Sunday, April 28, 2024
Home » ஐக்கியத்துக்கான வாய்ப்புகளை ஒருபோதும் தவற விடலாகாது!

ஐக்கியத்துக்கான வாய்ப்புகளை ஒருபோதும் தவற விடலாகாது!

by Rizwan Segu Mohideen
December 25, 2023 7:17 am 0 comment

நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியான நிலைப்பாட்டில் உள்ளார் என்பதற்கான மற்றொரு சான்றாக கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற முக்கிய சந்திப்பைக் குறிப்பிடலாம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டுமொரு தடவை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பு சிநேகபூர்வமான முறையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சாணக்கியன் இராசமாணிக்கம், ஜீ.கருணாகரன், டீ கலையரசன், குலசிங்கம் திலீபன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.இம்.சீ.எம்.ஹேரத், சுற்றாலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் உள்ளிட்டவர்களும் நல்லிணக்கம் தொடர்பிலான நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் அனைத்துத் தரப்பினருடனும், குறிப்பாக சிறுபான்மையினருடன், அதுவும் யுத்தத்தினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட சமூகமான தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டியது என்பதே தமிழர் தரப்பின் எண்ணமாகும். ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்ற நல்லெண்ண நடவடிக்ைககளை தமிழ் மக்கள் ஆதரவுக் கண்ணோட்டத்துடனேயே நோக்குகின்றனர்.

புலம்பெயர்வாழ் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் பேரவைக்கும், பௌத்த சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ‘இமயமலைப் பிரகடனம்’ ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த முயற்சியை ஜனாதிபதி மற்றும் மகாசங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருந்தனர். இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி நல்லிணக்கத்துக்கான தனது சமிக்ஞையை தமிழ்ப் பிரதிநிதிகள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை உருவாக்கி அதன் ஊடாகத் தமது அரசியலை முன்கொண்டு செல்வதிலேயே அதிகம் கவனம் செலுத்தியிருந்தனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து இனங்களையும் இணைத்துக்கொண்டு ஒற்றுமையுடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது.

இலங்கையில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களுக்கிடையில் பன்னெடுங் காலமாக நிலவி வருகின்ற முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. இதற்கான ஆரம்ப நடவடிக்கையாக சிறுபான்மை இனங்களின் மத்தியில் காணப்படுகின்ற சந்தேகங்கள் முதலில் அகற்றப்பட வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

எனவேதான் தமிழர் தரப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி சந்திப்புகளை நடத்தி வருகின்றார். கடந்த வியாழனன்று தமிழர் அரசியல் தரப்பினருடன் நடந்துள்ள சந்திப்புக்கு முன்னதாக பல்வேறு சந்திப்புகளை அவர் நடத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் அவர் நடத்திய சந்திப்பு, தமிழர் பேரவையுடனான சந்திப்பு ஆகியவற்றை இதற்கான உதாரணங்களாகக் கொள்ள முடியும். கடந்தகால கசப்புகளை மறந்து, புதிய சிந்தனைகளுடன் நல்லிணக்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்பமென்பதை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை தரப்புகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் சமாதான நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதே நாட்டின் சிறப்பான எதிர்காலத்துக்கு வழியமைக்கும்.

இனமுரண்பாடுகளாலும், மூன்று தசாப்தகால யுத்தத்தினாலும் எமது தாயகம் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அனைத்து வளங்களும் எமது நாட்டில் இருந்த போதிலும், இனங்களுக்கிடையில் ஐக்கியம் நிலவாத காரணத்தினால் அபிவிருத்தியில் இன்னும் தன்னிறைவைக் காண முடியாதிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் நாட்டின் இனஐக்கியம் பற்றியே முதலில் அனைத்துத் தரப்பினரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சமாதான முயற்சிகள் எந்தத் தரப்பிலிருந்து வந்தாலும், அதற்கான ஆதரவை வழங்குவதற்கு நாம் தவறக் கூடாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT