Thursday, May 9, 2024
Home » யானை வேலி பாதுகாப்பிற்கு 4,500 உத்தியோகத்தர்களை இணைக்க நடவடிக்கை

யானை வேலி பாதுகாப்பிற்கு 4,500 உத்தியோகத்தர்களை இணைக்க நடவடிக்கை

- நிதியமைச்சினால் அங்கீகாரம்

by Rizwan Segu Mohideen
March 11, 2024 5:28 pm 0 comment

யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார்.

நாட்டின் காடுகளை மொத்த நிலப்பரப்பில் 32% வரை அதிகரிக்கும் திட்டத்துடன் தொடர்புடைய வன எல்லைகளை நிர்ணயம் செய்யும் பணி இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி,

“சர்வதேச காடுகள் தினம் மார்ச் 21 அன்று கொண்டாடப்படுகிறது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தலா ஒரு செடியை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் வன விரிவாக்க உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீரேந்துப் பிரதேசங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் வனப்பரப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மொத்த நிலப்பரப்பில் காடுகளை 32% வரை அதிகரிப்பதற்கான திட்டம் தொடர்பில் காடுகளின் எல்லை நிர்ணயம் இந்த வருடத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எமது அமைச்சின் கீழ் உள்ள வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் விடயமாகும்.

மேலும் உமாஓயா முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்களுக்கு புதிதாக நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கீழ் உமாஓயா பகுதிக்கு 45 MCM குடிநீரை வழங்கவும், 120 மெகாவோட் நீர்மின்சாரத்தை பெறவும் பரீட்சார்த்து பணிகள் நடைபெற்று வருகிறன. இதில், 120 மெகாவோட் நீர் மின் உற்பத்தியும் தேசிய கட்டமைப்பில் சேர்க்கப்பட உள்ளது.

மேலும், மினிப்பே வாய்க்கால் மூலம் சிறுபோகம் மற்றும் பெரும்போகம் இரண்டிலும் விவசாயத்திற்கான 7,500 ஹெக்டெயாருக்கு நீர்ப்பாசன வசதிகள் கிடைத்துள்ளன. அதற்காக 3.5 மீட்டர் மினிபே வாய்க்கால் அபிவிருத்தி செய்யப்பட்டு 74 கிலோமீட்டர் வரை நீர் செல்லத் தேவையான கால்வாய் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,500 குடும்பங்கள் பயன்பெறும். மேலும், வடமேற்கு கால்வாய் ஊடாக வேமெடில்ல நீர்த்தேக்கத்திலிருந்து வடமேற்காக 90 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள 350 சிறிய குளங்கள் மற்றும் 07 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களுக்கு நீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கால்வாயின் நடுவில் இரண்டு கிலோமீட்டர் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது, மேலும் இரண்டு முக்கிய குளங்களும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 75,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான நீர்ப்பாசன நீர் மற்றும் 10 MCM குடிநீர் கிடைக்கும்.

அத்துடன் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து ஹுருலு ஏரி மற்றும் மஹகனதரவ வரையான 96 கிலோமீற்றர் நீளமான கால்வாய் வடமத்திய மாகாணத்திற்கு அவசியமான நீர்ப்பாசன நீரை கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டு வருகின்றது. இது 28 கி.மீ சுரங்கப்பாதையையும் கொண்டுள்ளது. 2,300 ஹெக்டெயார் மற்றும் 175,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான நீர் வசதி மற்றும் 40 MCM அளவு குடிநீர் வழங்கப்படும். 1,300 சிறிய குளங்களுக்கு நீர் கொண்டு செல்லவும் முடியும்.

மேலும், யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனவிலங்கு அமைச்சிற்கு 4,500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக புதிய பணியாளர்கள் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள். அமைச்சுக்கு இணைத்துக் கொள்ள அங்கீகாரம் பெற்ற பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏற்கனவே யானை வேலியின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.” என்று வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT