– அறிக்கை கோருகிறது ஆணைக்குழு
நாடளாவிய ரீதியில் நேற்று (09) ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோக கட்மைப்பில் மின்னல் தாக்கியதன் காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (09) மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
தடைப்பட்ட மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை முறையாக மீட்டெடுத்ததுடன், நேற்றிரவு 11.00 மணியளவில் இலங்கை மின்சார சபை நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட இந்த மின்சாரத் தடை தொடர்பில் மின்சார அமைச்சும், இலங்கை மின்சார சபையும் இணைந்து இருவேறு விசாரணைகளை நடத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நேற்றைய தினம் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பிற்பகல் உரையாற்றவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.