். 1984- ஆம் ஆண்டே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் இருந்து துடைத்தெறியப்பட்டு விட்டனர். ஆனால் காலிஸ்தான் சித்தாந்தம் இன்னமும் ஓயவில்லை. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என சீக்கியர்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில் மீண்டும் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை தீவிரவாதிகள் உயிர்ப்பித்து வருகின்றனர்.

குறிப்பாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே கனடாவில் ‘காலிஸ்தான் டைகர்’ படைப்பிரிவின் தலைவரும், சீக்கியத் தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அச்சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தமை இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT