Thursday, May 9, 2024
Home » தாதியின் கவனயீனத்தால் கையை இழந்த சிறுமி!

தாதியின் கவனயீனத்தால் கையை இழந்த சிறுமி!

by Rizwan Segu Mohideen
September 11, 2023 5:12 pm 0 comment

‘எங்களுடைய இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. வாழ்நாள் முழுவதும் இந்த வலியை நாங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். பலநாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட மகள் சற்று குணமாகி வருகையில் ஒரு சிறு தவறால் இன்று அவளின் எதிர்கால வாழ்க்கையே கேள்விகுறியாகிவிட்டது ‘

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த போது ஏற்பட்ட தவறால் கை அகற்றப்பட்ட 08 வயது சிறுமி வைஷாலினியின் பெற்றோரின் ஆதங்கம் இது…

பொருளாதார நெருக்கடி, மருந்துகள் இன்மை, சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தம், மருத்துவர்களின் வெளியேற்றம், இடப்பற்றாக்குறையென பெரும் நெருக்கடிகளை சுகாதாரத்துறை சந்தித்து வரும் இச்சந்தர்ப்பத்தில் இத்தகைய சம்பவங்கள் பெரும் வருத்தத்தையும் அச்சத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் யாழ். போதனா வைத்தியசாலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதாக இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை.

யாழ். போதனா வைத்தியசாலை, பல்வேறு பிரிவுகளுடன் வடமாகாண மக்களுக்கு பாரிய சேவைகளை முன்னெடுத்துவருகின்றது. ஏறத்தாழ 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இவ்வைத்தியசாலையில் சேவையை பெற்றுக்கொண்டுள்ளனர்.

யுத்தம், கொவிட்19 பெருந்தொற்று போன்ற நெருக்கடியான காலங்களில் உயிரை பணயம் வைத்து வைத்தியர்கள், தாதியர்கள் சேவையாற்றினர்.

இத்தகையதொரு பின்னணியிலேயே துரதிஷ்டவசமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 08 வயது சிறுமி வைசாலினியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். மல்லாகம் பிரதேசத்தைச் சேர்ந்த 08 வயதான வைஷாலினி குடும்பத்தில் மூத்தபிள்ளை. யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்விகற்கும் வைஷாலினி படிப்பிலும் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்குபவர். குறிப்பாக பரத நாட்டியத்தில் ஆர்வம் அதிகமாகவிருந்ததாக தெரியவருகின்றது.

வைஷாலினிக்கு கடந்த மாதம் ஆகஸ்ட் 22ஆம் திகதி திடீரென காய்ச்சல் ஏற்படவே பெற்றோர் அவரை வண்ணை மேற்கு பகுதியிலுள்ள வைத்தியரொருவரிடம் காட்டி மருந்து எடுத்துள்ளனர்.

எனினும் அவருக்கு காய்ச்சலின் தீவிரம் குறையாத காரணத்தால் அங்கிருந்த வைத்தியரின் ஆலோசனையின்படி மறுநாள் (24) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் குழந்தைநல நிபுணரிடம் பெற்றோர் வைஷாலினியை காட்டியதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வைஷாலினி அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு வலது கையில் மணிக்கட்டின் வெளிப்புறத்தில் Cannula (கானுலா) போடப்பட்டு அதன் ஊடாக நோயெதிர்ப்பு மருந்தும் ஏற்றப்பட்டுள்ளது.

கானுலா (Cannula) என்பது பொதுவாக உடலினுள் ஏதாவது ஒன்றை உட்செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறு உபகரணமாகும்.

வைஷாலினிக்கு அங்கு Cannula போடப்பட்டு மருந்து ஏற்றப்பட்ட போதும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. எனினும் வைஷாலினிக்கு ஏற்பட்டிருந்த பற்றீரியா நோய் தொற்று காரணமாக தோல் சிவத்தல், உடலில் பருக்கள் தோன்றுதல், சிறுவீக்கம் போன்ற நோய் அறிகுறிகளும் ஏற்பட்டமையால் குழந்தை நல வைத்தியரின் ஆலோசனைக்கமைய கூடுதல் பராமரிப்புக்காக கடந்த மாதம் 25ஆம் திகதி இரவு தனியார் வைத்தியசாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வைஷாலினி மாற்றப்பட்டார்.

இதனையடுத்து காய்ச்சல் ஒரளவு குணமடைந்து வருகையில் எதிர்பாராத விதமாக இடதுகையில் போடப்பட்ட கானுலாவினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த வைஷாலினிக்கு மணிக்கட்டுக்கு கீழே கையை இழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பில் தாய் தெரிவிக்கையில்,

‘ மகள் பற்றீரியா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். தோல் சிவத்தல், உடலில் பருக்கள் தோன்றுதல், சிறுவீக்கம் போன்ற பாதிப்புகளும் இருந்தன. இதனால் தான் கூடுதல் பாராமரிப்புக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 25ஆம் திகதி இரவு மாற்றப்பட்டார். மகளை பார்த்த குழந்தை நல வைத்தியரின் 12ஆம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்டார். அவளுக்கு அன்றிரவு தனியார் வைத்தியசாலையில் வலது கையில் போடப்பட்டிருந்த கானுலா வழியாகவே மருந்து ஏற்றப்பட்டது. இதன்போது எந்தபிரச்சினையும் ஏற்படவில்லை. மருந்துகள் ஏற்ற காய்ச்சலும் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனையடுத்து

26ஆம் திகதி சனிக்கிழமை காலை இடதுகையின் மணிக்கட்டின் உட்பகுதியில் Cannula பொருத்தப்பட்டது. அதன்பின்னர் Saline உடன் மருந்தும் ஏற்றப்பட்டது.

Cannula மூடியை திறந்து மருந்து ஏற்ற முயற்சித்த ஒவ்வொரு வேளையிலும் இரத்தம் பாய்ந்து நிலத்தில் சிதறியது. எனக்கு சந்தேகம் ஏற்படவே கடமையிலிருந்த வைத்தியரிடம் (HO) கூறிய போதும் அது வழமை என விளக்கம் அளிக்கப்பட்டது.

சனிக்கிழமை காலையிலிருந்து Saline இல் மருந்து கலக்கப்பட்டு இடது கையில் போடப்பட்ட Cannula வழியாக ஏற்றப்பட்டு வந்தது. இதன்பின்னர் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எமது மகள்உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இரவு 12.00 மணிக்குச் செலுத்தப்படவேண்டிய Clindamycin என்ற மருந்தை வார்ட்டிலிருந்த தாதி இரவு 11.45 க்கு Saline இன்றி ஊசி மூலம் Cannula இனுள் நேரடியாக செலுத்தினார். மருந்து நேரடியாக Cannula ஊடாக ஏற்றப்பட்டவுடன் உறங்கிக் கொண்டிருந்த மகள் எழுந்து வலியால் துடிக்கத் தொடங்கினார்.

இதனையடுத்து கடமையிலிருந்த தாதியிடம் இது குறித்து தெரிவித்தேன். அவர் மருந்தின் தன்மை அப்படித்தான் என்று கூறிவிட்டார். தொடர்ந்தும் மகள் வலியால் துடித்தாள். நான் மறுபடியும் தாதியிடம் சென்று அறிவித்ததையிட்டு முதலில் நான் கூறிய தாதியும் மருந்தை ஏற்றிய தாதியும் வந்து மகளைப் பார்வையிட்டனர். இரு தாதிகளும் இணைந்து தனியே Saline ஐ Cannula ஊடாக ஏற்ற முயற்சித்த போதும் ஏற்ற முடியவில்லை.

இதனையடுத்து 28 ஆம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் வைத்திய அதிகாரியும் தாதியர்களும் வந்து பார்த்தபின்னர் இடதுகையில் போடப்பட்ட Cannula அகற்றப்பட்டது.

7.30 மணியளவில் Ward Round வந்த பெண் வைத்திய அதிகாரி ஒருவர் பிள்ளையின் கை வீக்கத்தை பார்த்து விட்டு பிள்ளையின் கைக்கு ஈரத் துணியால் ஒத்தடம் கொடுத்தார்.

பின்னர் காலை 10.00 மணியளவில் குழந்தைநல வைத்திய நிபுணர் வந்து பார்த்த போது கை குளிர்ந்து நீலமாகியிருந்தது. இதனையடுத்து இன்னுமொரு வைத்தியரை வரவழைத்து வந்துகையை பரிசோதித்து பார்த்துவிட்டு கையில் நாடித்துடிப்பு இல்லை என்பதையும் இரத்த ஒட்டத்தில் ஒட்சிசன் இல்லை என்பதையும் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தியதுடன் மேலதிக பரிசோதனைக்கு பணித்தார்.

அதற்கமைய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் சத்திரசிகிச்சைக் கூடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இடது கையில் ஏற்பட்ட அதீத வலியைக் கட்டுப்படுத்துவதற்காக உணர்விழக்கச் செய்யும் ஊசி கையில் ஏற்றப்பட்டதாக கூறப்பட்டது.

அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் சத்திரசிகிச்சைக்காக மகள் கொண்டுசெல்லப்பட்டு கையில் அழுத்தத்தைக் குறைப்பதற்காக இழையத்தை வெட்டிச் செய்யப்படும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கையில் இரத்தக்கட்டி உருவாகி இரத்த ஓட்டம் தடைப்பட்டிருப்பதால் சத்திரசிகிச்சை செய்யப்படவிருப்பதாக கூறப்பட்டது. இரத்தக்கட்டியை கரைக்கும் Heparin எனப்படும் மருந்தும் தொடர்ச்சியாக ஏற்ற படவிருப்பதாக வைத்திய நிபுணரால் தெரியப்படுத்தப்பட்டது.

சத்திரசிகிச்சையின் பின்னர் எமது மகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அடுத்து வந்த இரு நாட்களும் மருந்து ஏற்றப்பட்டு வந்தது.

ஆயினும் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதோடு மகளின் கை பழைய நிலைக்குத் திரும்பவில்லை. மாறாக கையின் கறுப்பு நிறம் அதிகரித்துக் கொண்டு சென்றதோடு தொடர்ந்தும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்தே 01.09.2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிதீவிர சிகிச்சைப்பிரிவுக்கு வருகை தந்த பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் மேலதிக கிருமித்தொற்று நிலையையும் உயிராபத்தையும் தடுக்க எமது மகளின் இடது கை மணிக்கட்டுக்குக் கீழான பகுதி அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதன்பிரகாரம் அடுத்த நாளான செப்டெம்பர் 02ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் சத்திரசிகிச்சைக் கூடத்துக்கு எமது மகள் எடுத்துச் செல்லப்பட்டு இடது கை மணிக்கட்டின் கீழான பகுதி முற்றாக அகற்றப்பட்டது.

தாதியால் போடப்பட்ட Cannula சரியான முறையில் போடப்பட்டிருக்கவில்லை. மருந்து உரிய முறையில் உட்செலுத்தப்படவில்லை. Saline உடன் கலந்து ஏற்றப்படவேண்டிய மருந்து Cannula ஊடாக நேரடியாக உட்செலுத்தப்பட்டது. மருந்து அவ்வாறு நேரடியாக உட்செலுத்தப்பட்டதும் ஏற்பட்ட வலி மற்றும் தாக்கங்கள் குறித்து உடனடியாக தாதிக்கு அறிவித்த போதும் அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் கையின் நிலை குறித்து உடனடியாக கவனத்தில் எடுக்கப்படவில்லை. இதற்கு வைத்தியசாலை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.

இன்று எமது மகளின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.

வைத்தியசாலையில் தவறு நடந்துள்ளது என்பதை மகளை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்த போதும் இதுவரை எழுத்து மூலம் சரியான காரணத்தை அறிவிக்கவில்லை. பொலிஸார், வைத்தியசாலை நிர்வாகம் என விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

எனவே எனது பிள்ளைக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்கு நியாயம் கிடைக்கவேண்டும்.

விசாரணை முடிவில் கை அகற்றப்பட்டமைக்கான சரியான மருத்துவ காரணத்தையும் எழுத்து மூலம் அறியத்தர வேண்டுமென அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,

உண்மையில் சிறுமி வைஷாலினியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை மிகவும் வேதனையான விடயமாகும். வைத்தியசாலையில் தவறு நடந்துள்ளது. எனினும் இதில் நடந்த தவறு என்ன? என்பதை இப்போதைக்கு சரியாக கூறமுடியாது. விசாரணைகளை மேற்கொள்ள வைத்திய நிபுணர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடனே எதையும் உறுதியாக கூறமுடியும்.

தீவிர காய்ச்சல் நிலைமைகளின் போது கானுலா Cannula மூலம் மருந்து ஏற்றப்படுவது வழமை. அதற்கமையவே அப்பிரிவுக்கு பொறுப்பான வைத்தியரின் அனுமதியுடனே தாதியால் கானுலா போடப்பட்டு மருந்து ஏற்றப்பட்டது. எனவே முழுமையான விசாரணைகளின் பின்னரே சரியான காரணத்தை கூறமுடியும். கையை அகற்றாது நிலைமைகளை சரிசெய்ய வைத்தியர்கள் பெரிதும் முயற்சிசெய்தனர்.

பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் எதுவுமே பலனளிக்காத காரணத்தினால் தான் பெற்றோருக்கு நிலைமை விளக்கப்பட்டு அவர்களின் சம்மதத்துடன் மணிக்கட்டின் கீழான பகுதி அகற்றப்பட்டது. சிறுமி தற்சமயம் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் யாழ்ப்பாண வைத்தியசாலை மருத்துவ சங்க செயலாளர் வைத்தியர் மயூரன் தெரிவிக்கையில், சிறுமிக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாது. எனினும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றல்ல. யாழ். வைத்தியசாலை வரலாற்றில் இத்தகைய மூன்று சம்பவங்களே இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. எனக்கு தெரிந்து இது முதல் சம்பவம். குற்றம்சாட்டப்பட்டுள்ள தாதி மருத்துவ சேவையில் 15 வருடகால அனுபவம் வாய்ந்தவர். சிறுமி கடும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். உடலில் சற்று வீக்கமும் இருந்துள்ளது. எனவே நாளத்தில் போடப்படப்பட வேண்டிய கானுலா தவறுதலாக நாடியில் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிறுமிக்கு இருந்த நோய்நிலைமை காரணமாக அவருக்கு உடலினுள் செலுத்தப்பட்ட மருந்தும் அதிக வீரியம் கொண்டது. இதனாலேயே பாதிப்பு அதிகமானது. மருந்தின் வீரியமும் கையை பாதிப்படைய செய்துள்ளது. ஒருவேளை தவறுதலாக நாடியில் கானுலா செலுத்தப்பட்டு வேறு வீரியம் குறைந்த ஏதேனும் மருந்துகள் உடலில் செலுத்தப்பட்டிருந்தால் இத்தகைய பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

இதுதொடர்பில் மூவர் அடங்கிய குழுவொன்றினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னரே எதையும் உறுதியாக கூறமுடியும். சம்பவத்துடன் தொடர்புடைய தாதி தற்சமயம் வேறொரு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே இந்த ஒரு சம்பவத்ததை மட்டும் வைத்துகொண்டு ஒட்டுமொத்த வைத்தியத்துறை மீதும் சேறு பூசவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். அதற்கமைய வைத்தியசாலை பணிப்பாளர், மற்றும் சிறுமி சிகிச்சை பெற்ற வார்ட்டில் கடமையிலிருந்த 06 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கடந்த (07) யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர் சார்பில் சம்பவத்துடன் தொடர்புடைய தாதி வெளிநாடு தப்பி செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய தாதிக்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளதுடன் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும் சிறுமியின் இடது கை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜீ.விஜேசூரியவினால் கோரப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் விசாரணையின் முடிவில் சம்பவத்துக்கான சரியான மருத்துவ காரணத்தை எழுத்து மூலம் அறியத்தர வேண்டுமெனவும் எதிர்காலத்தில் இவ்வாறான மருத்துவ அலட்சியம், தவறுகளால் உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்படா வண்ணம் மருத்துவ துறைச்சார்ந்தோர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் வேண்டிநிற்கின்றனர்.

வசந்தா அருள்ரட்ணம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT