Saturday, April 27, 2024
Home » நோன்பின் மாண்பு

நோன்பின் மாண்பு

by Gayan Abeykoon
March 22, 2024 11:15 am 0 comment

ஒரு நோன்பாளியை பசியும், தாகமும் வாட்டியெடுத்த போதிலும், தமக்கு எட்டிய தொலைவில் உணவும், பானமும், துணைவியும் இருந்த போதிலும் அவற்றை தொடாமல், அனுபவிக்காமல் விலகிச் செல்வதும் தவிர்ந்து கொள்வதும் அவரது மனஉறுதியை வெளிப்படுத்தக்கூடியதாகும்.

மனிதன் மனோ இச்சைகளுக்கு முன்பு பலவீனம் அடைந்து விடக்கூடியவனாவான். அதனால் அவற்றை எதிர்கொண்டு, தம்மை பலப்படுத்திக்கொள்ள இறை நம்பிக்கையில் உறுதி, மனவலிமை, உறுதியான எண்ணம், சாந்தம் என்பன மிகவும் அவசியம்.

சூரியன் உதயமானதிலிருந்து அது அஸ்தமனம் ஆகும் வரையும் ஒரு நோன்பாளி உண்ணாமல், பருகாமல் மற்றும் மனோ இச்சைகளை கட்டுப்படுத்தியபடி இருப்பது நோன்பாளியின் இறை நம்பிக்கையை பலப்படுத்தக்கூடியதாக அமையும்.

இது தொடர்பில் அல்லாஹ்தஆலா தன் அருள்மறையில், ‘ஈமான் கொண்டோர்களே…! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.                        (2:183)

இவ்வசனத்தின் படி இறை வழிகாட்டல்களுக்கு அமைய நோன்பை நோற்கும் போது இறையச்சத்தை அடைந்து கொள்ளலாம். மனித வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாததே இறையச்சமாகும்.

அந்த இறையச்சத்தை அடைந்து கொள்வதை இலக்காகக் கொண்டு நோன்பு நோற்று இறைவணக்கங்களில் ஈடுபட வேண்டும். அதேநேரம் நோன்பின் மூலம் பசியின் உணர்வை தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அது ஏழை எளிய மக்களின் பசியை செல்வச் செழிப்பு மிக்கவர்களுக்கும் உணர்த்தக்கூடியதாக அமைந்துள்ளது. அத்தோடு உணவளிக்கும் இறைவனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்திட வேண்டும் என்ற எண்ணத்தை மனிதனுள் விதைக்கக்கூடியதாக அமைகிறது.

ரமழான் நோன்பானது அல்லாஹ்வின் கட்டளைக்கு அமைய அவனது திருப்தியை பெற்றுக்கொள்வதற்காக நோற்கப்பட வேண்டியதாகும். அதன் ஊடாக அவனது திருப்தி கிடைக்கப்பெறும். அத்தோடு உடல்சார்ந்த நலன்களும், உலகம் சார்ந்த பயன்களும் நோன்பின் ஊடாக கிடைக்கப்பெறவே செய்யும்.

குறிப்பாக ‘ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) கூறினார்கள்’.

(ஆதாரம்: புஹாரி)

ஆகவே இறையச்சம், இறையருள், பாவமன்னிப்பு, உடல் ஆரோக்கியம் உட்பட ஏராளமான நற்பாக்கியங்களைத்தரும் ரமழான் நோன்பை நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் அடிப்படையில் கடைப்பிடித்து நன்மைகள் பெறுவோம்.

 

அபூ அப்துல்லாஹ்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT