Sunday, May 12, 2024
Home » சுகாதாரத்துறை பணி பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் பெரும் அசௌகரியம்

சுகாதாரத்துறை பணி பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் பெரும் அசௌகரியம்

1,200 முப்படை வீரர்கள் சேவையில் ஈடுபாடு

by mahesh
February 14, 2024 6:00 am 0 comment

சுகாதரத்துறை தொழிற்சங்கங்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதால், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்காக சுமார் 1200 முப்படை வீரர்களை கடமையில் ஈடுபடுத்தியதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையின் 72 தொழிற்சங்கங்கள் நேற்று சுகவீன விடுமுறையை அறிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

சுகாதார அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய படைவீரர்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள 48 வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கான செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கும் வகையில், 900 க்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர்களுடன் மேலும் விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களும் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டன. எனினும்,வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவுகள் வழமை போன்று இயங்கியதாகவும் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சுமுகமாக சேவையில் ஈடுபட்டு வந்ததாகவும் சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

அரசாங்கத்தினால் டாக்டர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே மேற்படி 72 சுகாதார தொழிற்சங்கங்களும் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

இதற்கு முன்னரும் அந்த தொழிற்சங்கங்கள் இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

அது தொடர்பில் நேற்று முன் தினம் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் சுகாதார தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தை எந்தவித இணக்கப்பாடும் இல்லாத நிலையில் முடிவுற்றது. இதையடுத்தே மீண்டும் சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று சுகவீன விடுமுறையை அறிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டன.

இதனால் நேற்றைய தினம் சிகிச்சைகளுக்காக ஆஸ்பத்திரிகளுக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரும் அசௌகரிகங்களை எதிர்நோக்க நேர்ந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT