Sunday, April 28, 2024
Home » நாட்டின் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதே அவசியம்

நாட்டின் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதே அவசியம்

by mahesh
February 7, 2024 6:00 am 0 comment

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்வேலைத்திட்டங்களின் பிரதிபலன்களை நாட்டு மக்கள் அடைந்து கொண்டுள்ளனர். அதன் பயனாகவே 2022 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் நாடும் மக்களும் முகம்கொடுத்த நெருக்கடிகளும் பாதிப்புக்களும் நீங்கியுள்ளன.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கும் போது 2025 ஆம் ஆண்டில் 5 வீதப் பொருளாதார வளர்ச்சியை நாடு அடைந்து கொள்ளுமென பொருளாதார நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

ஆனால் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். ஜனநாயக நாடென்ற வகையில் கட்சி அரசியல் நலன்களை விடவும் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போது நாட்டைக் கட்டியெழுப்புவது அவ்வளவு சிரமமான காரியமாக இருக்காது. நாட்டில் நிச்சயம் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும். அந்த மறுமலர்ச்சியே அனைத்துத் தரப்பினரதும் எதிர்பார்ப்பாகவும், வேணவாவாகவும் உள்ளது.

2022 ஆண்டின் ஆரம்ப பகுதியில் நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பற்காக பல்வேறு தரப்பினரும் அபிப்பிராயங்களை முன்வைத்தனர். ஆனால் அப்பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து தலைமை வழங்க எவரும் முன்வரவில்லை. அதன் காரணத்தினால் மக்கள் பல்விதமான நெருக்கடிகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்நிலையில் அன்றைய அரசாங்கம் மாத்திரமல்லாமல் அன்றைய ஜனாதிபதியும் கூட பதவி விலகினார்.

அவ்வாறான சூழலில் நாட்டினதும் மக்களதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்றார். அவர் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். அந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமானவையாகவும் மக்களுக்கு பிரதிபலன்களைப் பெற்றுக்கொடுக்கும் கூடியனவாகவும் அமைந்திருந்தன. இத்திட்டங்களின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் ஜனாதிபதி தலைமையில் ஒன்றுபட்டு செயற்படத் தொடங்கினர்.

அவர்கள் கட்சி அரசியலை விடவும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து தீர்மானங்களை மேற்கொண்டு செயற்படலாயினர். அதன் பயனாக குறுகிய காலம் முதல் பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலன்களை மக்கள் அடைந்து கொள்ளத் தொடங்கினர். இவ்வேலைத்திட்டங்களின் ஊடாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் குறுகிய காலப்பகுதிக்குள் மீட்சியடைந்திருக்கின்றது.

ஆனால் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து ஒவ்வொரு அரசியல் கட்சியும் முடிவுகளை எடுத்து செயற்பட முன்வந்திருக்க வேண்டும். அவ்வாறு ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் இந்நாடு அடைந்து கொள்ளும் முன்னேற்றம் இன்னும் பல மடங்கு அதிகமானதமாகவே இருந்திருக்கும்.

இவ்வாறான சூழலில் தம்புள்ளையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ‘உருமய’ (உரித்து) காணி உறுதி வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘எவரும் அரசாங்கத்தை பொறுப்பெடுக்க முன்வராத சூழலில் நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை நாம் எதிர்கொண்டோம். எமது திட்டங்களின் பயனாக நாடு தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. எனினும் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் முழுமையாக நீங்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இன்னும் சிலர் கஷ்டப்படுகிறார்கள். எம்மால் முடிந்தளவு மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கிறோம். குறிப்பாக வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் 20 இலட்சம் பேருக்கு அஸ்வெசும நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. 15 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 20 இலட்சம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படுகிறது. சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வருவதோடு வருமான வழிகளும் உருவாக்கியுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘இவ்வளவு பாரிய பணிகளை பாராளுமன்றத்தின் ஊடாக ஒரு குழுவால் மேற்கொள்ள முடியும் என்றால், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் என்னதான் செய்ய முடியாது என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.

அதுதான் உண்மை. கட்சி நலன்களுக்கு அப்பால் நாட்டு நலன்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுவே நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகள் பெற்றுத்தரக் கூடியதாக இருக்கும். அதனையே ஜனாதிபதியின் வலியுறுத்தலும் எடுத்துக்காட்டுகின்றது. அதனால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக கட்சி அரசியலுக்கு அப்பால் ஜனாதிபதியின் அழைப்புக்கு ஏற்ப அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதுவே மக்களின் விருப்பமும் ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT