Home » உடற்கல்வி பாடத்தில் மாணவர்களை சிறப்பாக வழிநடத்தியவர் ஜெனட் ரஞ்சனா ஜீவகடாட்சம்

உடற்கல்வி பாடத்தில் மாணவர்களை சிறப்பாக வழிநடத்தியவர் ஜெனட் ரஞ்சனா ஜீவகடாட்சம்

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு

by mahesh
October 18, 2023 5:08 pm 0 comment

கல்முனை கல்வி வலயத்திலுள்ள கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் சிரேஷ்ட உடற்கல்விபாட ஆசிரியையாகப் பணியாற்றிய திருமதி ஜெனட் ரஞ்சனா ஜீவகடாட்சம் தனது அறுபதாவது அகவையில் (2023.10.17) ஆசிரிய சேவையில் இருந்து இளைப்பாறியுள்ளார்.

தொட்ட பணிகளைத் துலங்க வைக்கும் திறன் கொண்டவர் இவர். கல்முனையைச் சேர்ந்த இவர் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை (தேசிய பாடசாலை), மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை (தேசிய பாடசாலை) என்பவற்றின் முன்னாள் மாணவியாவார். இவர் ஓய்வு பெற்ற கணிதபாட ஆசிரியர் கே.சீ.ஜீவகடாட்சத்தின் துணைவியாராவார்.

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் 19 வருட காலம் பணியாற்றிய நிலையில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலைக்கு இடமாற்றம் பெற்ற இவர் அங்கு பதினொரு வருட காலம் பணியாற்றி மீண்டும் கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றார். அங்கு மூன்று வருடங்கள் பணியாற்றி ஆசிரியப்பணியில் இருந்து இளைப்பாறியுள்ளார்.

இவர் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வியதிகாரிகளின் நன்மதிப்பையும் மாணவர்கள், பெற்றோர் ஆகியோரின் பேரன்பையும் பெற்றவராவார்.

இவர் தனது மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி உடல் உறுதியும் மனவலிமையும் மிக்க மாணவர்களாகவும் எதிர்காலத்தில் சமூகப் பொருத்தப்பாடு மிக்கவர்களாகவும் மிளிர வேண்டுமென்ற இலட்சியம் கொண்டவராக விளங்கினார்.

இவர் 2006ஆம் ஆண்டு கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பணியாற்றிய வேளையில் வீ.விமலசிறி என்ற மாணவன் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில்அகில இலங்கை ரிதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற வழிப்படுத்தி பயிற்சியளித்தார். அத்துடன் அதே ஆண்டு இதே பாடசாலையின் மாணவர்கள் பெண்களுக்கான கபடி மற்றும் உதைபந்தாட்டம் என்பவற்றில் தேசிய மட்டத்தில் வெற்றிவாகை சூட பயிற்றுவித்தவர். நாட்டில் போர் உக்கிரமடைந்திருந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலய மாணவர்கள் தேசிய ரீதியில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பத்து தங்கப் பதக்ககம், ஆறு வெள்ளிப் பதக்கம், மூன்று வெண்கலப் பதக்கம் வென்றெடுப்பதற்கு இடையறாது உழைத்து வெற்றி கண்டவர். 2009 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி ஒரு தங்கப்பதக்கம், இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்று கல்முனை கல்வி வலயத்திற்கு பெருமை சேர்த்தார்.

சுகாதாரமும் உடற்கல்வியும் பாட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் உதவி பரீட்சகராகவும் பின்னர் 18ஆண்டுகள் பிரதம பரீட்சகராகவும் 10ஆண்டுகள் மீளாய்வு பரீட்சகராகவும் பணியாற்றியுள்ளார். இவற்றுக்கு அப்பால் கால் நூற்றாண்டு காலம் கல்முனை தமிழ் கல்விக் கோட்ட பாடசாலைகளின் விளையாட்டு செயலராகவும் நிறைவான சேவையை வழங்கியுள்ளார்.

இவரது சேவை எதிர்காலத்திலும் மாணவர்களுக்கு எவ்வழியிலாவது கிடைக்க வேண்டுமென்று பெற்றோர் விரும்புகின்றனர்.

செல்லையா -பேரின்பராசா (துறைநீலாவணை நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x