Sunday, April 28, 2024
Home » பாவமன்னிப்பின் மாதம்

பாவமன்னிப்பின் மாதம்

by Gayan Abeykoon
March 22, 2024 12:00 pm 0 comment

னிதன் பலவீனமானவன், அவன் இயல்பாகவே பாவம் செய்யக்கூடிய இயல்பினைக் கொண்டவனாவான். அவனால் பாவங்களிலிருந்து முழுமையாக விடுபட்டு வாழ முடியாது. தான் செய்த பாவங்களை உணர்ந்து தன்னை மன்னித்து இரட்சிக்குமாறு அல்லாஹ்விடம் கேட்டு, மன்றாடும் போது அவனுக்கு மன்னிப்பை வழங்க அல்லாஹ் காத்திருக்கிறான்.

மனிதன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். அது அவன் மீது கடமையாகும். அல் குர்ஆன் இதனைப் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளது.’விசுவாசிகளே…. நீங்கள் அல்லாஹ்விடம் மிகத் தூய்மையாகவும் உண்மையாகவும் பாவமன்னிப்புக் கோருங்கள்’ (அல் குர்ஆன் 66:08)

‘விசுவாசிகளே….! நீங்கள் அனைவரும் வெற்றி பெறும் பொருட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்’

(அல்-குர்ஆன் 24:31)

இவை பாவமன்னிப்புக் கோரலை வலியுறுத்திக் கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஆதமுடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்கள். பாவம் செய்வோரில் மிகச் சிறந்தவர் பாவமன்னிப்புக் கோருவோராவர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்: சுனனுத் திர்மிதி)

இந்த நபிமொழியின் ஊடாக பாவமன்னிப்பு கோருவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது. அதாவது பாவமன்னிப்புக் கோருமாறு அல்லாஹ் எமக்குக் கட்டளையிட்டிருக்கிறான். நபிமார்கள், உத்தமர்களான நல்லடியார்களும், இறைநேசர்களும் கூட பாவமன்னிப்புக் கோரியுள்ளார்கள்.

பாவமன்னிப்புக் கோருவோரை அல்லாஹ் விரும்புகிறான். அதற்காக அவன் மகிழ்ச்சியடைகின்றான். ‘நிச்சயமாக அதிகமதிகமாக பாவமன்னிப்புக் கேட்போரையும் சுத்தமாக இருப்போரையும் அல்லாஹ் விரும்புகின்றான்’ (2:222) என்று அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறது.

பாவங்களை மன்னிப்பது அல்லாஹ்வின் பண்பாகும். அல்லாஹ் அடியானை மன்னிப்பதில் அதிகம் விருப்பம் கொள்கிறான். பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீள்வோரை அவன் நேசிக்கின்றான். ‘எவன் கைவசம் எனது ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, வானம் பூமிக்கு இடைப்பட்ட பகுதியை நிரப்புமளவு நீங்கள் பாவம் செய்திருந்த போதிலும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டால் அவன் நிச்சயமாக உங்களை மன்னிக்கவே செய்வான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அஹ்மத்)

அதேநேரம், பாவமன்னிப்பு கோருவதன் ஊடாக சுவனத்தை அடைந்து கொள்ளலாம். சுவனத்தைப் பெற்றுத்தரும் காரியமே பாவமன்னிப்பு கோருதலாகும்.

‘நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதிலும் சுவனத்தைப் பெறுவதிலும் முந்திக் கொள்ளுங்கள். அந்த சுவனம் வானம் பூமியின் அளவு விசாலமானது (3:133) என்று அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது எம்மை வந்தடைந்துள்ள ரமழான் மாதம் அல்லாஹ்வின் அன்பையும், மன்னிப்பையும் சுமந்து வந்துள்ள மாதமாகும். குறிப்பாக இம்மாதத்தில் நோன்பு வைப்பதன் மூலமும், இரவு வணக்கங்களில் ஈடுபடுவதன் மூலமும் அல்லாஹூதஆலா முன் செய்த பாவங்களை மன்னிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்றும் நபிகளார் கூறியதாக அபூ ஹுறைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்’.         (ஆதாரம்-: ஸஹீஹுல் புஹாரி)

அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ள சில பாவமன்னிப்பு துஆக்கள் வருமாறு,

‘அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅஃதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன்.

நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.

அஸ்தஃபிருல்லாஹல் அளீம் – பொருள்: மகத்துவமிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கின்றேன்.

‘றப்பிஃபிர்லீ’ பொருள்: யாஅல்லாஹ் எனது பாவத்தை மன்னிப்பாயாக!

‘லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னி குன்து மிலள்ளாலிமீன்’. பொருள்: யா அல்லாஹ் உன்னைத் தவிர வேறு வணங்கத் தகுதியானவன் வேறு யாருமில்லை. நிச்சயமாக நான் அநியாக்காரர்களில் ஆகிவிட்டேன்.

‘றப்பனா ளலம்னா அன்புஸனா வஇல்லம் தஃபிர்லனா வதர்ஹம்னா லனகூனன்ன மினல் காஸிரீன்’. பொருள்: ‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்’

இவ்வாறு பாவமன்னிப்பு கோருவதற்கான பல துஆக்களை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். அதனால் அந்த பாவமன்னிப்பு துஆக்களை பயன்படுத்தி பாவமன்னிப்பு கோருவோம்.

மனிதன் என்ற அடிப்படையில் ஒருவர் சிறு பாவங்கள், பெரும் பாவங்கள் செய்திருக்கலாம். அவற்றை எண்ணி அவனது உள்ளம் நெகிழ வேண்டும். அதற்காகக் கண்ணீர் விட்டு அழ வேண்டும். பாவச் சுமைகளோடு எனது இரட்சகனை எவ்வாறு சந்திக்க முடியும் என வருந்த வேண்டும். பாவத்திலிருந்து அவன் நீங்கிவிட வேண்டும். குறித்த பாவத்தை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிகொள்ளல் வேண்டும். மனிதர்களுடன் தொடர்பான பாவமெனில் முதலில் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இவை பாவமன்னிப்புக்கான நிபந்தனைகளாக உள்ளன.

எனவே, நோன்பு நோற்று இதர வணக்கங்களில் ஈடுபடுவதோடு பாவ மன்னிப்பு கோருவதிலும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வோம். அதன் ஊடாக அல்லாஹ்வின் அன்பையும் கருணையையும் பெற்றுக்கொள்வோம்.

முப்தி ஏ.எச்.எம். மின்ஹாஜ்…

(காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT