Sunday, May 19, 2024
Home » தொடரை வென்ற இலங்கை ஏ அணிக்கு ஆப்கான் ஏ அணியிடம் மீண்டும் தோல்வி

தொடரை வென்ற இலங்கை ஏ அணிக்கு ஆப்கான் ஏ அணியிடம் மீண்டும் தோல்வி

by mahesh
May 8, 2024 6:00 am 0 comment

ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டியிலும் இலங்கை ஏ அணி 5 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.

இதன்படி இலங்கை ஏ அணி கடைசி இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தபோதும் முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றியீட்டி தொடரை 3–2 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று (7) நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை ஏ அணி ஆரம்பம் தொட்டு விக்கெட்டுகளை காத்துக்கொள்ள தவறியது. அணித் தலைவரான ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு முக்கிய இடைவெளிகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோயின.

மத்திய வரிசையில் பசிந்து சூரியபண்டார நிதானமாக ஆடி அணியின் ஓட்டங்களை அதிகரிக்க உதவினார். 92 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 8 பௌண்டரிகளுடன் 70 ஓட்டங்களை பெற்றார். எனினும் வேறு எந்த வீரரும் 25 ஓட்டங்களைக் கூட எட்டவில்லை.

இதனால் இலங்கை ஏ அணி 43 ஓவர்களில் 197 ஓட்டங்களுக்கு சுருண்டது. பந்துவீச்சில் ஆப்கான் ஏ அணி சார்பில் நவீட் சத்ரான் 4 விக்கெட்டுகளையும் நங்காலியா கரோட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த ஆப்கான் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 5 ஓட்டங்களுக்குள் சாய்த்து மொஹமட் ஷிராஸ் அதிர்ச்சி கொடுத்தபோதும் ஆரம்ப வீரர் ரியாஸ் ஹசன் கடைசிவரை களத்தில் இருந்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்படி ஆப்கானிஸ்தான் அணி 45 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 198 ஓட்டங்களை எட்டியது. ரியாஸ் ஹசன் 117 பந்துகளில் ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களை பெற்றார். இலங்கை ஏ அணி சார்பில் பந்துவீச்சில் மொஹமட் ஷிராஸ் மற்றும் துஷான் ஹேமன்த தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆப்கான் ஏ அணி அடுத்து நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை ஏ அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி வரும் சனிக்கிழமை (11) கொழும்பு, பீ. சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT