Sunday, April 28, 2024
Home » மலையகக் கல்வி ஒரு வரலாற்று நோக்கு

மலையகக் கல்வி ஒரு வரலாற்று நோக்கு

by Rizwan Segu Mohideen
November 2, 2023 2:06 pm 0 comment

இலங்கையின் கல்வி வரலாறானது பண்டைய பௌத்த கல்வி மரபுகளுடன் தொடர்புபட்டதாகும். அந்தவகையில் பண்டைய இலங்கையில் நிலவிய பௌத்த கல்வி முறைமையானது குருகெதர எனும் குருவின் வீடு, பௌத்த ஆலயங்கள் மற்றும் பிரிவெனாக்கள் ஆகிய கல்வி நிறுவனங்களை மையமாகக் கொண்டே ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் உயர் கல்வி ஆகியவற்றை வழங்கின. இதனைத் தொடர்ந்து 1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றியதோடு தேசிய கல்வி முறைமையொன்று இலங்கையில் தோற்றம் பெற்றது.

அதற்கமைவாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற வெளிநாட்டவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட குடியேற்றவாதக் கல்வி முறைமையொன்று உருவானது. போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆகியோர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை மட்டும் ஆட்சி செய்தமையால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஆங்கிலேயர் இலங்கை முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தமையாலும், பிரித்தானியாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் விளைவாக தோன்றிய தொழிற்சாலை ஊழியர்களை உற்சாகமூட்டுவதற்காக தேநீர் போன்ற சூடான பானமொன்றின் தேவையை உணர்ந்தமையாலும் கோப்பி மற்றும் தேயிலை போன்ற பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் அதிக ஆர்வம் காட்டினர்.

கோப்பி செய்கை பாதிக்கப்பட்டமையால் மாற்றுப் பயிராக தேயிலை அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு நிரந்தரமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அப்போது இலங்கையர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு விருப்பம் காட்டாமையினால் 19 நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தென் இந்தியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டு தேயிலை பெருந்தோட்டங்களில் குடியேற்றப்பட்டனர். இவர்களே இன்று மலையக மக்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் முதலாளிகளின் பிடிக்குள் சிக்கித் தவித்தனர். அவர்களது கல்வி புறக்கணிக்கப்பட்டிருந்ததோடு தங்களுக்கான பாடசாலைகளை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய நிலைமையில் இந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக தோற்றம் பெற்ற பாடசாலைகள் பெருந்தோட்டப்புறப் பாடசாலைகள் என அழைக்கப்படுவதோடு, இன்றைய இலங்கையின் கல்வி முறைமையில் ‘பெருந்தோட்டப் புறப் பாடசாலைகள்’ என விசேடமாக இனங்காணப்படுகின்றன. தற்சமயம் 833 பாடசாலைகள் இலங்கையில் காணப்படுகின்றன.

இது தொடர்பான செய்திகள்...

பெருந்தோட்ட முகாமைத்துவத்துக்குட்பட்ட 1870 – 1970 வரையான காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு வகையான பாடசாலைகள் தோட்டங்களில் நிறுவப்பட்டிருந்தன. முதலாவது வகை கங்காணிமார்களது பிள்ளைகளுக்கும் தோட்ட உத்தியோகத்தர்களுடைய பிள்ளைகளுக்கும் கல்வி கற்பதற்காக நிறுவப்பட்டவைகளாகும். இங்கு கங்காணியின் எழுதுவினைஞர் ஆசிரியராக கடமையாற்றினார். இவரால் வாசிப்பு, எழுத்து, எண் மற்றும் சிறிதளவு ஆங்கிலம் ஆகியன கற்பிக்கப்பட்டன. இரண்டாவது வகை ‘லயன் பாடசாலைகள்’ எனப்படும் தொழிலாளர்களது பிள்ளைகளுக்கும் தொழிலாளர்களுக்குமாக நிறுவப்பட்டப் பாடசாலைகளாகும். இங்கு கங்காணிமார் ஆசிரியர்களாக கடமையாற்றி ஒழுக்க விதிகள், வாசிப்பு, கருத்து மற்றும் செய்யுள்களை ஒப்புவித்தல் ஆகியன கற்பிக்கப்பட்டன. இவ்விரு பாடசாலைகளையும் தவிர விசேட நாட்களில் மட்டும் அண்ணாவிமாரால் நடத்தப்பட்ட கூத்துப் பாடசாலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வந்தன.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலப்பகுதியில் குறிப்பாக 1904 ஆம் ஆண்டில் இலங்கையில் 898 தோட்டங்கள் இருந்தன. அதேநேரம் இங்கு காணப்பட்ட 179 பாடசாலைகளில் 120 பாடசாலைகள் லயன் பாடசாலைகளும் அரச உதவி பெற்ற பாடசாலைகள் 59 ஆகவும் காணப்பட்டன. இது பெரும்பாலான தோட்டங்களில் பாடசாலைகள் காணப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டின. அத்துடன் இப்பாடசாலைகளில் கற்பித்த பெரும்பாலான ஆசிரியர்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களாகவும் அவர்களது கல்வித் தகைமை மிகக் குறைவானதாகவும் காணப்பட்டது. இவர்கள் ஆசிரியராகவும் எழுதுவினைஞராகவும் கடமையாற்றினர். 1923 ஆம் ஆண்டிற்கும் 1939 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 272 ஆக காணப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 820 ஆக அதிகரித்தது. இவ்வாறு பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படாமை ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. இதற்காக கண்டியிலிருந்த இந்திய அரசாங்கத்தின் முகவரின் உதவியுடன் இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். 1943 ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கராவினால் இலவச கல்வி ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு பாடசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. ஆனால் தோட்டப் பாடசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்படவில்லை. இது பெருந்தோட்ட மக்களின் கல்வி உரிமை புறக்கணிக்கப்பட்டமையை எடுத்துக் காட்டுகிறது. இதே காலப்பகுதியில் 284,000 பெருந்தோட்ட மாணவர்களில் 47 சதவீதமானவர்கள் பாடசாலை செல்லவில்லை.

இலங்கையில் 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்தச் சட்டத்தினூடாக தனியாருக்கும் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கும் சொந்தமான பெருந்தோட்டங்கள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டன. ஆனால் தோட்டப் பாடசாலைகளோ, ஆசிரியர்களோ அரசினால் பொறுப்பேற்கப்படவில்லை. இதனால் 1975 தொடக்கம் 1980 வரையான காலப்பகுதியில் ஆசிரியர் பற்றாக்குறை, நிர்வாகச் சீர்குலைவு, ஆசிரியர் வரவு குறைந்தமையால் தோட்டப் பாடசாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

எனவே, 1870 தொடக்கம் 1970 வரையான பெருந்தோட்ட நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் பாடசாலைகள் இயங்கியதோடு ஆசிரியர் பற்றாக்குறை, தகைமைப் பெற்ற ஆசிரியர்கள் இல்லாமை, பௌதீகவள பற்றாக்குறை போன்ற பாரிய நெருக்கடிகளுடன் இயங்கி வந்தன.

பெருந்தோட்டப் பாடசாலைகள் 1970 தொடக்கம் 1989 வரையான காலப்பகுதியில் அரசினால் படிப்படியாக பொறுப்பேற்கப்பட்டன. 1980 களின் ஆரம்பத்தில் பெரும்பாலான தோட்டப் பாடசாலைகளில் ஓராசிரியர் பாடசாலைகளாகவே காணப்பட்டன. ஆசிரியர் மாணவர் விகிதம் 1:100 ஆக காணப்பட்டது. அதிகமான ஆசிரியர்கள் க.பொ.த. சாதாரணதரம் வரையிலான குறைந்த தகைமைகளைக் கொண்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் ஆசிரியர் பயிற்சியினை நிறைவு செய்திருக்கவில்லை.

இக்காலப்பகுதியில் பெருந்தோட்டப்புற பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. 1986 தொடக்கம் 1989 வரையான காலப்பகுதியில் 2052 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மலையகத்தில் காணப்படும் 833 பாடசாலைகளில் சுமார் 400 இற்கும் சற்று அதிகமான பாடசாலைகள் பௌதீகவள அபிவிருத்தியைப் பெற்றுக் கொண்டன. மேலும் இக்காலப்பகுதியில் அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு, 1987 தொடக்கம் உருவாக்கப்பட்ட மாகாண அரசாங்கங்கள் மூலமாகவும் மலையகப் பாடசாலைகள் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி செய்யப்பட்டன. அதேபோல் அரசின் ஜனசவிய போன்ற பொதுவான கொள்கைத் திட்டங்கள் ஊடாகவும் குறிப்பிடத்தக்களவு ஆசிரிய நியமனங்களும் கிடைக்கப்பெற்றன.

தற்கால மலையக கல்வி வளர்ச்சி

மலையகக் கல்வி வளர்ச்சியின் தற்காலத்தினை 1990 தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியை கொண்டதாக வரையறுத்துக் கொள்ளலாம். இக்காலப்பகுதியில் பல்வேறுபட்ட துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளன. அவற்றை முதலில் மலையக ஆசிரியர்கள் தொடர்பிலான வளர்ச்சிப் பற்றி நோக்கலாம். 1970களில் பாடசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்படும் போது பெரும்பாலான ஆசிரியர்கள் பயிற்றப்படாதவர்களாக இருந்தனர். இந்நிலைமையில் இவர்களுக்கான பயிற்சியை மலையகப் பிரதேசத்திலேயே பெற்றுக் கொடுக்க மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் பண்டாரவளை சிங்கள மொழி மூல ஆசிரியர் கலாசாலையில் தமிழ் பிரிவினை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கும், பின்னர் கொட்டகலை யதன்சைட்டிற்கும் மாற்றப்பட்டு இன்று கொட்டகலை கொமர்ஷல் என்னுமிடத்தில் இயங்கி வருகின்றது. இக்கலாசாலையில் இன்று வரை சுமார் 6000 வரையிலான ஆசிரியர்கள் பயிற்றப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் ஆசிரியர் பயிற்சியில் மலையகத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்ட மற்றுமொரு நிறுவனம் ஸ்ரீபாத தேசிய கல்விக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1992 ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இன்றுவரை சுமார் 5000 வரையிலான ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர இக்காலப்பகுதியில் அரசியல் பேரம்பேசல் மூலமாக பல ஆசிரியர் நியமனங்கள் மலையகப் பாடசாலைகளுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இவ்வாறாக மலையகப் பாடசாலைகளுக்கும் அதே சமூகத்தைச் சேர்ந்த அதிபர் மற்றும் ஆசிரியர் சமூகம் ஒன்று உருவானமை (சுமார் 15,000 ஆசிரியர்கள்) மலையகக் கல்வி வளர்ச்சியை எடுத்துக் காட்டும் ஒரு முக்கியமான அம்சமாகும்.

பாடசாலை கல்வி முறைமையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் குறிப்பிடக்கூடிய மற்றுமொரு அம்சமாக இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர்கள் கல்வியாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர்கள் சேவை போன்றவற்றில் மலையகத்தவர்களில் கனிசமான அளவினர் இடம்பிடித்துள்ளமையைக் குறிப்பிடலாம். உதாரணமாக இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 35 பேரும் இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவையில் 15 பேரும் உள்ளனர். அதேபோல் மலையகத்தைச் சேர்ந்த சுமார் 10 பேர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும், மூன்று பேர் இலங்கை நிர்வாக சேவையிலும் , மூன்று பேர் இலங்கை திட்டமிடல் சேவையிலும், நான்கு பேர் நீதிபதிகளாகவும் உயர் பதவிகளை வகிக்கின்றனர். இவை தவிர குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் சட்டத்தரணிகளாகவும், பொறியியலாளர்களாகவும், வைத்தியர்களாகவும் உள்ளனர். மேலும் குறிப்பிடத்தக்க சிறிய எண்ணிக்கையானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து முக்கியமான பதவிகளில் உள்ளனர். உதாரணமாக ஹட்டன் டிக்கோயா பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் தொழில் புரிவதைக் குறிப்பிடலாம். மேலும் இக்காலப்பகுதியில் கல்விகற்ற மலையகத்தவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் மலையக நகரங்கள் மற்றும் கொழும்பு போன்ற நகர் புறங்களில் வர்த்தகர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் இருக்கின்றனர். இவை மலையக கல்வி வளர்ச்சியினை எடுத்துக் காட்டுவதாக அமைந்தாலும் மலையக சனத்தொகையுடன் ஒப்பிடும்போது இவை போதுமானளவு திருப்தியளிக்கக் கூடியதல்ல எனும் கருத்தாடல் பல்வேறு மட்டங்களில் இடம்பெறுவதும் சுட்டிக்காட்டத்தக்கது.

மலையகத்தின் கல்வித்துறை வளர்ச்சி தொடர்பாக பேசும் போது, பாடசாலைகளின் பௌதீகவள அபிவிருத்தி தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலைமைகளும் முக்கியமானது. அந்த வகையில் 1990 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியளிப்பு காரணமாக பல பாடசாலைகளின் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று பதுளை மாவட்டத்தில் குறிப்பாக முன்னெடுக்கப்பட்ட ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டம், நுவரெலியாவில் குறிப்பாக கொட்டகலை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட புவுணு அபிவிருத்தித் திட்டம் மற்றும் மலையகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் பாடசாலைகளின் பௌதீக வளங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன. மேலும் காலத்துக்குக் காலம் கல்வி அமைச்சு முன்னெடுத்த நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றினூடாக பாடசாலை பௌதீக வளங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன. கல்வி அமைச்சு முன்னெடுத்த நவோதய பாடசாலைகள், மகிந்தோதய 1000 பாடசாலைகள், அண்மையிலுள்ள ‘பாடசாலை சிறந்த பாடசாலை’ போன்ற தேசிய மட்டத்திலான அபிவிருத்தித் திட்டங்களால் குறிப்பிடத்தக்களவு எண்ணிக்கையான பாடசாலைகள் அபிவிருத்தியடைந்துள்ளன.

மலையகத்தின் பெருமளவிலான பாடசாலைகள் ஆரம்பக் காலங்களில் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளாகவே காணப்பட்டன. 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பல பாடசாலைகள் கனிஷ்ட இடைநிலை மற்றும் சிரேஷ்ட இடைநிலை வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. இது மாணவர்கள் தங்களுடைய பிரதேசங்களிலேயே உயர்கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதில் சில பாடசாலைகள் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவினைக் கொண்ட பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மலையகக் கல்வியில் மற்றுமொரு வளர்ச்சிப்படியாக குறிப்பிட வேண்டியது, பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பாகும். அண்மைக் காலங்களில் ஏறத்தாள 500 க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றனர். ஆனால் இவ்வெண்ணிக்கை மலையக மக்களின் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது திருப்தியளிக்கக் கூடியதல்ல என்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

பொன். இராமதாஸ் சிரேஷ்ட விரிவுரையாளர்
கல்விப்பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT