Tuesday, April 30, 2024
Home » துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு வலிதற்றது

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு வலிதற்றது

- உயர் நீதிமன்றம் தீர்ப்பு; தண்டனையை நடைமுறைப்படுத்த உத்தரவு

by Rizwan Segu Mohideen
January 17, 2024 11:09 am 0 comment

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை வலிதற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று (17) தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுக்களின் விசாரணையின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் முன்னாள் ஜனாதிபதி உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமணா பிரேமச்சந்திர, அவரது மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுஸைன் ஆகியோரால் இதற்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த மனுக்களை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவினால் இத்தீர்ப்பை இன்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரத லக்‌ஷ்மன் கொலை வழக்கு Vs துமிந்த சில்வா மரண தண்டனை

  • (2011-11-15) 2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேளையில் துமிந்த சில்வா உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவர் மரணமடைந்தனர்.
  • (2016-07-14) கொலை வழக்கு விசாரணை கொழும்பு உயர் நீதிமன்றில் நிறைவு
  • (2016-09-08) கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் துமிந்த சில்வா உள்ளிட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
  • (2018-10-11) குறித்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்ததோடு, மரண தண்டனை தீர்ப்பை உறுதி செய்தது.
  • (2021-06-24) அப்போதைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்‌ஷவினால், ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டு துமிந்த சில்வா விடுதலையானார்.
  • (2022-05-31) துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய, அவரது பொது மன்னிப்பு உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டது.
  • (2022-06-01) துமிந்த சில்வா ஶ்ரீ ஜவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
  • (2022-09-01) துமிந்த சில்வாவின் ஜனாபதி பொதுமன்னிப்புக்கு எதிரான வழக்கிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகல்.
  • (2022-11-24) துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் 2022 டிசம்பர் 15 இற்கு விளக்கமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
  • (இன்று 2024-01-17) துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை வலிதற்றதாக்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT