Wednesday, May 1, 2024
Home » மட்டு. மாவட்ட அபிவிருத்திக்கு 287 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மட்டு. மாவட்ட அபிவிருத்திக்கு 287 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆராய்வு

by Gayan Abeykoon
February 15, 2024 7:19 am 0 comment

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு இவ்வாண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட  நிதியிலிருந்து 287 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.இதன்போதே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது கடந்த ஆண்டு  அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடந்த ஆண்டு 9953.11 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1162 அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், இவ்வாண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட  நிதியிலிருந்து 287 மில்லியன் செலவில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டிருந்தன.

மேலும் கரையோரம் மற்றும் வாவியினை அண்டிய பகுதிகளில் கண்டல் தாவரங்களை நடுதல், மட்டக்களப்பு வாவியில் மிதக்கும் உல்லாசப் படகு சேவையினை ஆரம்பித்தல், வவுணதீவுப் பிரதேசத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தித்திட்டத்தை ஆரம்பித்தல், புளுக்குணாவ குளத்தில் மீன்குஞ்சு வளர்ப்பை ஆரம்பித்தல், மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றிற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதுதவிர தனியார் கல்வி நிறுவனங்களால் நடாத்தப்படும் மேலதிக வகுப்புகளில் தரம் 10 தொடக்கம் க.பொ.த உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து வகுப்புகளையும் ஞாயிற்றுக் கிழமைகளில் தடை செய்வது தொடர்பான விசேட கூட்டமொன்றை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டதுடன் இம்மாவட்டத்தில் சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் மதுவிற்பனை தொடர்பாக கலால் திணைக்களம், பொலிஸாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.

விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கான இழப்பீடுகளை மீள்பரிசீலனை செய்து அதற்கான இழப்பீட்டுத் தொகையினை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கவும், பொதுமக்கள் மின்சாரக்கட்டணம் செலுத்த தாமதமாவதால் ஏற்படும் மின் துண்டிப்புச் சலுகைக் காலத்தினை நீடிப்பது தொடர்பாக மின்சக்தி எரிசக்தி அமைச்சருக்கு கோரிக்கை விடுப்பதெனவும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாவட்டத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் பிரதேச மட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டது. மேலும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் சார்பாக முன்வைத்த பல விடயங்கள் கவனத்திற்கொள்ளப்பட்டதுடன் இவற்றில் மாவட்ட மட்டத்தில் தீர்க்கப்படவேண்டிய விடயங்களுக்கான தீர்வுகள் எட்டப்பட்டதுடன் தேசிய மட்டத்தில் பேசப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், அலிசாஹிர் மௌலானா, மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

புதிய கத்தான்குடி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT