Saturday, April 27, 2024
Home » சில அரசியல் குழுக்கள், தொழிற்சங்கங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் முயற்சியில்

சில அரசியல் குழுக்கள், தொழிற்சங்கங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் முயற்சியில்

– வளர்ந்து வரும் நாட்டை இனவாத நெருக்கடிக்குள் தள்ளிவிட வேண்டாம்

by Rizwan Segu Mohideen
September 23, 2023 12:46 pm 0 comment

– ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய

நாட்டிற்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

முப்பது வருட யுத்தம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவாக நாடு அரசியல் பொருளாதார ரீதியில் சரிவடைந்து கிடந்த நிலையில், தற்போது ஓரளவு முன்னேற்றம் கண்டு வரும்போது நாட்டுக்குள் மீண்டும் இனவாத மோதல்கள் அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய நிலையை அறிவிக்கும் நோக்கில் சிவில் அமைப்புக்கள் கொழும்பில் நேற்று (22) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்.

சில அரசியல் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகளில் தலையீடு செய்து வருகின்றனர்.

செனல் 4 விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ளும் சில தலையீடுகள் காணப்படுகின்றன. சில அரசியல் குழுக்கள் பல்வேறுபட்ட நிலைப்பாடுகளை முன்வைக்கின்றன. அது தொடர்பிலான சரியான விசாரணையை நடத்த அரசாங்கம் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது ஜனாதிபதியின் தலையீட்டின் கீழ் அது குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும். அதேபோல் ஆம் தரப்பும் தெரிவுக்குழுவொன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. அங்கு விருப்பமானவர்கள் சுதந்திரமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியும். இருப்பினும் அந்த தகவல்களை சமூகமயப்படுத்தும் போது கவனமாக செயற்பட வேண்டியது அவசியம் என்பதோடு அதுகுறித்த விசாரணைகள் அவசியமில்லை என்று எவரும் வலியுறுத்தவில்லை.

பாதுகாப்பு அமைச்சு அந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள போதும் எதிர்கட்சி போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாட்டில் பாரிய அழிவினை ஏற்படுத்தியது. அதனால் அதனை மேற்கொண்டவர்களை கண்டறிய வேண்டியது அவசியம். அதற்காக சர்வதேச ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதும் தவறாகாது.

சில குழுக்கள் நாட்டிற்குள் அரசியல் பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். குருந்தி விகாரை மற்றும் திலீபனின் நினைவுத் தின அனுட்டிப்பு உள்ளிட்ட விடயங்களில் அது தெரியவந்துள்ளது. அதனால் அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை படுகுழியில் தள்ளிவிட முற்படாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் என்பன கசப்பான அனுபவங்களையே தந்தது. நாடு பொருளாதார ரீதியில் சற்று தலையெடுக்க ஆரம்பித்துள்ள வேளையில் அதற்கு பாதகம் விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

சுகாதார துறைக்குள் சில தொழிற்சங்க செயற்பாடுகள் காணப்படுகின்றன. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளை வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். அதற்கமைய சம்பளம் அல்லது கொடுப்பனவுகளில் அதிகரிப்பை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

சில குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை செய்துவிட்டு அவர்களின் ஆர்ப்பாட்டங்களின் பலனாக சம்பள அதிகரிப்பு கிட்டியது என கூறிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். வங்குரோத்து நிலையிலிக்கும் நாட்டை சரிவுப் பாதைக்குள் தள்ளிவிடாமல் அனைவரும் ஒன்றுபட்டு முன்னேற்ற வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போதும் அதற்கு எதிராக மக்களை தூண்டிவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டடனர். ஆனால் மக்கள் வீதிகளில் இறங்காமல் அமைதியாக ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளித்தனர். அதனால் நாட்டின் நிலைமைகளை அறிந்துகொண்டு செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதியின் மக்கள் அலுவல்கள் பணிப்பாளருமான கீர்த்தி தென்னகோன்:

நாட்டில் வைத்தியர்களின் விடுமுறை தொடர்பில் போலியான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. அதனால் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முற்படுகின்றனர். நாட்டிலுள்ள 6000 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகின்ற போதும் நாட்டிலுள்ள வைத்தியசாலைகளிலும் பெருமளவான வைத்தியர்கள் சேவையில் உள்ளனர்.

ஐக்கிய சமூக சங்கத்தின் தலைவர் புலஸ்தி வன்னியராச்சி :

சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டமொன்று சமர்பிக்கப்படவுள்ளமையும், அதுகுறித்து ஜனாதிபதி தனது அமெரிக்க விஜயத்தின் போது மேடா நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து அறிவுறுத்தியமையும் வரவேற்புக்குரியது. நாளாந்த இணைய குற்றங்கள் தொடர்பிலான 14000 முறைபாடுகள் பதிவாகின்றன. 9000 முறைபாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகின்றன. எனவே இவ்வாறானதொரு சட்டம் மிகவும் அவசியமானது.

இந்த ஊடக சந்திப்பில் சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் துசித பெரேரா, லக்வனிதா அமைப்பின் சட்ட ஆலோசகர் கௌசலி சமரதுங்க, சிவில் சங்கம் மற்றும் தொழிற்சங்க அமைப்பின் உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT