Saturday, April 27, 2024
Home » பூநகரியில் 20,000 ஏக்கரில் புதிய மின் உற்பத்தி திட்டம்

பூநகரியில் 20,000 ஏக்கரில் புதிய மின் உற்பத்தி திட்டம்

நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

by mahesh
December 13, 2023 9:30 am 0 comment

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு நேற்று வருகை தந்து முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் பங்கேற்ற ஜனாதிபதி,அதன் போது ஜே. வி. பி எம்.பி அனுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மின் உற்பத்தி தொடர்பான கொள்கைகளுக்கிணங்க 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் புதிய திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அனுர குமார திசாநாயக்க எம்பி அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

1987 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 120 பில்லியன் ரூபாவை மாத்திரமே நாடு நேரடி முதலீடாக பெற்றுக்கொண்டுள்ளது. எனினும், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் குறுகிய காலப்பகுதியில் இலங்கையை விட அதிகமாக பல பில்லியன் நேரடி முதலீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.

இலங்கையின் பொருளாதார கொள்கைக்கமைய இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் பொருளாதார கொள்கைகளை முன்னெடுக்கவில்லை. எனினும் பூகோள அரசியல் காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்த நாடுகள் இலங்கையில் முதலீடுகளை முன்னெடுத்துள்ளன.

கிளிநொச்சி பூநகரியில் 700 மெகாவோட் மின்னுற்பத்தி திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்துக்கு 50 ரூபா என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மின்னுற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிடுகின்றது. நாட்டு மக்களும் அது தொடர்பில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக அராசாங்கம் செயற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி – பூநகரியில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய மின்திட்டங்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மின்கொள்கைகளுக்கிணங்க தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.புதிய திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துக்களை முன்வைத்த அனுரகுமார திஸாநாயக்க எம் பி நிலக்கரி, எரிபொருள் கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.மோசடி செய்தவர்கள் ஜனாதிபதியின் அமைச்சரவையிலேயே உள்ளார்கள். அத்துடன் பூநகரி மின்னுற்பத்தி திட்டத்தில் 500 மெகாவோட் அலகை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த நாடு என்ன ஆட்சியாளர்களின் சொத்தா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அவருக்கு மீண்டும் பதிலளித்த ஜனாதிபதி,

அமைச்சர்கள் மாத்திரமல்ல ஒருசில அரச அதிகாரிகளும் பணம் சம்பாதிப்பதற்காக முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள் என்றார்.

மீண்டும் கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க எம். பி ஒருசில மோசடியான அதிகாரிகளே மோசடியான அமைச்சர்களுக்கும் தேவைப் படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT