Thursday, May 9, 2024
Home » உணவுப் பண்டங்களின் விலைகள் நியாயமற்ற முறையில் அதிகரிப்பு

உணவுப் பண்டங்களின் விலைகள் நியாயமற்ற முறையில் அதிகரிப்பு

by Rizwan Segu Mohideen
March 4, 2024 6:14 am 0 comment

இலங்கையில் உணவுப் பண்டங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் உணவுப் பண்டங்கள் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் என்பவற்றின் விலை ரூபா 50.00 இனாலும் தேநீரின் விலை ரூபா 5.00 இனாலும் பால் தேநீரின் விலை ரூபா 10.00 இனாலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு சிற்றுண்டிகள் ரூபா 10.00 இனாலும் சோற்று பொதி ரூபா 25.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுப் பண்டங்களின் திடீர் விலை அதிகரிப்பு குறித்து நுகர்வோர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த விலை அதிகரிப்புக்கு ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ள பாவனையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, இந்த விலை அதிகரிப்பை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ள உணவுப் பண்டங்களதும் சிற்றுண்டிகளதும் தயாரிப்புக்கு கோதுமை மா, பால்மா, தேயிலை, சமையல் எரிவாயு, எரிபொருட்கள் என்பனதான் பயன்படுத்தப்படுகின்றன. அவை எதற்கும் கடந்த சில தினங்களுக்குள் விலை அதிகரிப்பு செய்யப்படவில்லை.

மாதாமாதம் விலைத் திருத்தம் செய்யப்படும் சமையல் எரிவாயு, எரிபொருட்களின் விலைகளும் கூட இம்மாதம் திருத்தம் செய்யப்படவில்லை. பாவனையாளர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி இம்மாதம் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

நிலைமை இவ்வாறு இருந்தும் கூட உணவுப் பண்டங்களதும் சிற்றுண்டிகளதும் விலைகள் திடீரென அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்த உணவுப் பண்டங்களின் விலைகளை எந்த அடிப்படையில் அதிகரித்தார்கள் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

அதன் காரணத்தினால் இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தினரின் இந்நடவடிக்கை குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட எந்தவொரு பொருளுக்கும் கண்டபடி விலை அதிகரிப்பை மேற்கொள்ள இடமளிக்கக் கூடாது. எந்தவொரு பொருளுக்கும் விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான காரணங்கள் இருக்க வேண்டும். அவ்வாறான காரணங்கள் இல்லாத சூழலில்தான் தற்போதைய விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாடு மீட்சி பெற்று நம்பிக்கை தரும் வகையில் மறுமலர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றது. அந்த நெருக்கடி காலத்தில் மக்கள் முகம்கொடுத்த அசௌகரியங்களும் தாக்கங்களும் முழுமையாக நீங்கியதாக இல்லை. அதன் தாக்கங்களும் காணப்படவே செய்கிறது. பொருளாதார நெருக்கடி நிலவிய போது மக்கள் பல்வேறு விதமான நெருக்கடிக்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்தார்கள். சமையல் எரிவாயு, எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்கணக்கில் வரிசைகளில் காத்துக்கிடக்கும் நிலைக்கு உள்ளானார்கள். அப்பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவென முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார வேலைத்திட்டங்களின் ஊடாக பாரிய பிரதிபலன்களை மக்கள் அடைந்து கொண்டுள்ளனர். அதன் பயனாக பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் நாட்டு மக்கள் முகம்கொடுத்த நெருக்கடிகளும் அசௌகரியங்களும் பெரும்பாலும் நீங்கியுள்ளன. ஆனாலும் அதன் தாக்கங்கள் காணப்படவெ செய்கின்றன. இந்த நிலையில் அவற்றில் இருந்தும் நாட்டை முழுமையாக மீட்டெடுக்கவென பொருளாதார வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படடுள்ளன.

அந்த வகையில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலைகளும் இம்மாதம் திருத்தம் செய்யப்படவில்லை. அந்தளவுக்கு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட எந்தவொரு பொருளினதும் விலையைக் கண்டபடி அதிகரிக்க இடமளிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட தரப்பினரைப் பாவனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லாவிடில் சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் போன்று ஆளுக்கொரு சங்கத்தை அமைத்து பொருட்களின் நிலையை நிர்ணயம் செய்யும் நிலைமை உருவாகிவிடும். அதன் விளைவாக மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர்.

ஆகவே இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம். அதுவே பாவனையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT