Saturday, April 27, 2024
Home » காசா போர் 4ஆவது மாதத்தை தொட்டது: உயிரிழப்புகள், பிராந்திய பதற்றம் உச்சம்

காசா போர் 4ஆவது மாதத்தை தொட்டது: உயிரிழப்புகள், பிராந்திய பதற்றம் உச்சம்

போர் பரவுவதை தடுக்க இராஜதந்திர முயற்சிகள்

by damith
January 8, 2024 6:00 am 0 comment

காசாவில் போர் நேற்றுடன் (7) 3 ஆவது மாதத்தை பூர்த்தி செய்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பதோடு இந்தப் போர் பலஸ்தீன நிலப்பகுதியை தாண்டி பரவுவதை தடுப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்தப் போர் லெபனான், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் செங்கடல் கப்பல் பாதையில் பரவுவதை தடுக்கும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த இராஜதந்திரியான ஜோசெப் பொரல் ஆகியோர் பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

லெபனான் எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான பரஸ்பரம் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பதோடு மேற்குக் கரையில் பெரும் கொந்தளிப்பு சூழல் நீடித்து வருகிறது. காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் வரை செங்கடலில் உள்ள கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதாக ஈரான் ஆதரவு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் உறுதியாக உள்ளனர்.

துருக்கி மற்றும் கிரேக்க நாடுகளுக்குச் சென்ற பிளிங்கன் ஜோர்தான் தலைநகர் அம்மானை சென்றடைந்துள்ளார். பொரல் லெபனானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மோதல் பரவுவதை தடுப்பதற்கே தாம் முன்னுரிமை அளித்து வருவதாக இந்த இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

“இந்த மோதல் பரவுவதை தடுப்பதில் நாம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம்’” என்று ஜோர்தான் செல்வதற்கு முன் கிரேக்கத்தில் இருந்து பிளிங்கன் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்தது தொடக்கம் பிளிங்கன் பிராந்தியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது இது நான்காவது முறையாகும்.

இந்தப் போரின் மூன்று மாத நிறைவையொட்டி கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகரி அது தொடர்பில் விபரங்களை வெளியிட்டிருந்தார். காசாவில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில் இஸ்ரேல் தனது படை நடவடிக்கையை தணிக்கும் சமிக்ஞைகளை அண்மைய நாட்களில் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவின் ‘இராணுவ கட்டமைப்பை’ முழுமையாக தகர்த்ததாக ஹகரி குறிப்பிட்டுள்ளது. அந்தப் பகுதியில் 8,000 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். “தற்போது மத்திய மற்றும் தெற்கு காசா பகுதிகளில் ஹமாஸை செயலிழக்கச் செய்வதில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்” என்று ஒன்லைன் வழியாக அளித்த விபரத்தில் அவர் கூறினார்.

“2024 ஆம் ஆண்டிலும் போர் தொடர்ந்து நீடிக்கும். வடக்கு மற்றும் தெற்கில் ஹமாஸை செயலிழக்கச் செய்யும் போர் இலக்குகளை அடையும் பொருட்டு நாம் தொடர்ந்து செயற்படுவோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் 1200 பேர் வரை கொல்லப்பட்டு 240 பேர் வரை பணயக்கைதிகளாக கடத்தப்பட்டதை அடுத்தே இந்தப் போர் வெடித்தது.

தொடர்ந்து 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் ஹமாஸ் பிடியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

எனினும் காசாவில் இஸ்ரேலிய தரைப்படை பலஸ்தீனன் போராளிகளின் எதிர்ப்பை தொடர்ந்து சந்தித்து வருவதோடு வடக்கு காசாவில் கட்டுப்பாட்டை கொண்டுவந்ததாக இஸ்ரேல் கூறியபோதும் அங்கு பலஸ்தீன போராளிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸை ஒழிப்பதாகக் கூறி இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கையில் காசா சுகாதார அமைச்சு போராளிகள் மற்றும் பொதுமக்களை பிரித்துக் கூறாதபோதும் கொல்லப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர். இந்தப் போரினால் காசாவில் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதோடு வீடுகள் மற்றும் சிவில் கட்டுமானங்கள் தகர்க்கப்பட்டு உணவு, நீர் மற்றும் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

“அவர்கள் தொடர்ந்தும் எம் மீது

குண்டு போடுகிறார்கள்”

தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் மோதல்கள் தீவிரம் அடைந்திருப்பதோடு அங்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றன. கான் யூனிஸில் அல் நப்ரிஸ் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் (06) நடத்திய வான் தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு கூறியது.

கான் யூனிஸின் அல் அமல் மருத்துவமனைக்கு அருகில் கடுமையான ஷெல் குண்டுகள் வீசப்பட்டு வருவதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஆளில்லா விமானங்களில் இருந்து குண்டு விசும் சத்தங்களுக்கு மத்தியில் கூர்மையான பாகங்கள் மருத்துவமனைக்குள் விழுந்து வருவதாகவும் அந்த அமைப்பு சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமடைந்ததாகவும் மத்திய காசாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டதாகவும் பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா கூறியது.

கான் யூனிஸில் பிணவறை ஒன்றுக்கு வெளியில் நின்று கொண்டிருந்த 11 வயது மஹ்மூத் அவாத் இஸ்ரேலிய வான் தாக்குதலில் தமது பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். “நாம் அல் ஷட்டி அகதி முகாமில் இருந்தபோது காசாவில் போர் நடப்பதாக அவர்கள் துண்டு பிரசுரங்களை வீசினார்கள், எனவே நாம் பாதுகாப்பான இடம் என்பதால் கான் யூனிஸுக்கு தப்பி வந்தோம், அவர்கள் தொடர்ந்தும் எம் மீது குண்டு போடுகிறார்கள்” என்று அந்த சிறுவன் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

நூறாயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ள காஸாவின் தெற்கு நகரமான ரபாவில் நேற்று முன்தினம் அதிகாலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஏ.எப்.பி செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பஞ்சம் தலைவிரித்தாடுவதாலும், நோய் பரவுவதாலும் தீவிரமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஐ.நா எச்சரித்துள்ள நிலையில், தொடர்ந்து தாக்குதல்களால் பொதுமக்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

மத்திய காசாவின் அகதிகள் முகாமிலிருந்து ரபாவுக்கு தப்பிச் சென்ற 60 வயதான அபு முகம்மது, காசாவின் எதிர்காலம் ‘இருண்டு கிடக்கிறது, மிகவும் சிரமமானது’ என்று கூறினார்.

அவ்வட்டாரத்தின் பெரும்பகுதி ஏற்கனவே சிதைந்துகிடக்கிறது. “காசா வாழ முடியாததாக மாறிவிட்டது” என்று ஐ.நா மனிதாபிமான தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் அறிவித்துள்ளார்.

தாக்குதல், ஊட்டச்சத்துக் குறைபாடு, சுகாதார சேவைப் பற்றாக்குறை ஆகியவை காசாவில் ‘1.1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை பயமுறுத்துகிறது’ என்று ஐ.நா குழந்தைகள் அமைப்பு எச்சரித்தது.

காசாவின் 36 மருத்துவமனைகளில் பெரும்பாலானவை தாக்குதல்களால் செயலிழந்துவிட்டதாகவும் எஞ்சியுள்ள மருத்துவ வசதிகளில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனினிலும் அறுவர் பலி

இதேவேளை ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் ஜெனின் நகரில் பொதுமக்கள் ஒன்று கூடல் ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று (07) காலை நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெனின் நகருக்கு அருகில் இருக்கும் தியாகிகள் சதுக்கத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் ஒன்றுகூடல் ஒன்றின் மீதே இஸ்ரேல் குண்டு வீசியதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி அனடொலு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் ஜெனின் அரச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெனின் நகர் மற்றும் அங்குள்ள அகதி முகாமில் இஸ்ரேலியப் படை நேற்று சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன்போது துப்பாக்கி மற்றும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த முகாம் மீது ஹெலிகொப்டர்கள் மூலமும் குண்டுகள் வீசப்பட்டபோதும் பாதிப்புகள் குறித்து உறுதி செய்யப்படவில்லை.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் கிழக்கு ஜெரூசலம் உட்பட மேற்குக் கரையில் குறைந்தது 325 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் மெரோன் மலையில் உள்ள வான் கண்காணிப்பு நிலையத்தின் மீது 60க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகளை பாய்ச்சியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ஹிஸ்புல்லாவின் வட்டாரத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதலைத் தொடுத்ததாகக் கூறியது.

பிராந்தியத்துக்கான தனது ஒரு வார பயணத்தை ஆரம்பித்திருக்கும் பிளிங்கன் கடந்த சனிக்கிழமை துருக்கி மற்றும் கிரேக்க தலைவர்களை சந்தித்த நிலையில் இஸ்ரேல், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை, ஜோர்தான், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா மற்றும் எகிப்துக்கு பயணிக்கிறார்.

ஸ்தான்பூலில் அவர் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகன் பிதான் மற்றும் ஜனாதிபதி தையிப் எர்துவானை சந்தித்தபோது, காசா மீதான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை தொடர்பில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். மற்ற நேட்டோ நாடுகளைப் போலன்று ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்காத துருக்கி மத்தியஸ்த நடவடிக்கைகளுக்கு முன்வருகிறது.

மறுபுறம் பெய்ரூட் சென்றிருக்கும் பொரல், போரில் லெபனானைச் சம்பந்தப்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார். “இராஜதந்திர வாயில்கள் திறந்தே உள்ளன. போர் மாத்திரம் தீர்வல்ல – அது மோசமான தீர்வு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT