Sunday, April 28, 2024
Home » காசாவில் முன்னேறும் இஸ்ரேலிய படைகளுடன் பலஸ்தீன போராளிகள் பல முனைகளில் மோதல்

காசாவில் முன்னேறும் இஸ்ரேலிய படைகளுடன் பலஸ்தீன போராளிகள் பல முனைகளில் மோதல்

மருத்துமனைகளுக்கு அருகில் குண்டு வீச்சு: போர் நிறுத்தத்தை மறுத்தார் நெதன்யாகு

by mahesh
November 1, 2023 6:00 am 0 comment

காசாவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராளிகளுக்கு இடையிலான தரைவழி மோதல் உக்கிரம் அடைந்திருப்பதோடு இஸ்ரேல் அந்தப் பகுதி மீதான வான் தாக்குதல்களை இடைவிடாது தொடர்ந்து நடத்தி வருகிறது. மனிதாபிமான நெருக்கடியை தவிர்ப்பதற்கான போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்தின் காசா மீதான தரைவழி நடவடிக்கையில் அது பிரதானமாக சுரங்கப்பாதைகளை இலக்கு வைத்தே தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நான்காவது நாளாக நேற்று இடம்பெற்ற தரைவழி தாக்குதல்கள் வடக்கு காசாவை இலக்கு வைத்தே இடம்பெற்றது. இதன்போது ஏவுகணை மற்றும் ரொக்கெட் ஏவு நிலைகள் மற்றும் நிலத்தடி சுரங்கப்பாதைகளில் உள்ள இராணுவ நிலைகள் உட்பட சுமார் 300 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதில் நடவடிக்கையாக ஹமாஸ் போராளிகள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய படைகள் காசாவின் வடமேற்கு பகுதியை இலக்குவைத்து வான், கடல் மார்க்கமாகவும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருந்தது.

உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் அச்சம் மற்றும் இந்தப் போர் பிராந்தியத்திற்கு பரவும் அபாயம் காரணமாக காசா மீதான தரைவழி தாக்குதலை தாமதப்படுத்தும்படி அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் கேட்டிருந்தன.

இந்நிலையில் இஸ்ரேலின் செங்கடல் நகரான ஈலட்டில் வான் வழி எச்சரிக்கை சைரன் ஒலி நேற்று எழுப்பப்பட்டது. வான் வழி இலக்கு ஒன்றை சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் இராணுவம் பின்னர் தெரிவித்தது. “பொதுமக்களுக்கு அச்சுறுத்தலோ, ஆபத்தோ ஏற்படவில்லை” என்று அது கூறியது.

யெமனின் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியாகக் கூறிய நிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த ஆளில்லா விமானம் யெமன் அரசுக்கு சொந்தமானது என்று ஹூத்தி அரசின் பிரதமர் அப்தலசிஸ் பின் ஹப்து தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் 2014 இல் யெமன் தலைநகரை கைப்பற்றியதோடு அந்நாட்டின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய இராணுவம் காசாவில் வடக்கு மற்றும் தெற்குக்கு இடையிலான பிரதான வீதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் இரு திசைகளில் இருந்து காசா நகர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஹமாஸ் பிடியில் இருந்த படை வீரர் ஒருவரை விடுவித்ததாக இஸ்ரேல் கூறியது. எனினும் அதனை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது.

240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறும் நிலையில் ஹமாஸ் அமைப்பு இதுவரை நால்வரை விடுவித்துள்ளது. இதில் பெரும்பாலான பணயக்கைதிகள் சுரங்கப்பாதைகளில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

வடக்கு காசா பக்கமாக படையெடுத்த இஸ்ரேலிய படையுடன் நேற்று மோதலில் ஈடுபட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது. இதில் ஹமாஸ் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையான அல் யாஸீன் 105 ஏவுகணை மூலம் நான்கு வாகனங்கள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

வடக்கு காசாவில் இரு இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியப் படை தற்போது சலஹா அல் தீன் விதியில் இருப்பதாகவும் அந்தப் படை காசா கரையை ஒட்டிய அல் ரஷீத் வீதியை அடைய முயல்வதாகவும் காசா உள்துறை அமைச்சர் இயாத் அல் பசூம், அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

“ஆக்கிரமிப்புப் படை வடக்கு காசாவை தெற்கில் இருந்து பிரிப்பதற்கு முயன்று வருகிறது” என்று அல் பசூம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காசாவில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 8,525 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,542 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். 2.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காசாவில் 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் சூழலில் அங்கு மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தமும் அதிகரித்துள்ளது. எனினும் இஸ்ரேல் போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணங்கப்போவதில்லை என்றும் ஹமாஸை அழித்தொழிப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“போர் நிறுத்தத்திற்கான அழைப்பு என்பது ஹமாஸிடமும் பயங்கரவாதிகளிடமும் காட்டுமிராண்டிகளிடமும் இஸ்ரேலை சரணடையச் சொல்லும் அழைப்பாகும். அது நடக்காது” என்று கடந்த திங்கட்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய நெதன்யாகு தெரிவித்தார்.

பேரழிவுக்கு மேல் பேரழிவு

இஸ்ரேல் வான் மற்றும் தரைவழியால் தொடர்ந்து தாக்குதல் நடத்தி உணவு, நீர் மற்றும் எரிபொருளை முடக்கிய இருக்கும் நிலையில் காசாவில் உள்ள மக்கள் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டு வருகின்றனர்.

வடக்கு காசாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனைக்கு வெளியில் இஸ்ரேல் திங்கள் இரவு தாக்குதல் நடத்தியது. இதனால் மருத்துவனையில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. எரிபொருள் தீர்ந்துவரும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் 250 பலஸ்தீனர்களின் உயிர்கள் ஆபத்துக்குள்ளாகி இருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

“எரிபொருள் தீர்வதால் மின்சாரம் இல்லாமல்போவதோடு மின்சாரம் இல்லாததால் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சத்திரகிச்சை பிரிவில் காயமடைந்த நிலையில் இருக்கும் பல நோயாளிகள் உயிரிழப்பார்கள்” என்று மருத்துவர் மொயீன் அல் மஸ்ரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய தரைவழி தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் உடல்களை மக்கள் கழுதை வண்டியில் ஏற்றி இந்தோனேசிய மருத்துவமனைக்கு எடுத்துவரும் காட்சிகள் அடங்கிய படங்கள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. இதன்போது பல டஜன் பலஸ்தீனர்கள் “அல்லாஹு அக்பர்” என்று கோசமெழுப்பிக் கொண்டு அந்த கழுதை வண்டியின் பின்னால் வருவதும் தெரிகிறது.

காசா நகரில் இருக்கும் துருக்கி நட்புறவு மருத்துவமனையின் மூன்றாவது மாடியும் குண்டுத் தாக்குதலால் சேதம் அடைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் புற்றுநோய் நோயாளர்களுக்கு உயிராபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் இருந்து தெற்கு காசாவுக்கான குழாய்வழி நீர் விநியோகமும் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் துண்டிக்கப்பட்டதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று மத்திய காசாவின் மற்றொரு நீர் விநியோகக் குழாயின் அறிவிக்கப்பட்ட திருத்தப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று அது கூறியது.

“தற்போதைய சந்தர்ப்பத்தில் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு நீர் விநியோகங்கள் எதுவும் இடம்பெறவில்லை” என்று ஐ.நா மனிதாபிமான அலுவலகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

முற்றுகையில் இருக்கும் காசாவுக்குத் தேவைப்படும் உதவியை விடவும் மிகக் குறைவான மனிதாபிமான உதவி வாகனங்களே காசாவை அடைந்திருப்பதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு தேடி மக்கள் ஐ.நா களஞ்சியத்துக்குள் ஊடுருவிய நிலையில் அங்கு சமூக ஒழுங்கு சீர்குலையும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

இதனால் ஐ.நாவின் நான்கு உதவி விநியோக மையங்கள் மற்றும் களஞ்சிய வசதிகள் செயலிழந்திருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இது பேரழிவுக்கு மேல் பேரழிவாகும். சுகாதாரத் தேவைகள் அதிகரித்து வருவதோடு அந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான எமது திறன் குறைந்து வருகிறது” என்று உலக சுகாதார அமைப்பின் பிராந்தியத்திற்கான அவசர நிலைக்கான தலைவர் ரிக் பிரன்னன் தெரிவித்துள்ளார்.

காசாவுக்கான இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே எல்லைக் கடவையான எகிப்துடனான ராபா எல்லை வழியாக உதவி லொறிகள் மிகக் குறைவாகவே அனுமதிக்கப்படுகின்றன. காசாவில் இஸ்ரேல் முழு முற்றுகையை அமுல்படுத்தி வரும் நிலையில் காசாவுக்கு உதவிப் பொருட்கள் செல்வதற்கான ஒரே வழியாக இது உள்ளது.

கடந்த திங்கட்கிழமை இந்த எல்லை ஊடாக 26 உதவி லொறிகள் காசாவுக்குள் நுழைந்ததாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் தெரிவித்தது.

இதேவேளை காசாவுக்குள் நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்ல இஸ்ரேல் அதன் எல்லையைத் திறந்துவிடுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கிரம் ஷலோம் வழியாக மட்டுமே போதுமான அளவு கனரக வாகனங்கள் செல்லலாம் என்று அது கூறியது.

காசா மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ராபா எல்லை வழியே மட்டுமே நிவாரணப் பொருட்களைக் கொண்டுசெல்வது போதுமானதல்ல என்று ஐ.நா அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு புதிதாக வெளியிட்ட வீடியோ ஒன்றில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று பணயக்கைதிகளை காட்டியது. அவர்கள் நெதன்யாகுவுக்கு தமது கோபத்தை வெளியிட்டுள்ளனர்.

காசாவில் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் இஸ்ரேல் இராணுவம் மேற்குக் கரையில் ஹமாஸின் மூத்த தலைவர்கள் உட்பட ஆதரவாளர் வீடுகளைத் தகர்த்து வருகிறது.

போர் ஆரம்பித்த முதல் வாரம் தொடங்கி இஸ்ரேல், மேற்குக் கரை பகுதியில் தொடர் சோதனைகளும் சந்தேகப்படுவோரை கைது செய்வதும் சுட்டுக் கொல்வதுமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஹமாஸின் மூத்த தலைவரான அரசியல் பிரிவு துணை தலைவர் சலே அல்–அரூரியின் வீடு தகர்க்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 7இல் இஸ்ரேல் மீதான தாக்குதலில் அவருக்கு பெரும் பங்கு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பல ஆண்டுகளாக தேடலில் இருப்பவருக்கு அமெரிக்கா 2018இல் அவரைக் குறித்து தகவல் தந்தால் 5 மில்லியன் டொலர் சன்மானமாக வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் அவர் தனது வீட்டில் இல்லை. லெபனானில் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஐ.நாவின் தரவுகளின் படி மேற்குக் கரையில் இதுவரை 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 120க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள வீடியோவில் இஸ்ரேல் இராணுவம் மேற்குக் கரை பகுதியில் வீதியில் வைத்து ஒரு இளைஞரைச் சுடும் காட்சி பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT