Sunday, April 28, 2024
Home » மண்சரிவு அனர்த்தத்தில் அதிக விழிப்புணர்வு தேவை!

மண்சரிவு அனர்த்தத்தில் அதிக விழிப்புணர்வு தேவை!

by sachintha
November 24, 2023 6:00 am 0 comment

மலையகத்தில் கடந்த சில வாரங்களாக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. அதன் விளைவாக மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், பாரிய பாராங்கற்கள் உருண்டு விழுதல் போன்றவாறான சம்பவங்கள் அடிக்கடி பதிவாகும் நிலைமை உருவாகியுள்ளது. அதன் காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டு வருவதோடு வீதிப் போக்குவரத்து தடங்கல்களும் அவ்வப்போது ஏற்படக்கூடியனவாக உள்ளன.

அந்த வகையில் கடந்த வார முற்பகுதியில் பலாங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை உட்பட இரு பிள்ளைகளும் அடங்கலாக நால்வர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். இச்சம்பவம் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அச்சோகத்தின் தாக்கம் மக்கள் மத்தியில் இருந்து மறைவதற்குள் பேராதனை பஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த திங்களன்று ஏற்பட்ட மண்சரிவினால் அங்கிருந்த நான்கு கடைகள் மண்ணில் புதையுண்டன. அவற்றிலொரு கடையில் உறங்கிக் கொண்டிருநத 68 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பதுளை – கொழும்பு பிரதான வீதியில் பம்பஹின்ன என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் அவ்வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் வெலிமடை – நுவரெலியா வீதியின் பெலும்கல பிரதேசத்தில் உள்ள கடையொன்றின் மீது பாரிய கல்லொன்று உருண்டு விழுந்ததில் அக்கடை முற்றாக சேதமடைந்துள்ளது. இதேபோன்று பதுளை, இரத்தினபுரி மாவட்டங்கள் அடங்கலாக வெவ்வேறு பிரதேசங்களிலும் மண்சரிவுகள் பதிவாகக் கூடியனவாக உள்ளன.

தற்போதய சூழலில் மலையகத்திலும் மலை சார்ந்த பிரதேசங்களிலும் நிலவிவரும் ம​ழையுடன் கூடிய காலநிலையினால் மண்சரிவு அச்சுறுத்தலில் அதிகரிப்பு அவதானிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதனால் அனர்த்த முகாமைத்துவ நிலையம், ‘மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வாழும் மக்களை விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதோடு அதிக அச்சுறுத்தல் நிலவும் பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் நடவடிக்கைகளை அவ்வப்போது முன்னெடுக்கிறது.

குறிப்பாக மழைக் காலநிலை நிலவும் போது மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் வாழும் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு செயற்படுவது அவசியம். ஏனெனில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள் மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. மலையகத்தில் நிலத்தை ஒழுங்கு முறையாகப் பயன்படுத்தத் தவறியதன் விளைவாகவே மண்சரிவு அச்சுறுத்தல் அதிகரித்திருக்கிறது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது விவசாய நடவடிக்கைகள், கட்டிட நிர்மாணம், வீதியமைப்பு என பல்வேறு தேவைகளின் நிமித்தம் நிலம் பயன்படுத்தப்படும் போது அவை உரிய ஒழுங்கில் மலையகப் பிரதேசங்களில் பயன்படுத்தப்படாதுள்ளன. அதன் விளைவாக இழகிக் காணப்படும் மலையகப் பிரதேச நிலத்தில் மழைக்காலத்தில் மழைநீர் உட்சென்று மண்சரிவுக்கு வித்திடுகின்றன.

அதனால்தான் கட்டிட நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் நிலத்தைப் பயன்படுத்தும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு மலையகப் பிரதேச மக்கள் கேட்கப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் அந்த அறிவுறுத்தல்கள் ஒழுங்குமுறையாகக் கடைபிடிக்காத நிலமையும் காணப்படவே செய்கிறது.

ஆனாலும் எந்தவொரு பிரதேசத்திலும் மண்சரிவு ஏற்பட முன்னர் சில முன்னறிகுறிகள் வெளிப்படவே செய்யும். குறிப்பாக பிரதேசத்தின் நிலத்தின் தரையிலும் கட்டிடங்களிலும் சுவர்களிலும் திடீரென வெடிப்புக்கள் ஏற்படும். புதிய நீரூற்றுக்கள் உருவாகும், அந்த நீரூற்றுகளில் சேற்று நீர் வெளியாகும், ஏற்கனவே காணப்படும் நீரூற்றுகள் காணாமல் போகும், மின்கம்பங்கள், தொலைபேசிக் கம்பங்கள், உயரமான மரங்கள் என்பன திடீரென சரிவடையும்.

மழையுடன் கூடிய காலநிலை நிலவும் சூழலில் இவ்வாறான அறிகுறிகள் வெளிப்படுமாயின் தாமதியாது அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். அதன் பின்னர் குறித்த பிரதேசத்தில் அவதானித்த அறிகுறிகள் குறித்து கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்க வேண்டும். அப்போது பிரதேச செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.

இவ்வாறான அறிகுறிகள் குறித்து விரைந்து செயற்படுவதன் ஊடாக மண்சரிவினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் சேதங்களையும் குறைத்து தவிர்த்துக்கொள்ள முடியும். மண்சரிவு குறித்து மக்கள் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயற்பட்டால் பெரும்பாலான தாக்கங்களையும் பாதிப்புக்களையும் தவிர்த்துக் கொள்ளலாம். அதுவே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளின் கருத்தாகும். தற்போதைய சூழலில் மண்சரிவு அச்சுறுத்தல் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவதே மக்களின் பொறுப்பும் ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT