Friday, May 10, 2024
Home » 117ஆவது வடக்கின் சமர்; யாழ். பரியோவான் கல்லூரி வெற்றி

117ஆவது வடக்கின் சமர்; யாழ். பரியோவான் கல்லூரி வெற்றி

- விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட்டுகளால் அபாரம்

by Rizwan Segu Mohideen
March 9, 2024 5:32 pm 0 comment

117ஆவது வடக்கின் பெரும் போர் போட்டியில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியுள்ளது.

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.

117 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகின. போட்டிகள் 07, 08, 09 ஆம் திகதிகளில் 3 நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக நடைபெற்றன.

போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை (07) காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 56.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சார்பில் அதிகபட்சமாக சயந்தன் 55 ஓட்டங்களையும் நியூட்டன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பரியோவான் கல்லூரி சார்பில் கவிசன் 5 விக்கெட்டுகளையும், மாதுளன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பதிலுக்கு தனது முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி 70.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது.

பரியோவான் கல்லூரி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் ஜெஷில் 52 ஓட்டங்களையும், அபியோசுவாந்த், சச்சின் கணபதி ஆகியோர் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி சார்பில்
அபிலாஷ், முரளிதிசோன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு தனது இரண்டாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 57.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சார்பில் அதிகபட்சமாக அஜய் 23 ஓட்டங்களையும், சிமில்டோன் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் பரியோவான் கல்லூரி சார்பில் கஜகர்ணன், அசந்த் சாம்சன் ஆகியோர் தலா இரு விக்ககட்டுகளை கைப்பற்றினார்கள்.

அந்த வகையில் பதிலுக்கு 79 ஓட்டங்களை பெற்றால் வெற்றி எனும் வகையில் இரண்டாம் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி 15 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட் இழப்புமின்றி 81 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. அவ்வணி சார்பில் அதிகபட்சமாக அபியோசுவாந் 50 ஓட்டங்களையும் சச்சின் கணபதி 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன் அடிப்படையில், 117ஆவது வடக்கின் பெரும் போர் போட்டியில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி ஈட்டியுள்ளது.

பிரபாகரன் டிலக்சன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT