எல்லையில் உள்ள ரொஹிங்கியரை வெளியேறும்படி மியன்மார் உத்தரவு | தினகரன்

எல்லையில் உள்ள ரொஹிங்கியரை வெளியேறும்படி மியன்மார் உத்தரவு

பங்களாதேஷ் எல்லையில் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் ரொஹிங்கிய அகதிகள் நாடு திரும்பும் அரசின் சலுகையை ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் மின்மார் அமைச்சர் ஒருவர் அவர்கள் அங்கேயே தங்கியிருப்பது சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

மியன்மாரின் உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் ஆங் சோ, கடந்த வெள்ளிக்கிழமை முள் வேலி ஊடாக அகதிகளுடன் பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் பரவியது.

முஸ்லிம் சிறுபான்மையினர் மீது கடந்த ஆண்டு இறுதியில் மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கையை அடுத்து சுமார் 700,000 ரொஹிங்கியர்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றனர். இதனை ஒரு இன அழிப்பு நடவடிக்கை என்று ஐக்கிய நாடுகள் வர்ணித்தபோதும் இந்த அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்ப இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது.

தமக்கு பிரஜா உரிமை அளித்து பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படும் வரை தாம் மியன்மாருக்கு திரும்பப் போவதில்லை என்று பெரும்பாலான ரொஹிங்கிய அகதிகள் வலியுறுத்துகின்றனர். இதில் பங்களாதேஷ் மற்றும் மியன்மார் எல்லைக்கு இடைப்பட்ட ஆளில்லா நிலப்பகுதியில் சுமார் 6000 அகதிகள் தொடர்ந்து தங்கி வருகின்றனர். இவர்களை அங்கிருந்து வெளியேறும்படியே அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இவர்கள் தங்கி இருப்பது மியன்மார் சட்டத்திற்கு உட்பட்ட பகுதி என்று குறிப்பிட்டிருக்கும் அந்த அமைச்சர், அதற்கான விளைவுகளை சந்திக்கும் முன்னர் அங்கிருந்த வெளியேறும்படி எச்சரித்துள்ளார்.

இந்த ஆளில்லா பகுதிக்கு மியன்மார் அமைச்சர் வந்ததை அங்கிருக்கும் பங்களாதேஷ் பாதுகாப்பு படையினரும் உறுதி செய்துள்ளனர். “மியன்மார் நிலத்தில் இருந்து வெளியேறும்படியும் அல்லது பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் அகதிகளுக்கு அவர் தொடர்ந்து கூறினார்” என்று முஹமது ரஷித் என்ற பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தற்காலிக முகாமின் முள் வேலிக்கு அருகில் முகாமிட்டிருக்கும் மியன்மார் படையினர் தம்மை பயமுறுத்த அடிக்க வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதாக அங்கிருக்கும் அகதிகள் குறிப்பிட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...