Monday, May 20, 2024
Home » காசா உயிரிழப்பு 33,000 ஐ தாண்டியது

காசா உயிரிழப்பு 33,000 ஐ தாண்டியது

by Gayan Abeykoon
April 5, 2024 2:37 pm 0 comment

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியிருக்கும் நிலையில், போர் நிறுத்த முயற்சிகளும் ஸ்தம்பித்துள்ளன.

காசாவில் போர் வெடித்து ஆறு மாதங்களை எட்டும் நிலையில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டு மேலும் 91 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 33,037 அதிகரித்திருப்பதாக காசா மருத்துவ வட்டாரம் நேற்று (04) தெரிவித்தது. தவிர, குறைந்தது 75,668 பேர் காயமடைந்துள்ளனர்.

எனினும் இஸ்ரேலிய இராணுவம் வாபஸ் பெறுவது உட்பட காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான தமது நிபந்தனையில் உறுதியாக இருப்பதாக ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே கடந்த புதனன்று (03) வலியுறுத்தி இருந்தார்.

போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் புதிய முயற்சியாக இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த வார ஆரம்பத்தில் எகிப்துக்கு விஜயம் மேற்கொண்டபோதும், உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என்று இந்த பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய பலஸ்தீனர் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘நிரந்தர போர் நிறுத்தம், காசா பகுதியை விட்டு எதிரிகள் விரிவாக மற்றும் முழுமையாக வாபஸ் பெறுதல், இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தமது வீடுகளுக்கு திரும்புவது, காசாவில் உள்ள எமது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அனுமதிப்பது, காசாவை கட்டியெழுப்புவது, முற்றுகையை நீக்குவது மற்றும் கௌரவமான கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை எட்டுவது ஆகிய எமது நிபந்தனைகளில் நாம் உறுதியாக உள்ளோம்’ என்று அல் குத்ஸ் தினத்தை ஒட்டி நடத்திய தொலைக்காட்சி உரையில் ஹனியே தெரிவித்துள்ளார்.

இதில் காசாவில் பலஸ்தீன போராளிகளின் பிடியில் தொடர்ந்து இருக்கும் பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகள் இடையிலான கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்று தொடர்பிலேயே அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

எனினும் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கே ஆர்வம் காட்டுவாக இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கை ஒன்றின் அங்கமாகவே பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் கூறுகிறது.

இந்த இழுபறிக்கு மத்தியில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான 1.5 மில்லியனுக்கு மேற்கட்ட பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா மீது படை நடவடிக்கை ஒன்றுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டு வருகிறார்.

டோஹாவில், கட்டார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி புதனன்று கூறியதாவது, காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பிரதானமாக இடம்பெயர்ந்த மக்கள் திரும்புவதில் இழுபறி நீடிக்கிறது என்றார்.

குறிப்பாக போர் ஆரம்பத்தில் வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலின் உத்தரவை அடுத்து வெளியேறிய மக்கள் அந்தப் பகுதிக்கு திரும்புவதற்கே ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது.

‘மக்கள் வடக்குக்கு திரும்புவதற்கு முடியுமாக இருக்க வேண்டும் என்று ஹமாஸ் விரும்புகிறது. இது ஹமாஸுக்கு பெரிய விடயம் என்பதோடு இஸ்ரேல் அந்த விடயத்தில் கண்டிப்பாக உள்ளது. அவர்கள் (இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள்) சுதந்திரமாக நடமாடுவதை இஸ்ரேல் விரும்பவில்லை’ என்று இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ப்பில் நெருக்கமான வட்டாரம் ஒன்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவத்திடம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பலஸ்தீனர்களை விடுவிப்பது தொடர்பிலும் இழுபறி நீடிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீண்ட தண்டனை அனுபவிக்கும் நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்க ஹமாஸ் கோருகிறது.

வெளியேறும் தொண்டு அமைப்புகள்

இஸ்ரேலிய தாக்குதலில் தொண்டுப் பணியாளர்கள் கொள்ளப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு முன்னணி தன்னார்வ தொண்டு அமைப்புகள் காசாவில் தமது பணிகளை இடைநிறுத்தியுள்ளன. இதனால் ஏற்கனவே உணவுப் பற்றாக்குறையை சந்தித்திருக்கும் காசா மக்கள் மேலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இஸ்ரேலின் வான் தாக்குதலில் தமது ஆறு தொண்டு பணியாளர்களை இழந்த வேர்ல்ட் சென்ட்ரல் கிட்சம் மற்றும் மற்றொரு அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொண்டு அமைப்பான அனேராவும் தமது பணிகளை இடைநிறுத்தியுள்ளன.

இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து காசாவில் வாரம் ஒன்றுக்கு இரண்டு மில்லியன் உணவுப் பொதிகளை வழங்கி வந்தன. இஸ்ரேல் உதவி விநியோகங்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதால் காசா மக்கள் தொகையில் பாதி அளவான 1.1 மில்லியன் பேர் கொடிய பட்டினியை எதிர்கொண்டிருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நீடிக்கும் போரில் காசாவில் குறைந்தது 196 தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, அது ஓர் ஆண்டில் உலகில் எந்த ஒரு மோதலிலும் கொல்லப்பட்ட தொண்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையை விடவும் மூன்று மடங்கு அதிகம் என்று ஐ.நா. இணைப்பாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலினால் நிறுவப்பட்ட கடலோர உதவிப் பாதையில் தெற்கே பயணித்த தொண்டுப் பணியாளர்களின் வாகனத் தொடரணி மீதே இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை இரவு வான் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனத்திற்கு காரணமாகியுள்ளது.

காசா நகரில் உதவிகள் விநியோகிக்கப்படும் இடத்தில் மாவு மூட்டை ஒன்றை பெறுவதற்காக பலஸ்தீனர்கள் இரவு முழுவதும் அங்கு உறங்கி காத்திருக்கிறார்கள்.

‘மாவுக்காக இரவு முழுவதும் நாம் காத்திருக்கிறோம். நாங்கள் தெருக்களில், குளிரில், மணலில் தூங்குகிறோம். எங்கள் குடும்பங்களுக்கு, குறிப்பாக எங்கள் சிறு குழந்தைகளுக்கு உணவைப் பெறுவதற்கு சிரமங்களைத் தாங்கிக்கொண்டிருக்கிறோம்’ என்று அங்கு காத்திருக்கும் ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

வடக்கு காசாவில் மக்கள் நாளொன்றுக்கு சராசரியாக 245 கலோரிகளுக்கும் குறைவான அளவே நுகர்வதாக ஒக்ஸ்பாம் தொண்டு அமைப்பு நேற்று முன்தினம் குறிப்பிட்டது. எனினும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் உதவி வாகனங்கள் வடக்கு காசா செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது என்று இஸ்ரேல் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.

‘ஒருவர் நாளொன்றுக்கு 2,100 கலோரி உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 12 வீதத்துக்கும் குறைவான அளவே உட்கொள்கிறார்கள்’ என்று ஒக்ஸ்பாம் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT