Monday, April 29, 2024
Home » நாட்டில் இதுவரை ஏற்பட்டுள்ள நம்பிக்கை தரும் முன்னேற்றங்கள்

நாட்டில் இதுவரை ஏற்பட்டுள்ள நம்பிக்கை தரும் முன்னேற்றங்கள்

by damith
April 8, 2024 6:00 am 0 comment

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதை இலக்காகக் கொண்டு இலங்கை ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றது முதல் தொடங்கப்பட்ட இப்பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களின் பயனாக நாட்டில் புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் உருவாகியுள்ளன.

இப்பொருளாதார வேலைத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் பயனாக 2022 ஆம் ஆரம்பப் பகுதியில் நாடும் மக்களும் முகம்கொடுத்த நெருக்கடிகளும் அசௌகரியங்களும் பெரும்பாலும் நீங்கியுள்ளன. இந்தப் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களின் பயனாக நாட்டின் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. வெளிநாட்டு நாணயக் கையிருப்பிலும் கூட குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதேநேரம் தற்போதைய பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களின் பயனாக நாடு அடைந்து கொள்ளும் பிரதிபலன்கள் மக்களுக்கு கிடைக்கப்பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களில் இருந்து முழுமையாக மீட்சி பெறுவதை அனைத்து வேலைத்திட்டங்களும் இலக்காகக் கொண்டுள்ளன.

அந்த வகையில் கடந்த பெப்ரவரியில் 4.52 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு, தற்போது 4.95 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ‘அண்மைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்​ேபாது பெறுபேறாக நிலைமாற்றமடைய ஆரம்பித்துள்ளது. அதன் வெளிப்பாடே இந்த வெளிநாட்டு கையிருப்பின் அதிகரிப்பு’ என்றுள்ளார்.

ஆனால் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2022 இன் ஆரம்பப்பகுதியில் பெரிதும் வீழ்ச்சியடைந்தது. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையுடன் ஆரம்பமான இப்பொருளாதார நெருக்கடியின் விளைவாக சொற்ப காலத்தில் வெளிநாடுகளின் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு உள்ளாகி இருப்பதாக இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அந்த சூழலில் நாட்டின் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் உச்சநிலையை அடைந்திருந்தன.

ஆனால் 2022 ஆம் ஆண்டின் ஜுலைப் பிற்பகுதியில் நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார ரீதியில் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். அந்த வேலைத்திட்டங்களின் பிரதிபலனாக பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் காணப்பட்ட நெருக்கடிகளும் பாதிப்புக்களும் பெரும்பாலும் நீங்கியுள்ளன.

பல துறைகளிலும் வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன. அதில் ஒரங்கமாகவே வெளிநாட்டு கையிருப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் விளங்குகிறது.

தற்போது இலங்கை அடைந்து வரும் பொருளாதார முன்னேற்றங்களின் பின்புலத்தில், பிரித்தானியா தமது பிரஜைகளுக்காக வெளியிட்டிருந்த இலங்கைக்கான பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது. அதற்கேற்ப அவசரகால மருத்துவ சேவைகள், நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது பாதுகாப்புத் ​தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை, சுகாதார வசதிகளுக்காக அணுகல் ஆகிய பகுதிகளில் முந்திய தகவல்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி உணவு, எரிபொருள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு குறித்த முந்திய ஆலோசனையில் இருந்த தகவல்கள் இந்த புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அத்தோடு மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை போன்ற சுகாதார சேவைகளில் உள்ள சவால்களும் நீக்கப்பட்டு இருக்கின்றன.

இதேவேளை ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 27 ஆம் திகதி வரை 53 ஆயிரத்து 928 பிரித்தானிய உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் இலங்கைக்கு வருகை தந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம்படி பதிவான போதிலும், அது 2024 ஜனவரி முதல் மாதா மாதம் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டதாகப் பதிவாகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இவை யாவும் இலங்கை முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்புக்களின் பிரதிபலன்களே அன்றி வேறில்லை.

நாடு அடைந்துவரும் பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே நாட்டை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வழிவகுக்கும். அத்தோடு நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படவும் மக்களுக்கு வளமான பொருளாதார வாழ்வு கிடைக்கப்பெற்றிடவும் பொருளாதார ரீதியிலான முன்னேற்றங்கள் இன்றியமையாததாகும். அதனால் தற்போதைய பொருளாதார மறுசீரமைப்புக்கள் பெற்றுக்கொடுத்துள்ள முன்னேற்றங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே அனைத்து மக்களதும் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT