Thursday, May 9, 2024
Home » இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் மற்றொரு மைல்கல்: UPI ஒருங்கிணைந்த கட்டண முறை

இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் மற்றொரு மைல்கல்: UPI ஒருங்கிணைந்த கட்டண முறை

by Rizwan Segu Mohideen
February 14, 2024 3:28 pm 0 comment

டிஜிட்டல்மயமான நவீன உலகில் இன்று விரல்நுனிக்கே வந்து விட்டன. டிஜிட்டல்மயமாக்களின் பலனாக கொடுப்பனவு முறைகளில் பல எளிய வழிகள் அறிமுகமாயிருப்பதோடு சில நாடுகள் பிரமிக்கும் வகையில் டிஜிட்டல் பயன்பாட்டில் உச்சத்தில் உள்ளன.

உலக நாடுகள் இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்து வியக்கும் வகையில் அதன் முன்னேற்றம் அமைந்துள்ளது.

மக்களுக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு உலகத்திற்கு நிரூபித்து வருகிறது.அண்டை நாடான இலங்கை தற்பொழுது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.அரச துறையை டிஜிட்டல்மயமாக்கும் முன்னெடுப்புகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதோடு இதற்கு இந்தியா பலவழிகளிலும் ஒத்துழைத்து வருகிறது.

இலங்கையில் UPI அறிமுகம்: இந்திய சுற்றுலா பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வசதி!

இலங்கையின் முன்னேற்றத்தில் என்றும் உற்ற நண்பனாக இருக்கும் அயலவரான இந்தியா , பொருளாதார சமூக,கலை,கலாசார முன்னேற்றத்தில் என்றும் இலங்கைக்கு பக்க துணையாக இருந்து வருகிறது. இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறைமை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

QR குறியீடு ஊடாக ஒருங்கிணைந்த கட்டண முறை எனப்படும் UPI ஊடாக பணம் செலுத்தும் முறைமையை இந்திய பிரமமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக ஆரம்பித்து வைத்தார்கள்.

வளர்ச்சி அடைந்த நாடுகள் இன்னும் அட்டைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஒருங்கிணைந்த கட்டண முறை எனப்படும் UPI முறையில் முன்னோடி நாடாக இந்தியா காணப்படுகிறது.

இந்தியாவில் இந்த அற்புதமான கட்டண முறையின் எழுச்சி மற்றும் வளர்ச்சி பிரமிப்படையும் வகையில் உச்ச நிலையில் இருக்கிறது எனலாம். சிறிய பெட்டிக்கடை முதல் பாரிய வர்த்தக நிலையம் வரை இன்ற UPI முறைதான் இன்று வியாபித்துள்ளது. முதன்முதலில் 2016இல் தான் இந்த முறை இந்தியாவில் தொடங்கப்பட்டது. நரேந்திர மோடி அரசாங்கம் துவங்கிய இந்த கட்டண முறை ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் இன்று முழுநாட்டையும் ஆக்கிரமித்துள்ளது.

முழு இந்தியவைவும் ஆக்கிரமிக்கும் UPI

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் UPI வழியே மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு ரூ.707 கோடி. 2018 டிசம்பரில் அது ஒரு இலட்சம் கோடியாக உயர்ந்தது. 2021டிசம்பர் டிசம்பரில் அது ரூ.8.26 அலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்த முறையின் ஊடாக 73 இலட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிவர்த்தனை எண்ணிக்கை 3,800 கோடி ஆகும்.கடந்தாண்டு பணமில்லாப் பொருளாதாரத்தில் ஒரு முக்கியக் காரணியாக இந்தியாவில் சுமார் 1.09 டிரில்லியன் ரூபாய் வரை பரிவர்த்தனை நடந்திருக்கிறது.கடந்த ஆண்டில் UPI ஆனது, PhonePe, Paytm மற்றும் Google Pay போன்ற நிறுவனங்களிடமிருந்து சந்தையில் பெரும் பங்கைப் பெற்று, அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும் ஒரு நாட்டின் முற்போக்கான பார்வையை UPI குறிக்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இந்த கொடுப்பனவு முறை அதிக பங்காற்றி வருகிறது.இன்று உலகமே UPI வெற்றி குறித்து ஆய்வு செய்துவருகிறது. உலகில் முன்னணி தொழில்நுட்ப நாடுகளான அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிடம் கூட இத்தகைய பணம் செலுத்தும் முறை இல்லை என்றே கூற வேண்டும்.

பலநாடுகள் கைகோர்ப்பு
இந்தியா UPI கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு சிங்கப்பூர் அரசும் அந்நாட்டில் பேநெவ் (PayNow) என்றொரு கட்டமைப்பைக் கொண்டுவந்தது. பேநொவ் மூலம் UPI போலவே எந்த வங்கியிலிருந்து எந்த வங்கிக்கும் துரிதமாக பணம் அனுப்ப முடியும். தற்போது இந்திய அரசும் சிங்கப்பூர் அரசும் UPI மற்றும் பேநவ் இடையே இணைப்பை உருவாக்கி இரு நாடுகளுக்கிடையிலான பணப்பரிவர்த்தனை நடைமுறையை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றுள்ளன.அடுத்து பூட்டான் அரசு அந்நாட்டில் இந்தியாவின் UPI முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.தற்பொழுது பிரான்ஸ்,நேபாளம்,ஜக்கிய அரபு இராச்சியம் என்பனவும் இந்த முறைமையில் கைகோர்த்துள்ளன. அண்மையில் இலங்கை மற்றும் மொரீசியஸ் என்பன UPI முறையில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இருநாட்டு தலைவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இலங்கையிலும் அறிமுகம்
NNPCI International Payments Limited மற்றும் இலங்கை LankaPay நிறுவனம் என்பன இணைந்து முன்னெடுக்கும் UPI வேலைத்திட்டத்தை துரிதமாக விஸ்தரிக்கும் நோக்கத்துடன் 10,000 வர்த்தக நிலையங்களில் இந்த கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வசதியை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், இந்த வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை அடுத்த மாதத்திற்குள் 65,000 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது வெளியிடப்பட்ட ” தொலைநோக்கு அறிக்கையின்” பிரகாரம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒன்றிணைந்த கொடுப்பனவு முறைமை (UPI) அறிமுகப்படுத்தப்படுவது விசேட அம்சமாகும்.

இலங்கையில் உள்ள சுமார் 20 உள்ளூர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு தங்கள் ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ள அதேவேளை சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்புள்ள பகுதிகளுக்கு இந்த சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு மட்டுமன்றி இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு தனித்துவமான சந்தர்ப்பமாக இந்த முன்னெடுப்பை இலங்கை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நமது இரு நாடுகளுக்கும் இடையே பல்லாயிரம் வருடங்களுக்கு மேலாக கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது பயன்படுத்திய நாணயங்கள் இன்றும் இலங்கை அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தென்னிந்திய நாணயங்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, இருநாட்டு உறவை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதையே இன்று செய்கிறோம். எங்களுக்கு இனி நாணயங்கள் தேவையில்லை. லங்கா QR மற்றும் NIPL இணைந்துள்ளன என்றும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மற்றும் மொரிஷியஸை UPI கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கும் இலக்கை அடைவது பரஸ்பர நன்மைகளைப் பெறுவதற்கும் உள்ளூர் பொருளாதாரங்களின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் ஒரு படியாகும் என்பதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டியிருந்தார்.

ஆபிரிக்காவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட Rupee அட்டையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, “அண்டை நாடுகளுக்கு முதலிடம்” என்ற கொள்கையின்படி, அண்டை நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இந்தியா ஆதரவளிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பங்களிப்பு:
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளிடையே இந்திய சுற்றுலாப்பயணிகள் தான் அதிகம். கடந்த வருடம் 3 இலட்சத்திற்கும் அதிகமான இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்ததோடு இவ்வருடம் அது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பணப்பரிமாற்றமற்ற இந்த கொடுப்பனவு முறை, இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

அத்தோடு எதிர்காலத்தில் இந்தியா செல்லும் இலங்கை பயணிகளுக்கும் இந்த கட்டண முறையை பயன்படுத்த வசதிஅளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல்மயமாக்களுக்கு இந்தியா ஒத்துழைப்பு
அரச துறையில் டிஜிட்டல் மயமாக்கலை முன்னெக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருப்பது கவனிக்கத்தக்கது.

அரச துறை டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இருநாடுகளுக்கும் இடையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் போரில் இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார்.

இதனுடன் இணைந்ததாக இலங்கையில் டிஜிட்டல் கொள்முதல் உள்ளிட்ட அரசின் பிரதான சேவைகளுக்காக டிஜிட்டல்மயமாக்கலை செயற்படுத்தல், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச ஊழியர்களின் திறன் மேம்பாடு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், முதலீட்டு வசதிகள் அளித்தல் மற்றும் உணவுகளின் நடுநிலையான விலைப் பொறிமுறை ஆகிய பிரிவுகளுடன் தொடர்புள்ள நிறுவனங்களின் திறனை அபிவிருத்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்கான இலங்கை உயர்மட்ட குழுவொன்று இந்தியா சென்றுள்ளது.

அரச சேவையின் மேம்பாட்டிற்கான அண்மைய முன் முயற்சிகள் மற்றும் பொருளாதார நலன் குறித்த இந்திய அரசு நிறுவனங்களால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட கொள்கை, நிறுவன மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளின் மூலம் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் குழு ஆராய இருக்கிறது.

டிஜிட்டல் மயமாக்களில் உச்சத்தில் உள்ள இந்தியா நெருக்கடியின் போது இலங்கையை தூக்கி விட பலவழிகளிலும் ஒத்துழைத்ததை எவரும் மறந்துவிட முடியாது. இவ்வாறான நிலையில் அயல்நாடான இலங்கையிலும் டிஜிட்டல்மயமாக்களை வெற்றிகரமாக முன்னெடுக்க மேற்கொண்டுவரும் பங்களிப்பை சாதாரணமாக கருதிவிட முடியாது.

– ஷபா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT