Friday, May 10, 2024
Home » பாடசாலை மாணவன் மீது ஆசிரியை தாக்குதல்

பாடசாலை மாணவன் மீது ஆசிரியை தாக்குதல்

- மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைகள்

by Prashahini
April 5, 2024 2:51 pm 0 comment

– அ, ஆ தெரியாததாலேயே அடித்ததாக ஆசிரியை தெரிவிப்பு

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் நேற்று முன்தினம் (03) பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற பின், சிறுவனின் முகத்திலும் ,தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதையடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் சிறுவனை நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததுடன், சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனின் நெற்றியில் காயமும், தலை மற்றும் கண் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி ஆசிரியையிடம் கேட்டபோது ,உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும், அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது எனவும் குறித்த ஆசிரியர் பெற்றோருக்கும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் எவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதியாத போதிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினர், சொந்த பிரேரணை மூலம் இவ் விடயத்தினை கவனத்தில் கொண்டு வந்தமையுடன் நேற்றையதினம் (04) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு நேரடி களவிஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவனிடம் வாக்குழூலத்தினை பெற்றுக்கொண்டு தொடர்ச்சியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT