Monday, April 29, 2024
Home » Uber பெண்கள் மேற்கொள்ளும் பிரத்தியேக சவாரி சேவை

Uber பெண்கள் மேற்கொள்ளும் பிரத்தியேக சவாரி சேவை

- 2028 ஆம் ஆண்டளவில் இன்னும் ஐம்பதாயிரம் பேர் தொழிற்படையில் இணையவுள்ளனர்

by Rizwan Segu Mohideen
December 19, 2023 11:48 am 0 comment

இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற பிரத்தியேக சவாரி சேவை செயலியான Uber, இலங்கையில் பெண்களுக்கு வலுவூட்டி, பொருளாதார வாய்ப்புக்களை வளர்ப்பதில் பிரத்தியேக சவாரி சேவைத் தளங்கள் வகிக்கின்ற மாற்றத்திற்கான பங்களிப்பு குறித்த ஆழமான விடயங்களைக் கொண்ட முன்னோடி ஆராய்ச்சி அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது. “Ride-Hailing: A Platform for Women’s Economic Opportunity in Sri Lanka” (பிரத்தியேக சவாரி சேவை: இலங்கையில் பெண்களின் பொருளாதார வாய்ப்புக்கான ஒரு தளம்) என்ற தலைப்பிடப்பட்ட இந்த தொழில்துறை அறிக்கை, பெண்களை இன்னும் கூடுதலான அளவில் தொழிற்படையில் உள்வாங்கும் மாற்றத்திற்கான வகிபாகத்தில் இச்சேவைகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பது தொடர்பான ஒரு விரிவான கண்ணோட்டத்தை வழங்குகின்றது.      

பெண்கள் நிதியியல்ரீதியாக சொந்தக்காலில் நிற்பதற்கு தொழிற்படையில் இணைந்து அல்லது தற்போது ஆற்றுகின்ற பணியில் மேல் மட்டத்திற்கு முன்னேறுவதற்கு எவ்வாறு பிரத்தியேக சவாரி சேவைகள் அவர்களுக்கு முக்கியத்துவமாக உள்ளன மற்றும் அது தொடர்பான எதிர்வுகூறலை இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்துகின்றது:     

    • பெண்களுக்கான பிரத்தியேக சவாரி சேவை மூலமாக கொழும்பில் 2028 அளவில் தொழிற்படையில் பெண்களின் எண்ணிக்கை 8% ஆல் அதிகரிக்கும்
    • இன்னும் 50,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கொழும்பில் தொழிற்படையில் இணைந்து கொள்வார்கள்.
    • இந்த அதிகரிப்பானது நகரத்தின் பொருளாதாரத்தை 3% க்கு மேலாக மேம்படுத்தும்

Uber Sri Lanka சவாரி சேவைகளுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான கௌஷல்யா குணரட்ன அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இலங்கை தனது பொருளாதார வளர்ச்சிவாய்ப்பினை முழுமையாக அடையப்பெறுவதற்கு தொழிற்படையில் பெண்களின் மகத்தான அளவிலான பங்களிப்பு மிகவும் அவசியம். Oxford Economics மேற்கொண்டுள்ள இந்த ஆய்வு பிரத்தியேக சவாரி சேவை எவ்வாறு பாதுகாப்பாக, நம்பகமாக பிரயாணம் செய்வதற்கான தெரிவுகளை வழங்குகின்றது என்றும் பெண்களை அதிக அளவில் தொழிற்படைக்குள் உள்வாங்க இடமளிக்கின்றதென்றும் சுட்டிக்காட்டுகின்றது. Uber மற்றும் ஏனைய பிரத்தியேக சவாரி சேவைகள் பெண்கள் தினசரி பணிக்குச் செல்வதற்கு பாதுகாப்பான மற்றும் சௌகரியமான தெரிவை வழங்குவதன் மூலமாக ‘பாலின அடிப்படையிலான போக்குவரத்து இடைவெளியை’ தீர்ப்பதற்கு உதவுகின்ற என்பதைக் காண்பது மன மகிழ்ச்சியளிக்கின்றது. இலங்கையில் பெண்கள் இன்றும், எதிர்காலத்திலும் பொருளாதார வளர்ச்சியில் அங்கம் வகிக்க உதவுவதையிட்டு Uber பெருமை கொள்கின்றது,” என்று குறிப்பிட்டார்.      

Oxford Economics இன் முன்னணி பொருளாதார நிபுணரான பாலி கவுர் சோதி அவர்கள் கருத்து வெளியிடுகையில், “உலகெங்கிலும் ஊதியம் சம்பாதிக்கும் பணிகளில் பெண்களின் பங்களிப்பு ஆண்களை விடவும் குறைவாகவே காணப்படுகின்றது. பெண்கள் கல்வியறிவில் குறைந்தவர்கள் என்றோ அல்லது தகைமை அடிப்படையில் குறைந்தவர்கள் என்றோ அர்த்தமல்ல. குறிப்பாக, வளர்ச்சியடைந்து வருகின்ற சந்தைகளில் வீட்டுவேலைகள் மற்றும் குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் பெரும் சுமையை ஏற்பதே இதன் அடிப்படைப் பிரச்சினையாக உள்ளது. தொழிற்படையில் இணைந்து கொள்வதற்கு அல்லது ஏற்கனவே ஆற்றுகின்ற பணிகளில் மேல் மட்டத்திற்கு முன்னேறுவதற்கு பெண்கள் மத்தியில் போக்குவரத்து ரீதியாக காணப்படுகின்ற முட்டுக்கட்டைகளை அகற்றுவதற்கு தொழில்நுட்பத்தை உள்வாங்குவதற்கான ஆதாரபூர்வமான கொள்கை பரிந்துரைகளை இந்த அறிக்கை முன்வைக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் நேரடியாக களத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வு மூலமாக பெறப்பட்ட தகவல் விபரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் பிரத்தியேக சவாரி சேவை பழக்கவழக்கங்கள் தொடர்பில் முழுமையான புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்வதற்கு Uber தளத்தில் சவாரி செய்பவர்களிடம் Uber உடன் இணைந்து ஆய்வொன்றை Oxford Economics முன்னெடுத்துள்ளது. தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பில் பிரத்தியேக சவாரி சேவை எந்தளவு தூரம் தாக்கம் செலுத்துகின்றது என்பது தொடர்பான ஆர்வமூட்டும் விடயங்களை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது:

  • தொழிற்படையில் இணைந்து கொள்தல்: சவாரி செய்கின்ற பெண் பணியாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தொழிற்படையில் தாம் இணைந்துகொண்டு, இவ்வாறு இணைவதில் காணப்படுகின்ற முக்கியமான தடைகள் சிலவற்றை தாண்ட பிரத்தியேக சவாரி சேவை தமக்கு இடமளித்துள்ளதாக ஏற்றுக்கொண்டனர்.
  • பணி-குடும்ப சமநிலை: பணிக்கும், குடும்ப பொறுப்புக்களுக்குமிடையில் சமநிலையைப் பேணி, அவர்களுக்கு தேவைப்படுகின்ற நெகிழ்வுத்தன்மையை வழங்குவதில் பிரத்தியேக சவாரி சேவை ஒரு முக்கியமான காரணியாக உள்ளதாக ஆய்வில் கலந்து கொண்ட பணியாற்றும் பெண்களில் 60% க்கும் மேற்பட்டவர்கள் உணர்ந்துள்ளனர்.
  • பாதுகாப்பிற்கு முதலிடம்: வேலைக்குச் செல்வதற்கு பிரத்தியேக சவாரியை மேற்கொள்வதற்கு பிரதான காரணம் பாதுகாப்பே என பெண்களில் 82% பேர் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிச்சயமான போக்குவரத்து தெரிவுகளை உறுதி செய்வதில் பிரத்தியேக சவாரி எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை இது பிரதிபலிக்கின்றது.
  • வாய்ப்புக்களுக்கான அணுகல்: சவாரி செய்கின்ற பெண்கள் பத்தில் நான்கு பேர் என்ற அடிப்படையில் பிரத்தியேக சவாரி சேவை தமக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்களை பரந்த அளவில் அணுகவும், தொழிலில் முன்னுக்கு வரவும் இடமளிப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.  

உலகுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு வீதம் தாழ்வாகவே காணப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டில் உலகளவில் தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு 47% ஆக காணப்பட்டமையுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் இது வெறும் 32% ஆகவே காணப்பட்டது. பாதுகாப்பான போக்குவரத்து போதுமாக இல்லாமை மற்றும் பணி-குடும்ப ஏற்பாடுகளில் தற்போது உள்ள சமமற்ற நிலைமை ஆகியனவே பெண்களின் போக்குவரத்தில் காணப்படுகின்ற இரு பாரிய சவால்களாக உள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Uber ஆல் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன சர்வதேச ஆலோசனை சேவை நிறுவனமான Oxford Economics ஆனது இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு தொடர்பான முக்கியமான விடயங்களை இது சுட்டிக்காட்டியுள்ளதுடன், 2028 ஆம் ஆண்டளவில் தனிநபர்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரம் ஆகியவற்றால் அடையப்படக்கூடிய பொருளாதார அனுகூலங்களின் வளர்ச்சி வாய்ப்புக்கள் தொடர்பான மேலோட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது. பிரத்தியேக சவாரி சேவை கிடைக்கச்செய்வதை அதிகரிப்பதன் மூலமாக கிட்டும் பொருளாதார நன்மைகளை மதிப்பிடுவதற்காக Uber ஆல் பெயரிடப்படாத மற்றும் திரட்டிய தனியுரிமைத் தரவு விபரங்கள் Oxford Economics உடன் பகிரப்பட்டன.       

Uber தொடர்பான விபரங்கள்:
நகர்வின் மூலமாக வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதே Uber இன் இலக்கு. பொத்தான் ஒன்றை அழுத்துவதன் மூலமாக சவாரியொன்றை எவ்வாறு இலகுவாக மேற்கொள்ள முடியும் என்ற எளிய பிரச்சனைக்கான தீர்வை வழங்குவதற்காக 2010 ஆம் ஆண்டளவில் எமது சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 25 பில்லியனுக்கும் மேற்பட்ட சவாரிகளுடன், மக்களுக்கு தாங்கள் விரும்புகின்றவற்றை தமக்கு அருகிலேயே பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். நகரங்கள் மத்தியில் எவ்வாறு மக்கள், உணவு மற்றும் பொருட்கள் நகர்கின்றன என்பதை மாற்றியமைத்து, புதிய வாய்ப்புக்களுக்கு வழிகோலுகின்ற ஒரு தளமாக Uber மாறியுள்ளது. இலங்கையில் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Uber Rides சேவை, 40 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடைந்துள்ளதுடன், பன்முகப்பட்ட சேவைகள் மற்றும் தீர்வுகளுடன் தளத்தில் மேம்பட்ட அனுபவத்தையும் வழங்குகின்றது.

Oxford Economics தொடர்பான விபரங்கள்:
Oxford Economics என்பது உலகின் முன்னணி சுயாதீன பொருளாதார ஆலோசனை சேவை நிறுவனமாகும். 200 க்கும் மேற்பட்ட நாடுகள், 100 க்கும் மேற்பட்ட கைத்தொழில் துறைகள் மற்றும் 8,000 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் பிராந்தியங்களை உள்ளடக்கி, அதிகரித்து வரும் சிக்கல்கள் நிறைந்த மற்றும் நிச்சயமற்ற உலகில் விவேகமான மற்றும் பொறுப்பான வணிகத் தீர்மானங்களை விரைவாக மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு இடமளிக்கின்ற நுண்ணறிவுகளையும், தீர்வகளையும் நாம் வழங்கி வருகின்றோம். மேலதிக தகவல் விபரங்களுக்கு:
www.oxfordeconomics.com/ என்ற இணையத்தளத்தை பார்க்கவும். 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT