Sunday, April 28, 2024
Home » நோயாளர்களை பணயம் வைப்பது நியாயமாகாது!

நோயாளர்களை பணயம் வைப்பது நியாயமாகாது!

by mahesh
February 14, 2024 6:00 am 0 comment

அரசாங்க வைத்தியசாலைகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களில் ஒரு தொகுதயினர் நேற்று சுகவீன வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தனர். டொக்டர்கள், தாதியர் உள்ளிட்ட பல அரச சுகாதார உத்தியோகத்தர்கள் இவ்வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குபற்றவில்லை.

அரசாங்க சுகாதார சேவையில் செயற்படும் 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களே இச்சுகவீன தொழிற்சங்க நடவடிக்கையை நேற்றுக் காலையில் ஆரம்பித்தனர்.

இத்தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக அரச வைத்தியசாலைகளின் வழமையான சேவைகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. அப்பாவி நோயாளர்களுக்கு இப்பாதிப்புக்கள் தாக்கமாக அமைவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளும் அரசினால் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக அரசாங்க வைத்தியசாலைகளில் இராணுவத்தினர் விஷேட மனிதாபிமான சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆன போதிலும் வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளிலும் கிளினிக்குகள் உள்ளிட்ட ஏனைய சில சுகாதாரப் பிரிவுகளிலும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் அப்பாவி நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.

ஆனால் குறித்த 72 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று முன்னெடுத்த சுகவீன வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைக்கும் அப்பாவி நோயாளர்களுக்கும் நேரடியாக எவ்விதத் தொடர்புமே கிடையாது.

இந்நாட்டின் இலவச சுகாதார சேவையை சிறப்பாகவும் தரமான முறையிலும் முன்னெடுப்பதற்கும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படவும் இந்நாட்டு குடிமக்களின் வரிப்பணம்தான் பயன்படுத்தப்படுகின்றது. அப்படியிருந்தும் இந்நாட்டு சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை பெற்றுக் கொள்வதற்காக அப்பாவி நோயாளர்களை பணயக் கைதிகளாகக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகம். இது அண்மைக்கால வரலாறாக உள்ளது.

அந்த வகையில், இந்த 72 தொழிற்சங்கங்களும் அரசாங்க மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போன்று தங்களுக்கும் 35 ஆயிரம் ரூபா படி கொடுப்பனவு வழங்குமாறு கோரியே இத்தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கின்றன.

இக்கோரிக்கைக்காக இத்தொழிற்சங்கத்தினர் அரசாங்க சுகாதாரத் துறையில் மூன்றாவது தடவையாகவே நேற்று இத்தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டனர். இக்கோரிக்கை தொடர்பில் நிதியமைச்சு அதிகாரிகளுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமக்கு சாதகமான பதில் கிடைக்கப் பெறவில்லை என்ற காரணத்தை முன்வைத்தே இவர்கள் இத்தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

ஜனநாயக நாடொன்றில் குடிமக்கள் தொழிற்சங்க உரிமையைப் பெற்றவர்களாக உள்ளனர். ஆனால் அந்த உரிமையை மக்களுக்கோ நாட்டுக்கோ பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் பயன்படுத்த வேண்டும். அது தொழிற்சங்கங்களின் தார்மீகக் கடமை.

அதேநேரம் தொழிற்சங்க உரிமையின் அடிப்படையில் கோரிக்கையொன்றை முன்வைக்க முன்னர் அக்கோரிக்கையின் நியாயத்தன்மை, அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சாதக, பாதக நிலைமைகள் உள்ளிட்ட விடயங்களையும் தொழிற்சங்சங்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டதற்காக தங்களுக்கும் அதே கொடுப்பனவை வழங்குமாறு கோருவது எவ்விதத்திலும் நியாயப்படுத்தக் கூடியதல்ல. இத்தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கும் எந்தவொரு ஊழியரும் மருத்துவர்கள் ஆற்றும் பணியை ஆற்றக்கூடியவர்கள் அல்லர் என்பதையும் மறந்து விடலாகாது.

இவ்விதமான கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்னர் நாட்டின் பொருளாதார நிலைமையையும் கவனத்தில் கொள்வது அவசியம். 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாடு மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்துள்ள போதிலும், அந்நெருக்கடி காலத்தில் மக்கள் முகம்கொடுத்த அசௌகரியங்கள் இன்னும் முழுமையாக நீங்கியதாக இல்லை.

இவ்வாறான சூழலில் இவ்வளவு தொகை கொடுப்பனவு கோரிக்கையை முன்வைப்பதையும் அதனை அடிப்படையாகக் கொண்டு சுகாதார சேவையைப் பாதிக்கும் வகையில் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதையும் எவரும் நியாயமானதாக நோக்கவே மாட்டார்கள். அதிலும் குறிப்பாக சுகாதாரத் துறை உத்தியோகத்தர்கள் தங்கள் கோரிக்கைகளை அடைந்து கொள்வதற்காக அப்பாவி நோயாளர்களை பணயக் கைதிகளாகக் கொள்ளவே கூடாது. மாறாக தங்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முன்வைத்து அது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஊடாக அதற்காகன தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள தொழிற்சங்கங்கள் முயற்சி செய்ய வேண்டும். எந்தவொரு கோரிக்கைக்கும் பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. என்றாலும் முன்வைக்கப்படும் கோரிக்கை முழுமையாகக் கிடைக்கப்பெற்றிட வேண்டுமென எதிர்பார்ப்பது நியாயபூர்வமானதல்ல என்பதையும் மறந்து விடலாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT