இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்ட கிரிக்கெட் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக இலங்கை கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட ‘சுயாதீன விசாரணைக் குழு’வின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022 நவம்பரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியின் பின்னர் தனுஷ்க குணதிலக்க அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு, அவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் 2022 நவம்பரில் தனுஷ்காவுக்கு எதிராக கிரிக்கெட் தடையை விதித்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றத்தில் 11 மாதங்கள் நீடித்த நிலையில், அவர் குற்றவாளி அல்ல என வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் அண்மையில் நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக்க, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.