Saturday, April 27, 2024
Home » குருத்தோலை ஞாயிறுடன் ஆரம்பமாகும் பரிசுத்த வாரம்

குருத்தோலை ஞாயிறுடன் ஆரம்பமாகும் பரிசுத்த வாரம்

by sachintha
March 19, 2024 6:48 am 0 comment

எல்.செல்வா…

தவக்காலத்தின் இறுதி வாரம் பரிசுத்த வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வாரத்தை ஆரம்பிக்கும் சிறப்பு நிகழ்வாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு தினத்தை சிறப்பிக்கின்றனர்.

குருத்தோலை ஞாயிறு தினத்தன்று நம் ஆண்டவராகிய இயேசு கழுதை மேல் அமர்ந்து ஒலிவ மலையிலிருந்து எருசலேமிற்குள் பிரவேசிக்கும்போது மக்கள் அணி அணியாகத் திரண்டு குருத்தோலைகளை கைகளில் ஏந்தி “தாவீதின் குமாரனுக்கு ஓசான்னா” என்று முழங்கி வெற்றி ஆர்ப்பரிப்புடன் அவரை வரவேற்கின்றனர்.

இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் கிறிஸ்தவர்களால்தவக்காலத்தில் கடைசி ஞாயிறு தினத்தில் சிறப்பிக்கப்படுகின்றது.

தவக்காலம் விபூதிப் புதனுடன் ஆரம்பித்து 40 நாட்கள் உபவாச நாட்களாக கடைபிடிக்கப்பட்டு இறுதி வாரம் பரிசுத்த வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளி, அல்லேலூயா சனி,உயிர்த்த ஞாயிறு என தவக்காலத்தில் முக்கியமான தினங்கள் உள்ளடங்குகின்றன.

அந்த வகையில் எதிர் வரும் வாரம் முழுதும் நம் ஆண்டவர் இயேசுவின் இலட்சியப் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பைக் கொண்டாடும் வகையில் திருச்சபை எமக்கு அழைப்பு விடுக்கின்றது.

குருத் தோலை ஞாயிறு வெற்றியின் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் பிரவேசிக்கும் போது “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் ஓசான்னா” என்று மக்கள் வாழ்த்தொழி பாடி ஆர்ப்பரிக்கின்றனர்.

இதன்போது எருசலேம் நகரம் பரபரப்பப்படைகிறது.

அதுவரை அவ்வாறான ஒரு நிகழ்வு எருசலேமில் இடம் பெறவில்லை. இப்படியான ஒரு நிகழ்வை எவருமே நிகழ்த்திக் காட்டியிருக்க முடியாது என சொல்லுமளவுக்கு அந்த நிகழ்வு அமைந்தது. இந்த நிகழ்வு ஆட்சியில் இருப்போரையும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட யூதர்களையும் ஆட்சியாளர்களின் அடிவருடிகளையும் ஆட்டம் காண செய்தது.

அதே சமயம், யூத சமுதாயத்தில் பிரிவினைவாதங்களால் கட்டுண்டு கிடந்த ஏழை எளிய மக்களுக்கு இந்த நிகழ்வு விடுதலை தரும் நம்பிக்கை நிகழ்வாக அமைந்தது.

இயேசுவை சிமியோன் எருசலேம் ஆலயத்தில் வைத்து குழந்தையாக தமது கரங்களில் ஏந்தி “இதோ இந்த குழந்தை இஸ்ரேல் மக்களில் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்;எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என கூறிய அந்த அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இந்த இடத்தில் நிறைவேறுகிறது.

அந்த வகையில் குருத்தோலை ஞாயிறு வேறுபாடுகளற்ற சமத்துவ சமுதாயத்தை படைக்கவும், அதற்கான இலட்சியப் பாதையையும் புலப்படுத்துகிறது.

குறித்தோலை ஞாயிற்றுக்கிழமை நற்செய்தி வாசகம் இயேசுவின் இலட்சிய மரணத்தை நம் கண்முன் நிறுத்துகிறது.

எப்போதும் உண்மையான அன்புதான் அனைத்துத் தியாகச் செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகின்றது. உண்மை அன்பிலிருந்துதான் தியாகம் ஊற்றெடுக்கின்றது. அந்தத் தியாகத்திலிருந்தான் இலட்சிய மரணம் பிறக்கிறது. ஆனால், இன்றைய உலகில் அன்பு என்பது வர்த்தகப் பொருளாகிவிட்டது.

“நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை” என்று கூறும் இயேசு, “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” என்ற வார்த்தைகள் வழியாக அதனை வாழ்ந்து காட்டுகின்றார் ( யோவா 15:12-13).

இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி முடித்த பிறகு, “ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” ( யோவான் 13:14:15) என்று கூறுவதன் வழியாகப் பணிவையும், துணிவையும், தியாக அன்பையும் இலட்சிய வாழ்வின் ஆணிவேர்களாக எடுத்துக்காட்டி அதனையே வாழ்வாக்கவும் அழைப்பு விடுக்கின்றார்.

இயேசுவின் திருமுழுக்கின்போதும் உருமாற்றத்தின்போதும் இறை தந்தையின் குரலைக் கேட்கின்றோம். அதனைத் தொடர்ந்து இயேசுவின் பணிவாழ்வு முழுவதும் இறை தந்தையின் உடனிருப்பைக் பார்க்கின்றோம். யூதத் தலைவர்களில் ஒருவரான நிக்கதேமு தன்னை சந்திக்க வந்தபோது, தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் என்றும் உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார் (யோவான் 3:16) என்றும் கூறி இறைத்தந்தையின் தியாகமிக்க அன்பை வெளிப்படுத்துகிறார் இயேசு.

கெத்சமனித் தோட்டத்தில் நமதாண்டவர் இயேசு கைது செய்யப்பட்டது முதல் கல்வாரியில் தனது இன்னுயிரை ஈந்தது வரை அவர் அனுபவித்த அத்தனை துயரங்களும் இறைத்தந்தையின் கண்முன்பாகத்தான் நிகழ்ந்தன. முப்பது வயதில் தொடங்கிய இயேசுவின் பயணம் வெறும் மூன்றே ஆண்டுகளில் அதாவது, முப்பத்து மூன்று வயதில் நிறைவு பெற்றது.

ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக நிலைப்பாடு எடுத்ததும், அதை செயலாக்கம் செய்ததும்தான் இயேசுவின் மரணத்திற்கு முக்கிய காரணங்கள்.

இயேசு தனது பணிவாழ்வு முழுவதும் எதிர்ப்புகளைத்தான் அதிகம் சந்தித்தார். அதுவும் தனது சொந்த இனமான யூத இனத்தில் நிலவிய அத்தனை அநியாயங்களையும் அவர் துணிச்சலுடன் தட்டிக்கேட்டார். அவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தார். எதிரிகள் குறித்தோ அல்லது எதிர்ப்புகள் குறித்தோ அவர் ஒருபோதும் மனம் தளர்ந்ததில்லை.

ஒரு சமத்துவ சமுதாயம் படைக்க விரும்பிய இயேசுவின் இலட்சிய வழியில் நாமும் பயணிப்போம். அதற்கான அருள்வரங்களுக்காக புனித வாரத்தில் இறைவனிடம் மன்றாடுவோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT