சகல சு.க அமைப்பாளருக்கும் தலா ரூ 100மில். நிதி ஒதுக்கீடு | தினகரன்

சகல சு.க அமைப்பாளருக்கும் தலா ரூ 100மில். நிதி ஒதுக்கீடு

கிராம எழுச்சிக்கு வித்திட நடவடிக்கை

பேருவளை விசேட நிருபர்

கிராம மக்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்து கிராமங்களை எழுச்சி பெறச் செய்யும் நோக்குடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 மில்லின் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள 168 தொகுதிகளின் அமைப்பாளர்களுக்கு இந்த நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளதோடு அப்பணத்தின் மூலம் பாரிய அபிவிருத்தி பணிகளை செவ்வனே முன்னெடுக்க அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

பேருவளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய அமைப்பின் விஷேட கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேருவளை மரக்கலாவத்த ஸாரா மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைப்பாளர் எம்.எம்.எம் அம்ஜாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கூறியதாவது:

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ எமக்கு எந்த விதத்திலும் சவாலாக இருக்காது. ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு போட்டியிட முடியாது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் மொட்டு கட்சிக்குள் பாரிய தீ பரவ ஆரம்பித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ வேண்டும் என்று ஒரு கூட்டமும் கோட்டாபய ராஜபக்ஷ வேண்டும் என்று மற்றொரு கூட்டமும் சண்டை பிடிக்க ஆரம்பித்துள்ளது. பஸில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ வேண்டும் என்று ஒரு கூட்டம் கூறுகிறது. சிரன்தி ராஜபக்ஷவும் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் என்று ஒரு குழு சொல்லுகிறது. இந்த மொட்டு கட்சி குழுவினருக்கு மஹிந்த ராஜபக்ஷ என்ற உலகமே உள்ளது. அந்த உலகு இல்லாமல் அவர்களால் ஏன் அரசியல் செய்ய முடியாது. ராஜபக்ஷ யுகம் இந்நாட்டில் மீண்டும் மலருமானால் நாட்டின் எதிர் காலம் இருள் சூழ்ந்ததாகவே அமையும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நான் 6 தடவைகள் அமைச்சரவையில் பதவி வகித்துள்ளேன். இதில் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் இருந்த போது மிகவும் வெறுப்புடனே இருந்தேன். அமைச்சரவைக்கு ஏதும் யோசனைகள் முன்வைக்கப்பட்டால் முதலில் ராஜபக்ஷ குடும்ப அமைச்சரவை இரகசியமாக கூடி ஆராய்ந்து இதனை அனுமதிப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பார்கள். மறுநாள் அமைச்சரவையில் அதன் பிரதிபலன் எமக்கு தெரியவரும் ஒரு கீழ் தரமான அரசியல் கலாசாரம் இருந்ததை மறக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி நாட்டில் தலைவிரித்தாடியது. அவர்கள் நினைத்ததை செய்வதை சகித்துக் கொள்ள முடியாத பல பலர் அந்த ஆட்சியில் இருந்து வெளியேறினர். எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதன் காரணமாகவே வெளியேறினார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம் பெற்ற அளுத்கமை சம்பவம் மூலம் முழு நாட்டினரும் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டது. இந்த சம்பவத்தை முழு உலகமும் கண்டித்தது. பல்லினசமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் ஜனாதிபதி இவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அவர் அப்போது சிந்திக்கவில்லை. பல மொழிகளை, பல சமயங்களை, பல கலாசாரங்களை பின்பற்றும் மக்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவில்லை. அன்று இதைப்பற்றி நாம் எடுத்துக்கூறியும் கூட அவற்றை செவி சாய்க்கவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். பிளவு பட்டிருந்த நாட்டை ஒன்று படுத்தினார். அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தினார் இதை நாம் மறுக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் நான் இரட்டை வேடம் இன்றி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காகவே கடைசி வரை பாடுபட்டேன். மக்கள் தேர்தல் மூலம் அவரை நிராகரித்துவிட்டனர்.

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்திருந்தால் இன்று ஈரானுக்கு ஏற்பட்டுள்ளதைப் போல் இலங்கைக்கும் பொருளாதாரத் தடை வந்திருக்கும் இதை புரிந்து கொண்ட அவர் இரு வருடங்கள் தொடர்ந்து பதவியிலிருக்க சந்தர்ப்பம் இருந்தும் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தினார். இதன் மூலம் அவர் தோல்வியைத் தழுவினார்.

 


Add new comment

Or log in with...