Wednesday, May 1, 2024
Home » ஸ்ரீ இராம நவமி தினம் அனுஷ்டிப்பு: அயோத்தி இராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்

ஸ்ரீ இராம நவமி தினம் அனுஷ்டிப்பு: அயோத்தி இராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்

- தொழில்நுட்பம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம்

by Prashahini
April 18, 2024 1:31 pm 0 comment

அயோத்தி இராமர் கோவிலில் நேற்று (17) ஸ்ரீ ராம நவமி தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமரின் நெற்றியில் திலகமிட்டது போல் சூரியக் கதிர் விழவைக்கப்பட்டது. இது பக்தர்களை பரவசப்படுத்தியது.

இந்தியாவின் உத்தரபிரதேசம், அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9 ஆவது நாளான நேற்று (17) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

இன்று பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால இராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் நிகழ்வு நடைபெற்றது.

சூரிய கதிர்கள் இராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 3 முதல் மூன்றரை நிமிடங்கள் நிகழ்வு நீடித்தது. சூரிய திலகத்தின் நீளம் சுமார் 58 மி.மீ வரை இருந்தது. இந்த நிகழ்வு அயோத்தியின் 100 இடங்களில் பெரிய LED திரையில் திரையிடப்பட்டன.

கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களின் உதவியுடன் இந்த சூரிய திலகம் விழுவது சாத்தியப்படுத்தப்பட்டது.

இந்திய வான் இயற்பியல் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, ரூர்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் விஞ்ஞானிகள் இந்தப் பொறியியல் முறையை உருவாக்கி உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் இராம நவமி அன்று சூரிய கதிர்கள் ராமரின் நெற்றியில் விழும்படியாக Optomechanical அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும், சூரியனின் கோணங்களுக்கு ஏற்ப கண்ணாடி மற்றும் லென்ஸில் சிறிய மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

இதனிடையே, அயோத்தியில் இராமர் நெற்றியில் சூரிய ஒளி விழுந்த நிகழ்வை விமானப் பயணத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது Tab-இல் பார்த்து வழிபட்டுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அயோத்தி பாலராமர் சிலை மீது சூரிய ஒளி விழுவது எப்படி? – தொழில்நுட்பம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம்

ஆண்டுதோறும் ராமநவமி தினத்தில் அயோத்தி இராமர் கோயில் பாலராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் வண்ணம் கோயில் கட்டப்பட்டுள்ளது.

அதிநவீன அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, 5.8 சென்றிமீட்டர் சூரிய ஒளிக்கற்றை பாலராமர் சிலையின் நெற்றியில் விழும் வண்ணம் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை அடைய, கோயிலில் ஒரு சிறப்பு கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 விஞ்ஞானிகள் அடங்கிய குழு கோயிலில் பார்வையிட்டு அந்தக் கருவியை வடிவமைத்தனர்.

நேற்று பகல் 12.16 மணிக்கு இந்த சூரிய ஒளி விழும் நிகழ்வானது 3 முதல் மூன்றரை நிமிடங்கள் வரை நீடித்தது. சூரிய ஒளியானது சிலையின் நெற்றியில் சரியாக விழுகிறதா என்பதைக் கண்காணிக்க விஞ்ஞானிகள் குழு கோயிலில் குழுமியிருந்தனர்.

கண்ணாடிகள், லென்ஸ்களின் உதவியுடன் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சூரிய திலக் பொறியியல் முறை என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரூர்க்கியைச் சேர்ந்த மத்திய கட்டடவியல் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டை (சிபிஆர்ஐ) சேர்ந்த விஞ்ஞானியும், இயக்குநருமான குமார் ராமசர்லா கூறியதாவது:

இந்தக் கருவி ஆப்டோ-மெக்கானிக்கல் வகையைச் சார்ந்தது. இந்த ஆப்டோ-மெக்கானிக்கல் அமைப்பானது 4 கண்ணாடிகள் மற்றும் நான்கு லென்ஸ்களைக் கொண்டது. திருப்பும் வகையிலும், சாய்வு முறையிலும் இந்த கருவி அமைந்துள்ளது.

மேலும் இந்தக் கண்ணாடிகள், லென்ஸ்கள் குழாய் அமைப்புகளுக்குள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கருவியானது கோயிலின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டு சூரிய ஒளியைப் பெற்று கண்ணாடி, லென்ஸ்கள் மூலம் கீழ்தளத்தின் கர்ப்பக்கிரகத்திலுள்ள பாலராமர் சிலையின் நெற்றியில் விழுமாறு திருப்பி அனுப்பப்படுகிறது.

மேல் தளத்தில் உள்ள கருவியின் மேல்பகுதியானது சூரிய ஒளியின் வெப்பம், அலையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான வெப்பத்தைக் குறைத்து சிலையின் நெற்றியில் விழும்படி இந்தக் கருவி செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூர்க்கியின் சிபிஆர்ஐ, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் (IIAP) ஆகிய அமைப்புகளின் விஞ்ஞானிகள் இணைந்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளனர். பெங்களூரு IIAP விஞ்ஞானிகள், இதற்காக சிறப்பு கியர் பெட்டியை உருவாக்கி கண்ணாடி, லென்ஸ்கள் சுழல்வதற்காகவும், சாய்வதற்காகவும் வழிமுறையைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT