Sunday, April 28, 2024
Home » நாட்டின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு

நாட்டின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு

by sachintha
January 12, 2024 6:00 am 0 comment

ஒரு நாட்டின் அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் கல்வி பாரிய பங்களிப்பை நல்கக் கூடியதாக இருந்து கொண்டிருக்கின்றது. கல்வி மூலம்தான் முழு உலகமும் அளப்பரிய வளர்ச்சியையும் முன்னேற்றங்களையும் அடைந்திருக்கின்றது.

கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட இலங்கை சுதந்திரத்திற்கு முன்பே நாட்டுக்கு இலவசக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதன் ஊடாக இந்நாட்டின் குடிமக்கள் அளப்பரிய நன்மைகளைப் பெற்று வருகின்றனர் ஒரு காலத்தில் செல்வ வசதி படைத்தவர்கள் மாத்திரம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த கல்வியை முழு நாட்டு மக்களும் பெற்றுக்கொள்வதற்கு இலவசக்கல்வி கொள்கை அடிப்படையாக அமைந்தது.

இலவசக்கல்வி கொள்கையை அர்த்தபூர்வமான முறையில் முன்னெடுப்பதற்காக ஆரம்ப முதலே விசாலமான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தகப்பட்டன. அந்த வகையில் தற்போது முழு நாட்டிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசாங்கப் பாடசாலைகள் உள்ளன. அவை பௌதீக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பெரும்பாலும் உள்ளடக்கியனவாக உள்ளன.

இன்று இந்நாட்டைச் சேர்ந்த 42 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இப்பாடசாலைகளில் கல்வி கற்கக் கூடியவர்களாக உள்ளனர். இவர்களுக்கு கல்வி புகட்டும் பணிக்கென இரண்டு இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆசிரியர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களை விடவும் கல்வி சாரா ஊழியர்களாகவும் பெருந்தொகையினர் கல்வித் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கென சம்பளம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் வசதிகளும் அரசின் ஊடாக அளிக்கப்படுகின்றன.

இந்த இலவசக் கல்வியை பலமாகவும் சிறுப்பாகவும் முன்னெடுக்கும் வகையில் வருடாவருடம் கோடானு கோடி ரூபா வரவு செலவுத்திட்டதின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டு செய்யப்பட்டு செலவிடப்பட்டு வருகின்றது. கல்விக்காக செலவிடப்படும் பணத்தை செலவாக அன்றி முதலீடாகவே அரசாங்கம் நோக்குகின்றது.

இந்த பின்புலத்தில் நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெறறிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இது குறித்து அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளது. ஆசிரியர்கள் ஒய்வு பெறுகின்றமை, ஆசிரியர் பதவியில் இருந்து விலகியுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்படுவது வழமையாகும். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் 6018 பேர் 60 வயது நிறைவடைந்த நிலையில் ஒய்வு பெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது மாகாண மட்டப் பாடசாலைகளிலேயே அதிகளவில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பரீட்சை நடாத்தப்பட்டு நேர்முகப்பரீட்சையும் நடாத்தப்பட்டுள்ளது. நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட சமயம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

‘14,385 பட்டதாரிகளையும் 21 ஆயிரம் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஆசிரியர்களாக நியமிப்பது தொடர்பிலான இம்மனு மீதான விசாரணைகள் இவ்வாரம் இடம்பெற்று அதற்கான தீர்ப்பு கிடைக்கப் பெற்றதும் இந்நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 36 ஆயிரத்து 385 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதனை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உத்தியோகபூர்வமாகப் அறிவித்துள்ளார். இது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும். அதுவே மக்களின் கருத்து. இலவச கல்விக் கொள்கையின் பயனாக இந்நாட்டின் எழுத்தறிவு 92.3 வீதமாக உள்ளது. இது தென்னாசியாவிலேயே மிக உயர்ந்த எழுத்தறிவு வீதமாகும்.

அமைச்சரின் இவ்வறிவிப்பானது ஆசிரியர் வெற்றிடங்களைக் கொண்டுள்ள பாடசாலைகளுக்கு ஆறுதல் அளிப்பதாக அமையும்.

உண்மையில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போதுதான் கல்வியின் தரத்தை மேம்படுத்தக்கூடியதாகவும் மாணவர்களின் திறமைகளை முன்னேற்றக் கூடியதாகவும் இருக்கும். கல்வியை அடிப்படையாகக் கொண்டு நாட்டை மேம்படுத்த முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்நியமங்கள் நிச்சயம் பக்கபலமாக அமையும்.

ஆகவே கல்வியை அடிப்படையாகக் கொண்டு நாட்டையும் மக்களையும் மேம்படுத்த முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைகளுக்கு பக்கபலமாக அமையும் வகையில் ஆசிரியர்களும் நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தி தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அது நாட்டின் துரித அபிவிருத்திக்கு வித்திடும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT