Monday, May 20, 2024
Home » தேர்தல் காலத்தில் முதலைக் கண்ணீர் வடிப்பவர்களை மக்கள் அறிவார்கள்

தேர்தல் காலத்தில் முதலைக் கண்ணீர் வடிப்பவர்களை மக்கள் அறிவார்கள்

த.ம.வி கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன்

by Gayan Abeykoon
May 9, 2024 7:35 am 0 comment

தமிழர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மீண்டும் வந்து தேர்தல் காலத்தில் மட்டும் முதலைக் கண்ணீர் வடிப்பவர்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்துக்குட்பட்ட குருமண்வெளிக் கிராமத்தில் ரூ. 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  முன்னெடுக்கப்பட்ட வடிகான் அமைக்கும் திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பட்டிருப்பு பிரதேசத்திலுள்ள மக்கள் கடந்த காலத்தில் தேர்தலில் வாக்களித்து அரசியல் அங்கீகாரத்தை தமிழ் தேசியம் பேசுகின்றவர்களுக்கு கொடுத்தார்கள். அதன் விளைவாக இப்பிரதேசத்தில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் மிகவும் துன்பத்திலேயே வாழ்ந்தனர்.

ஆனால் சந்திரகாந்தன் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சு பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் பட்டிருப்புப் பகுதியில் பாரியளவிலான அபிவிருத்திப் பணிகளும், வீதி அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே வாக்களிக்கும்போது எந்த தலைவருக்கு வாக்களித்தால் எமது சமூகம் தலை நிமிர்ந்து வாழமுடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அது தற்போது மக்களின் சிந்தனையாக மாறியுள்ளது.

தமிழரசுக் கட்சி தங்களுக்குள்ளேயே தலைவர்களைத் தேர்வு செய்வதற்கு நீதிமன்றத்தைச் செல்கின்ற நிலையில் மக்களுக்கு எதனைச் செய்யப்போகின்றார்கள். வாக்களித்த மக்கள் நடுத் தெருவில் நிற்கின்றனர்.

தமிழர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மீண்டும் வந்து தேர்தல் காலத்தில் முதலைக் கண்ணீர் வடிப்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT