Tuesday, April 30, 2024
Home » பொருளாதார மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்

பொருளாதார மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்

by sachintha
April 9, 2024 6:00 am 0 comment

நாடு பிரதான தேர்தல்களை எதிர்நோக்கியுள்ளது. இவ்வருடம் பிரதான தேர்தல்கள் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அதற்கேற்ப நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை இலக்காக வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன, காய்களை நகர்த்துகின்றன. கட்சித் தாவல்களும் அணிதிரட்டல்களும் இடம்பெற்று வருகின்றன. தமது கட்சி பலமானது என்பதைக் காட்டிக் கொள்வதில் ஒவ்வொரு கட்சியும் சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளது.

ஆனால் கடந்த காலத்தைப் போன்ற ஒரு காலகட்டத்தில் தற்போது நாடு இல்லை. சுதந்திரம் பெற்ற பின்னர் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்த இந்நாடு, மிக முக்கியமான கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.

2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட இப்பொருளாதார நெருக்கடி, நாட்டின் தலைமையையும் ஆட்சியையும் கூட மாற்றியமைக்க வித்திட்டது. அத்தோடு இந்நெருக்கடிக்கு முன்பாக நாட்டின் தலைமையைப் பொறுப்பெடுக்க எவரும் முன்வராத நிலையும் கூட தோற்றம் பெற்றிருந்தது. அவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு முன்பாக மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி, நாட்டைப் பொருளாதார ரீதியில் மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை விரிவான அடிப்படையில் முன்னெடுக்கத் தொடங்கினார். அந்த வேலைத்திட்டங்கள் கட்சி அரசியல் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தவையானவை அல்ல. நாட்டின் நலன்களே அவ்வேலைத்திட்டங்களின் இலக்காக அமைந்திருக்கின்றது.

இதன் பயனாக அந்த வேலைத்திட்டங்கள் குறுகிய காலம் முதல் நாட்டுக்கும் மக்களுக்கும் பலனளிக்கத் தொடங்கின. அதனால் பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் நாடும் மக்களும் எதிர்கொண்ட நெருக்கடிகளும் பாதிப்புக்களும் கட்டம் கட்டமாக நீங்கலாயின.

இந்தப் பின்புலத்தில் பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் உருவாகின. அதற்கேற்ப இப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களில் இருந்து முழுமையாக மீட்சி பெறுவதை இலக்காகக் கொண்டு பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் தான் இந்நாடு பிரதான தேர்தல்களை எதிர்நோக்கியுள்ளன. என்றாலும் இச்சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் தங்கள் நலன்களை முன்னிலைப்படுத்தி இத்தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவ்வாறு கட்சி நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்கான காலமல்ல இது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இந்நாடு தற்போது நம்பிக்கை தரும் வகையில் மீட்சி பெற்று முன்னேற்றப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பொருளாதார நெருக்கடியினால் அதலபாதாளத்தில் விழுந்திருந்த நாட்டை மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி மீளக்கட்டியெழுப்ப முன்வராத சில அரசியல் கட்சிகள், தம் கட்சியின் தேவைக்கு ஏற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்க முயற்சிக்கக் கூடாது. அதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.

இவ்வாறான சூழலில் அநுராதபுரம் மாவட்ட சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘நாட்டின் தேவைக்கு ஏற்ப கட்சி அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். கட்சியமைப்பின் விருப்பப்படி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அவ்வாறு செய்யப் போனதால்தான் கடந்த காலங்களில் பல சவால்களை நாடு எதிர்கொள்ளும் நிலைக்கு உள்ளானது. பாரம்பரிய அரசியலின் காரணமாகவே இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் கட்சிகளைப் பற்றிச் சிந்திக்காமல் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலமிது’ என்று வலியுறுத்தியுள்ளார்.

அதுதான் உண்மை. பிரதான தேர்தல்களை எதிர்கொண்டுள்ள போதிலும் நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவது குறித்தே கட்சிகள் சிந்திக்க வேண்டும். அதற்கு ஏற்பவே கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

நாடு பொருளாதார ரீதியில் சிறப்பாக இருக்கும் போதுதான் மக்கள் சுபீட்சமான வாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள். அதுவே கட்சி அரசியல் செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்கும். இதைவிடுத்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்றுள்ள போதிலும் அந்நெருக்கடியின் தாக்கங்கள் காணப்படும் போது பிரிந்து நின்று கட்சி அரசியலை முன்னெடுப்பதால் நாட்டுக்கோ மக்களுக்கோ நன்மை ஏற்பட்டுவிடாது. அது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிப்பதாகக் கூட அமைந்து விடலாம்.

ஆகவே நாட்டின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்களாக செயற்பட வேண்டியது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT