Home » இஸ்ரேலின் தொடரும் தாக்குதலுக்கு மத்தியில் காசாவில் போர் நிறுத்தத்திற்கு புதிய முயற்சி

இஸ்ரேலின் தொடரும் தாக்குதலுக்கு மத்தியில் காசாவில் போர் நிறுத்தத்திற்கு புதிய முயற்சி

பணயக்கைதிகளின் புதிய வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்

by damith
April 29, 2024 8:34 am 0 comment

காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் நிரம்பி வழியும் தெற்கு நகரான ரபா மீது இஸ்ரேல் படையெடுப்பு ஒன்றுக்கு தயாராகி வரும் நிலையில், தொடர்ந்து அச்சத்தில் இருப்பதாக அங்குள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரபாவுக்கு நெருக்கமாக இஸ்ரேல் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை குவித்திருப்பதோடு எகிப்து எல்லையை ஒட்டிய ரபா மீது தினசரி வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

“நாம் தொடர்ந்து அச்சத்திலும் தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் மற்றும் ஆக்கிரமிப்பு பயத்திலும் இருக்கிறோம்” என்று இஸ்ரேலிய வான் தாக்குதல்களால் வடக்கு காசாவில் இருந்து தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ரபா நகருக்கு தப்பி வந்த 30 வயதான நிதா சாபி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு ரபா நகரில் கடந்த சனிக்கிழமை (27) இரவு வீடு ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஏழு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை காலை ரபாவின் டெல் சுல்தான் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஆடவர் ஒருவர், அவரது மனைவி மற்றும் 12, 10 மற்றும் 8 வயதான மகன்மார் கொல்லப்பட்டதாக அபூ யூசப் அல் நஜ்ஜார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அயலவரான 4 மாதக் குழந்தை ஒன்று இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது.

தாக்குதலை அடுத்து உயிர் தாப்பியவர்களை தேடியபோதும் உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் தான் கிடைத்தன என்று அயலவரான அஹமது ஒமர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி கடந்த அரை ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,454 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 14,500க்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் 9,500 பெண்கள் அடங்குகின்றனர். தவிர, 77,575 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான இஸ்ரேலின் பதில் முன்மொழிவை ஆராய்ந்து வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்தம்பித்திருக்கும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் முயற்சியாக எகிப்து உயர்மட்ட தூதுக் குழு ஒன்று இஸ்ரேல் சென்றிருக்கும் நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை உறுதி செய்யப்படும் பட்சத்தில் ரபா மீதான படையெடுப்பு இடைநிறுத்தப்படும் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

‘பணயக்கைதிகளை விடுவிப்பதற்கே நாம் முன்னுரிமை அளிக்கிறோம். உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டால், படை நடவடிக்கை இடைநிறுத்தப்படும்’ என்று காட்ஸ் கூறினார்.

பணயக்கைதிகள் விவகாரம் இஸ்ரேல் அரசுக்கு இஸ்ரேலுக்குள் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றுக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் பல நகரங்களிலும் கடந்த சனிக்கிழமையும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

காசா போர் நிறுத்தத்திற்கான புதிய திட்டம் ஒன்று தொடர்பில் எகிப்து தூதுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக எகிப்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் முன்வைத்திருக்கும் புதிய முன்மொழிவு எகிப்து தூதுக் குழுவின் விஜயத்துடன் தொடர்புபட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஹமாஸின் முன்மொழிவுக்கான சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் உத்தியோகபூர்வ பதில் முன்மொழிவு கிடைக்கப்பெற்றிருப்பதாக காசாவில் உள்ள ஹமாஸ் அரசியல் பிரிவு பிரதித் தலைவர் கலீல் அல் ஹய்யா தெரிவித்துள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் 40 சிவிலியன் மற்றும் சுகவீனமுற்றிருக்கும் 40 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்களை விடுவிப்பது மற்றும் ஆறு வார போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இஸ்ரேலின் புதிய முன்மொழிவில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட பின் காசாவில் ‘நிலையான அமைதியை மீட்டெடுப்பது’ பற்றி பேசுவதற்கு இஸ்ரேல் விருப்பத்தை வெளியிட்டிருப்பதாக இரு இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி எக்சியோஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏழு மாதங்களாக நீடிக்கும் இந்தப் போரில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி இஸ்ரேல் வெளிப்படையாக பேசி இருப்பது இது முதல் முறை என்று அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் தூதுக் குழு ஒன்று இன்று எகிப்து தலைநகர் கெய்ரோ செல்லவிருப்பதாக ஹமாஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட போர் நிறுத்தம் பற்றி இந்தத் தூதுக் குழு பேசவிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட பிறிதொரு அறிவிப்பில், காசாவில் இயங்கும் மூன்று பிரதான போராட்டக் குழுக்களும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலின் முன்மொழிவு குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு பணயக்கைதிகளின் வீடியோவை ஹமாஸ் ஆயுதப் பிரிவு வெளியிட்டுள்ளது. இதில் கீத் சீகல் மற்றும் ஒம்ரி மிரான் என்பவர்களே அந்த வீடியோவில் இருந்ததாக பணயக்கைதிகள் மற்றும் காணாமல்போன குடும்பங்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் அமெரிக்க பிரஜையான சீகல் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலின்போது தனது மனைவி அவிவாவுடன் பலஸ்தீன போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். பின்னர் நவம்பரில் இடம்பெற்ற ஒரு வார போர் நிறுத்தத்தின்போது மனைவி விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு நீடிக்கும் சூழலில் அதனை களையும் முயற்சியில் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்க மத்தியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய துருப்புகள் முழுமையாக வாபஸ் பெறும் தமது நிபந்தனையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ஹமாஸ் கூறிவருகிறது. மறுபுறம் இந்த இரு நிபந்தனைகளையும் நிராகரிக்கும் இஸ்ரேல் ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டு காசாவில் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொடர்ந்து போர் நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது மற்றும் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான படையெடுப்புக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் எச்சரிக்கின்றன.

ரபா மீதான இஸ்ரேலின் படையெடுப்பை நிறுத்தும்படி அமெரிக்காவிடம் நேற்று கோரிக்கை விடுத்த பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், அது பலஸ்தீன வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக அமையும் என்று எச்சரித்தார்.

இஸ்ரேலின் பிரதான கூட்டாளியும் ஆயுதம் வழங்கும் நாடாகவும் இருக்கும் அமெரிக்கா மாத்திரமே இந்த குற்றத்தில் இருந்து இஸ்ரேலை தடுப்பதற்கு திறன் கொண்டிருப்பதாகவும் சவுதி அரேபியாவில் நேற்று ஆரம்பமான உலக பொருளாதார மாநாட்டில் பேசிய அப்பாஸ் குறிப்பிட்டார்.

காசாவுக்கு பெரும் அளவான உணவு உதவிகள் அடையாத பட்சத்தில், ‘அங்கு ஆறு வாரங்களுக்குள் பஞ்ச நிலை ஏற்படும்’ என்று ஐ.நா மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான இணைப்பகம் எச்சரித்துள்ளது.

இதனை உலக உணவுத் திட்ட அதிகாரி ஒருவரும் வலியுறுத்தியுள்ளார். ‘பஞ்ச நிலைமை ஒன்றை நாம் நெருங்கியுள்ளோம். பஞ்சத்துக்கான மூன்று வரம்புகளான உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உயிரிழப்பு அனைத்தும் அடுத்த ஆறு வாரங்களில் மீறப்படும் என்பதற்கு நியாயமான ஆதாரங்கள் உள்ளன’ என்று உலக உணவுத் திட்டத்தின் ஜெனீவா பணிப்பாளர் கியான் காரோ சிறி தெரிவித்துள்ளார்.

காசாவில் பஞ்ச நிலைமை விரைவடைந்திருப்பதாகவும் மே மாதத்தில் அது வடக்கு காசாவில் ஏற்படக்கூடும் என்றும் கடந்த மார்ச் மாதம் வெளியான ஐ.நா ஆதரவு பெற்ற அறிக்கை ஒன்று குறிப்பிட்டிருந்தது.

இஸ்ரேல் காசாவுக்கான உதவிகளை தொடர்ந்து தடுத்து வருவதாக ஐ.நா அதிகாரிகள் மற்றும் தொண்டு அமைப்புகள் கூறிவருகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT