Tuesday, March 19, 2024
Home » விவசாயத்துறை அபிவிருத்தி ஊடாக பொருளாதார முன்னேற்றம்

விவசாயத்துறை அபிவிருத்தி ஊடாக பொருளாதார முன்னேற்றம்

by sachintha
December 1, 2023 6:14 am 0 comment

இலங்கை உணவு உற்பத்தி விவசாயச் செய்கைக்கு அவசியமான சீதோஷண நிலையையும் இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்நாடு ஆரம்ப காலம் முதல் விவசாய நாடாக இருந்து வருகின்றது. இந்நாட்டின் நிலப்பகுதியில் 2.3 மில்லியன் ஹெக்டேயர் நிலம் பயிர்ச்செய்கை நிலமாக விளங்குகிறது. அவற்றில் 80 வீதமான நிலம் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை தவிர்ந்த அரிசி, சோளம், பழங்கள், மரக்கறி வகைகள் போன்ற உணவுப் பயிர்ச்செய்கைகளுக்கு பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில் நாட்டின் சனத்தொகையில் 27.1 வீதத்தினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஊடாக இந்நாட்டின் மொத்த தேசிய உற்பத்திற்கு 7.4 வீதப் பங்களிப்பை இந்நாட்டு விவசாயத்துறை அளித்து வருகின்றது.

கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் இந்நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. அந்நிய செலாவணி பற்றாக்குறை இந்நெருக்கடிக்கு முக்கிய பங்களிப்பை நல்கியது. அதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இடைநிறுத்தப்பட்டன. அவற்றில் விவசாயிகளுக்கு அவசியமான இரசாயனப் பசளையும் கிருமிநாசினிகளும் அடங்கும்.

இந்நிலையில் பயிர்ச்செய்கைக்கு இயற்கைப் பசளையை அன்றைய அரசாங்கம் ஊக்குவித்தது. அப்பசளைப் பயன்பாட்டை பெரும்பாலான விவசாயிகள் நிராகரித்த போதிலும் சில விவசாயிகள் அப்பசளையைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கை மேற்கொண்டனர். ஆனால் அப்பசளை உரிய பிரதிபலனை அளிக்கத் தவறியது.

இவ்வாறான நிலையில் இரசாயனப் பசளை வழங்குமாறு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அத்தோடு பாதிப்புகளுக்கு அவர்கள் நிவாரணமும் கோரினர். தமக்கான பசளையைத் தேடிக் கொள்ள முடியாத நிலையில்தான் அவர்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இருந்த போதிலும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் உரிய பதிலை அளிக்க முடியாத நிலைக்கு அன்றைய அரசாங்கம் தள்ளப்பட்டிருந்தது. அதன் விளைவாக அரசாங்கமே பதவி விலகும் நிலைக்கு ஏற்பட்டது. அத்தோடு அன்றைய ஜனாதிபதியும் கூட பதவி துறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்றதும் விவசாயிகளின் இரசாயனப் பசளைத் தேவையை நிறைவேற்றி வைப்பதற்கு முன்னுரிமை அளித்தார். அதற்கேற்ப இரசாயனப் பசளையை இறக்குமதி செய்யவும் அதனை விவசாயிகளுக்கு தாமதமின்றி கொண்டு சேர்க்கவும் ஏற்பாடுகளைச் செய்தார். அத்தோடு விவசாயத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்தார்.

இதன் பயனாக விவசாயிகள் ஆர்வத்துடனும் உற்சாகத்தடனும் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சூழல் மீண்டும் உருவானது. அதன் ஊடாக நாட்டில் ஏற்படவிருந்த உணவுப் பஞ்சம் தடுக்கப்பட்டது. ஜனாதிபதி பதவியேற்றதும் முன்னெடுத்த தூரநோக்குடனான வேலைத்திட்டத்தின் பிரதிபலனே இது.

இவ்வாறான சூழலில் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து மீட்சி பெறவென ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் நாம் அனைவரும் நன்கறிந்த விடயமான விவசாயத்துறையின் ஊடாக சவால்களை எதிர்கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும். விவசாயத்துறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் அனைத்தையும் முதலீடாகக் கருதி திட்டங்களை முன்னெடுப்போமாயின், நாட்டின் சகல பக்கங்களில் இருந்தும் பொருளாதாரத்துக்கு ஒத்துழைப்புக் கிடைக்கப்பெறும். வெளிநாட்டுச் சந்தையை இலக்காகக் கொண்டு எமது உணவு உற்பத்தியை அதிகரித்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முகங்கொடுப்பது கடினமானதாக இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சரின் இக்கூற்று யதார்த்தபூர்வமானதும், நியாயபூர்வமானதும் ஆகும். பொருளாதாரத் துறையைச் சேர்ந்த பலரது கருத்தும் அதுதான்.

இந்நாட்டினர் நன்கறிந்த விடயங்களில் விவசாயத்துறை முன்னணி வகிக்கிறது. அத்துறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்துத் திட்டங்களையும் முதலீடாகக் கருதிச் செயற்பட்டால் பொருளாதார சவால்களை நிச்சயம் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக உணவு உற்பத்தியை வெளிநாட்டு சந்தையை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கும் போது பொருளாதார சவால்களை எதிர்கொள்வது கடினமாகவே இருக்கப் போவதில்லை.

ஆகவே நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து உணவு உற்பத்தி விவசாயத்துறையைப் பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும். அதன் ஊடாக நாடும் மக்களும் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்து கையாளக்கூடியதாக இருக்கும் என உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT