Saturday, April 27, 2024
Home » ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்

ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்

- அதற்கான வசதிகளை வழங்க அரசாங்கம் தயார்

by Rizwan Segu Mohideen
November 23, 2023 8:24 pm 0 comment

– ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல. எனவே, புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் அவர்களுக்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை இந்நாட்டில் நிறுவ திட்டமிட்டிருப்பதாகவும், தற்போதுள்ள விவசாய ஆய்வு நிறுவனம் மறுசீரமைத்து, நவீனமயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) நடைபெற்ற 25 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக சேவையாற்றிய ஏற்றுமதியாளர்களைப் பாராட்டும் வகையில் இலங்கை ஏற்றுமதிச் சபையினால் வருடாந்தம் மேற்படி விருது விழா ஏற்பாடு செய்யப்படுவதோடு, 2021/22 மற்றும் 2022/23 ஆம் வருடங்களில் இலங்கையின் சிறந்த ஏற்றுமதியாளர் இம்முறை பாராட்டப்பட்டனர்.

அனைத்து நிதித்துறைகளையும் உள்ளடக்கி 13 விருதுகளும் உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்காக 15 விருதுகளும் இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன.

மேலும், விண்ணபதாரர்களின் செயற்திறன் அடிப்படையில் நடுவர்கள் குழுவினால் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைவாக தகுதி பெற்ற பிரிவுகளுக்காக இம்முறை விருது வழங்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

இதன்போது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் நினைவு சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

கடந்த இரு வருடங்கள் நம் அனைவருக்கும் மிகக் நெருக்கடியானதாக அமைந்திருந்தது. நாட்டில் பொருளாதார வளர்ச்சியின்மையும், வர்த்தகத் துறைக்கும் நாட்டுக்கு சாதகமான நிலைமை காணப்படாமையும் அதற்கான காரணமாக அமைந்தது.

சுதந்திரத்திக்குப் பின்னர் இலங்கைக்கு ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 04 சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன.

சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் 60,70 ஆம் நூற்றாண்டுகளின் தசாப்தங்களின் ஆரம்ப காலத்தில் ஏற்றுமதி பொருளாதாரத்துடன் அவர்களின் பயணத்தை தொடர்ந்தனர். நாம் பொதுவுடமை பொருளாதார கொள்கையை பின்பற்றியதால் நமக்கான வாய்ப்புக்கள் நழுவிச் சென்றன.

அதேபோல், 80 ஆம் தசாப்தத்தின் ஆரம்ப பகுதியில் நாம் ஏற்றுமதி பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தினோம். அதற்கிடையில் யுத்தம் வந்தமையால் எமது வளங்களை யுத்த வெற்றிக்காக பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்த நேரந்திலும் நமக்கான வாய்ப்பு இல்லாமல் போனது.

யுத்தம் நிறைவுற்ற பின்னர் அடுத்த வாய்ப்பு கிட்டியது இருப்பினும் அந்த நேரத்தில் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத பொருட்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டது. இன்று சிங்கப்பூர், மலேசியா, இந்துநேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் எம்மை கடந்துச் சென்றுள்ளன.

அதனால் இதுவே நமக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். கடந்த நெருக்கடியான காலத்தில் இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் பலரும் நாட்டை விட்டுச் சென்றனர். அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்பினாலும் அவர்களுடைய இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் இலங்கைக்கு வரப்போவதில்லை.

அவ்வாறான நிலைமைகளை மாற்றியமைக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண வரவு செலவுத் திட்ட இடைவெளி, வர்த்தக நிலைமை என்ற இரண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தாக்கம் செலுத்த கூடியவையாகும். வரவு செலவுத் திட்ட இடைவெளி தொடர்பில் அவதானம் செலுத்தும் போது வரி வருமானத்தை அதிகரித்து கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது பணம் அச்சிட முடியாது. வெளியிலிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

இம்முறை வரவு செலவுத் திட்டமே நாம் கடன் பெற்றுக்கொள்ளாத முதலாவது வரவு செலவுத் திட்டமாகும். நாம் கடன் பெற்றுக்கொள்ளாமல் எமது செலவுகளை இவ்வாறு நிவர்த்திப்பது. அதற்காக “வற்” வரியை அதிகரிக்க நேரிடும். அதற்காக எம்மை விமர்சித்தாலும் எதிர்காலத்தில் அதுபற்றிய புரிதல் ஏற்படும்.

அத்தோடு நமது ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். தொழிற்சாலைத் துறையினையும் வலுவூட்ட வேண்டும். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முதல் முறையாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய வலுவூட்டலுக்காக தேசிய வலுவூட்டல் ஆணைக்குழுவை நிறுவ எதிர்பார்க்கிறோம். அதேபோல் ஏற்றுமதிக்கு ஒத்துழைப்பு கைக்கொடுப்பதற்கான பல்வேறு துறைகள் காணக்கின்றன.

ஆனால் தற்போதுள்ள ஏற்றுமதித் துறைகளை மேம்படுத்துவது மாத்திரம் இதற்கு போதுமானதாக இருக்காது. புதிய ஏற்றுமதி துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதற்குப் புதிய முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனுராதபுரம் காலத்திலிருந்து இலங்கை விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றது. முதலில் அரிசி பின்னர் பலசரக்குப் பொருட்கள், குறிப்பாக கறுவா, அதைத் தொடர்ந்து தேயிலை, இறப்பர் மற்றும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டது, ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரை இதைத் தொடர்ந்தோம். ஆனால் நாம் தொடரந்தும் விவசாயப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளர்களாக இல்லை. ஆனால் இது நமக்குப் பரிச்சயமான துறை. இலங்கையின் மூலதனத் தளம் வர்த்தகத்திலிருந்து அன்றி, விவசாயத்தில் இருந்தே கட்டியமைக்கப்பட்டுள்ளது.

அதற்கான திறன் எம்மிடம் உள்ளது. எனவே, நாம் அதிலிருந்து விலகி இருக்கக் கூடாது. விவசாயத்திற்குத் தேவையான நிலத்தை இப்போது நீங்கள் தேடிக்கொள்ளலாம். மேலும், விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் இணைக்கப்படுவதால், இளைஞர்களும் அதில் இணைவார்கள் என நம்புகிறோம். இலங்கையில் விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவும் திட்டமிட்டுள்ளோம், தற்போதுள்ள விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. நீங்களும் இதற்கு ஆதரவு வழங்கலாம். இந்தச் செயற்பாடுகளை தொடருமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.”என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, கனக ஹேரத், அரவிந்த குமார், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எம். எம். நைமுதீன் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி கிங்ஸ்லி பர்னார்ட் உட்பட வெளிநாட்டுத் தூதுவர்கள், அரச அதிகாரிகள், ஏற்றுமதித் துறையில் உள்ள வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT