Friday, May 10, 2024
Home » நள்ளிரவு முதல் பாராளுமன்றம் ஒத்திவைப்பு (UPDATE)

நள்ளிரவு முதல் பாராளுமன்றம் ஒத்திவைப்பு (UPDATE)

- ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி

by Rizwan Segu Mohideen
January 26, 2024 4:54 pm 0 comment

இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது சரத்து மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (26) நள்ளிரவுடன் பாராளுமன்ற அமர்வு நிறைவுக்கு வருவதுடன், பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி மு.ப. 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9ஆவது பாராளுமன்றம் – 3 கூட்டத் தொடர்கள் நிறைவு
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் 2020 ஓகஸ்ட் 20 முதல் 2021 டிசம்பர் 12 வரையும், இரண்டாவது கூட்டத்தொடர் 2022 ஜனவரி 18 முதல் 2022 ஜூலை 28 வரையும் இடம்பெற்றது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி முதல் 2023 ஜனவரி 27 வரையும் இடம்பெற்றதுடன் நான்காவது கூட்டத்தொடர் பெப்ரவரி 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இன்று நள்ளிரவு (26) முடிவுக்கு கொண்டுவரும் வரை பாராளுமன்றம் 106 நாட்கள் கூடியிருந்தது.

பாராளுமன்ற நடைமுறைகள்
அரசியலமைப்பின் 33 உறுப்புரையின் (அ) மற்றும் (ஆ) உப பிரிவுகளுக்கு அமைய பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்தை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்து, அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்போது பாராளுமன்றத்தினால் முறையாக பரிசீலனை செய்யப்படாத வினாக்கள் மற்றும் பிரேரணைகள் இரத்தாவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவை தொடர்பில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாராளுமன்ற இணைப்புக் குழு, உயர் பதவிகள் பற்றிய குழு, விசேட குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT