Monday, April 29, 2024
Home » எந்தவொரு பிரச்சினை தொடர்பாகவும் சர்வதேச விசாரணை தேவையில்லை!

எந்தவொரு பிரச்சினை தொடர்பாகவும் சர்வதேச விசாரணை தேவையில்லை!

- ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம் அவ்வாறு செய்வதில்லை; ஆசியாவைச் சேர்ந்த எமக்கு மாத்திரம் இவ்வாறு கூறுவது ஏன்?

by gayan
October 5, 2023 6:36 am 0 comment
  • நாம் இரண்டாம் தர நாடுகள் என்று எண்ணிக்கொண்டு நீங்கள் கடமை புரிவது ஏன்?
  • மனித உரிமைகள் தொடர்பாக சிறந்த அறிக்கை என்னிடம் உள்ளது. சனல்-4 அலைவரிசையை ஏன் இவ்வளவு புனிதமாக கருதுகின்றீர்கள்?
  • ‘நான் ஆயர்கள் பேரவையுடன் மாத்திரம் இணைந்து செயற்படுகின்றேனே தவிர, கர்தினாலுடன் அல்ல’
  • ஜேர்மனியின் Deutsche Welle அலைவரிசைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட நேர்காணல்

‘எந்தவொரு பிரச்சினை தொடர்பாகவும் எமக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை’ என்று ஜேர்மனியின் Deutsche Welle ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது:

கே: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே, Deutsche Welle இற்கு உங்களை வரவேற்கிறேன். எங்களுடன் இணைந்ததற்கு நன்றி. பேர்லின் பேச்சுவார்த்தைகள் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், நாட்டிற்குச் செல்லும்போது உங்களுடன் எடுத்துச் செல்ல ஏதாவது நல்ல செய்தி இருக்கின்றதா?

பதில்: –எனது நாட்டுக்கு நான் எடுத்துச் செல்வது என்னவென்றால், எங்களுக்கிடையிலான இடைவெளி குறைந்துவிட்டது என்பதுதான். குறிப்பாக ஐரோப்பாவின் பக்கத்தில் இருந்து இது நடந்துள்ளது. பாரிஸ் காலநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளும் நமது சிந்தனையை அறிந்திருப்பதால், அவை நமது எண்ணங்களோடு இணைந்து செல்கின்றன என்பதைக் கூறுவதுதான் நான் பெர்லினுக்கு வரக் காரணமாகும்.

எங்களுக்கு இடையே இருந்த இடைவெளி குறைந்ததால், புரிதல் வளர்ந்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய தரப்புடன் இந்தப் புரிதல் வளர்ந்து வருகிறது என்ற செய்தியை எடுத்துச் செல்ல முடியும். பாரிஸ் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஐரோப்பிய யூனியனுக்குள் இருக்கும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் நமது சிந்தனையை அறிந்து, நமது சிந்தனையுடன் உடன்படுகின்றன. தற்போதுள்ள சில பிரச்சினைகளை அவர்களுடன் சேர்ந்து தீர்க்கும் வழியைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும் என்று கூறுவதற்காகவே வருகை தந்தேன்.

கே: சர்வதேச நாணய நிதியம் (IMF) உங்கள் சிந்தனையுடன் முற்றிலும் இணைந்ததாகத் தெரியவில்லை, இல்லையா? கடந்த சில நாட்களில், 15% இலக்குகளை எட்டாததால், அடுத்த பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ளன. இரண்டாம் தவணைக் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. வரிவிதிப்பதில் உங்களுக்கு மேலும் சிக்கல் உள்ளது என்று அர்த்தம். இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது போல் தெரிகிறது. இந்த செயல்முறையை துரிதப்படுத்த உங்களுக்கு விசேட திட்டம் ஏதேனும் உள்ளதா?

பதில்: –இரண்டாம் தவணைக் கொடுப்பனவை நிறுத்தக் கூடாது என்ற உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். இந்த வருடம் நாம் நிறைவேற்றிய விடயங்களின் பலன் அடுத்த வருட ஆரம்பத்தில் தெரியும் என்று நம்புகிறோம். இலக்குகளைப் பற்றி பேசும்போது, சில இலக்குகளை அடைவது கடினம் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இதுகுறித்து அவர்களிடம் எடுத்துரைத்துள்ளோம். அந்த இடைவெளியை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றி இப்போது நாம் கலந்துரையாடுகிறோம். மேலும், சில முன்மொழிவுகளை நாங்கள் ஏற்கவில்லை. ஏனெனில் அவை சாதாரண மக்களுக்கு சுமையாக அமையலாம் என நினைக்கின்றோம். மாற்று முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. நான் வருவதற்கு முன்பே மாற்று வழிகளை பரிந்துரைத்திருந்தாலும், அவர்கள் மறுநாள் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

கே: குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். ஆனால் உங்கள் நாட்டில் வரி அறவீட்டில் சிக்கல்கள் உள்ளன. ஆறு முறை ஆட்சியில் இருந்த உங்களுக்கு இவை புதிதல்ல, இல்லையா?

பதில்: –புதிய வருமான அதிகார சபையொன்று வேண்டும் என்று கூறுகிறோம். நான் 2003 ஆம் ஆண்டிலும் இதனைப் பரிந்துரைத்தேன். அதனால்தான் 2004 தேர்தலில் தோல்வியடைந்தேன். ஆனால் இது வரி ஏய்ப்பு தொடர்பாக உள்ள ஒரு பிரச்சினை அல்ல. வரி ஏய்ப்பு பிரச்சினையை ஓராண்டில் தீர்க்க முடியாது. இதுகுறித்து கலந்துரையாடியுள்ளோம். அவர்கள் எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவற்றுடன் நாங்கள் உடன்பட்டுள்ளோம். ஆனால், இந்த நேரத்தில் பணத்தை எங்கே தேடப் போகிறோம் என்பதுதான் இப்போதைய கேள்வி. இந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படும்.

கே: அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: –அடுத்த வாரத்துக்குள் தீர்ந்துவிடும் என நினைக்கிறேன்.

கே: வறுமை குறித்து ஒரு பெரிய பிரச்சினை உள்ளது. சேவ் த சில்ட்ரன் இன்டர்நேஷனல் அமைப்பு இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

பதில்: –கடந்த ஆண்டு கடுமையான உணவுப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் அதை வெகுவாக குறைத்துள்ளோம். ஐ.எம்.எஃப் இன் இரண்டாம் தவணை உதவிக்குப் பின்னர், அடுத்த கட்டப் பணிகள் குறித்து சிந்தித்து வருகிறோம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. மக்களுக்கு உணவு மற்றும் எரிபொருள் இருக்கவில்லை. தொழில்கள் வீழ்ச்சியடைந்தன. ஆனால் தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறோம். உதாரணமாக, சுற்றுலாத்துறையை எடுத்துக் கொண்டால், இன்று அது படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறது.

கே: கல்வித்துறையிலும் நெருக்கடிகள் உள்ளனவா?

பதில்: –கல்வித்துறை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 2024, 2025 இற்குள் அதை சாதாரண நிலைமைக்கு கொண்டுவர முயற்சிக்கிறோம். இலங்கையில் கல்வித்துறையில் நீண்டகால சீர்திருத்தங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அப்போது இந்தக் குற்றச்சாட்டு எழாது.

கே: இது குற்றச்சாட்டு அல்ல. இதில் வித்தியாசம் உள்ளது. ஒரு அரசாங்கம் தனது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எடுக்கும் நேரத்திற்கும், பெற்றோர் குழந்தையை வளர்க்க எடுக்கும் நேரத்திற்கும் வித்தியாசம் உள்ளது.

பதில்: –இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டுதான் பொருளாதாரத்தில் ஓரளவு வளர்ச்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. இந்த நேரத்தில், நாட்டில் பட்டினி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. வறுமை குறைந்து வருகிறது. அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். நாட்டில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நாட்டில் பட்டினி தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்ல மாட்டோம். பட்டினி தொடர்பான பிரச்சினையொன்று இருந்ததால்தான் அதனைத் தீர்க்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். பட்டினி தொடர்பான நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவேன்.

கே: கடந்த இரண்டு வாரங்களில் இலங்கையில் பெரும் கவனத்தைப் பெற்ற ஒரு தலைப்பைப் பற்றி இப்போது பேசுவோம். அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் ஒரு பயங்கரவாதக் குழுவுடன் செய்த சதியாக ஊகிக்கப்படும் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலைப் பற்றிய சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட விடயம் பற்றி கவனம் செலுத்தலாமா?

பதில்: –சனல் 4 ஐ ஏன் இவ்வளவு முக்கியமானதாகக் கருதுகிறீர்கள்? நான் அவ்வாறு கருதவில்லை.

கே: இல்லை, நான் அவ்வாறு நினைக்கவில்லை.

பதில்: –பிரித்தானியாவில் பெரும்பாலான மக்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்று நான் நம்புகிறேன்.

கே: அதை முற்றாக நிராகரிப்பது நியாயமா?

பதில்: –சனல் 4ஐ பற்றி மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?

கே: நான் சனல் 4 ஐக் கேட்கவில்லை. இது தொடர்பாக மிக உறுதியான குற்றச்சாட்டு உள்ளது.

பதில்: –ஊடகங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் காரணத்திற்காக நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒரு குற்றச்சாட்டைப் பற்றி மாத்திரம் ஏன் கேட்கிறீர்கள்? ஏனையவற்றைப் பற்றியும் கேளுங்கள்.

கே: உண்மையில், சனல் 4 மட்டுமல்ல, கத்தோலிக்க திருச்சபையும் கூட விசாரணை நடத்துமாறு கேட்கிறது. முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் விசாரணை கோரியுள்ளார்?

பதில்: –அதைத்தான் நானும் கேட்கிறேன். அதை நீங்கள் என்னிடம் கேட்கவில்லை. நான் உங்களை வற்புறுத்திய பின்னர்தான் முன்னாள் ஜனாதிபதி விசாரணை கோருகிறார் என்று கூறுனீர்கள். நீங்கள் சனல் 4 செய்தியை முழுமையான உண்மை என்று நினைத்துக் கொண்டுதான் கேள்வி கேட்டீர்கள்.

கே: இதில் உள்ள விடயம் முழுமையான உண்மை அல்லவா?

பதில்: –சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான் குழுவொன்றை நியமித்துள்ளேன். இந்த குழுவிற்கு முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமை தாங்குகிறார். மேலும், இந்தக் குழுவில் முன்னாள் விமானப்படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரும் உள்ளடங்குகிறார்.

கே: ஆணைக்குழுவின் சுயாதீனத்தை தவிர வேறு எதையும் செய்யும் திறன் இந்த ஆணைக்குழுவிற்கு இருப்பதாக யாரும் நம்பவில்லையா?

பதில்: –அது உங்கள் கருத்து, என்னுடையது அல்ல.

கே: இல்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்?

பதில்: –இல்லை.

கே: நீங்கள் பதிலளிக்க விரும்பவில்லை என்றால், பதில் தேவையில்லை. ஆனால் நான் கேட்கலாம்.

பதில்: –இல்லை. அதாவது அது உங்கள் கருத்து மட்டுமே. எனது கருத்து அல்ல.

கே: கத்தோலிக்க திருச்சபைதான் இதைப் பற்றி பேசுகிறதா?

பதில்: –அதை மறந்துவிடுங்கள். நான் கத்தோலிக்க திருச்சபை பற்றி பேசவில்லை. உங்கள் கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறேன். மேலும், நான் கத்தோலிக்க திருச்சபையுடனே தொடர்பு கொள்கிறேன். பேராயர் அவர்களுடன் அல்ல. கத்தோலிக்க திருச்சபைக்கு ஆணைக்குழுவின் அனைத்து அறிக்கைகளும் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. நான் அவை அனைத்தையும் கொடுத்தேன்.

கே: அவர்கள் எதிர்பார்ப்பது வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணையை அல்லவா?

பதில்:- அதுதான் அவர்கள் ஏற்றுக்கொண்ட சுயாதீன ஆணைக்குழு. நீங்கள் கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்புபடவில்லை. ஆனால் நான் தொடர்பு கொள்கிறேன். மேலும் அவர்கள் என்னை வந்து சந்திக்கிறார்கள். அவர்கள் சந்திப்பது என்னையே, அன்றி உங்களை அல்ல. கையில் கடதாசியை வைத்துக்கொண்டு நீங்கள் இங்கே அமர்ந்து வாசிக்கின்றீர்கள். ஆனால் நான் கத்தோலிக்க திருச்சபையுடன் கலந்துரையாடினேன். நான் எனது நாட்டிற்குச் சென்றாலும் அவர்களுடன் கலந்துரையாடுவேன்.

இரண்டாவது விடயம், பாராளுமன்றத் தெரிவுக்குழு. ஏதேனும் விடுபட்டிருந்தால், அது குறித்து மீண்டும் பாராளுமன்றத் தெரிவுக்குழு நடவடிக்கை எடுக்கும். இறுதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேன விவகாரம் தொடர்பாக கூறுவதென்றால், நான் நாடு திரும்பிய பிறகு அவரை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளேன். இது தொடர்பாக அவரும் ஒரு ஆணைக்குழுவை நியமித்தார், இது குறித்து மேலும் விசாரணை தேவையா என்பது குறித்து அவருடன் கலந்துரையாடவுள்ளேன். எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதற்குத் தீர்வு காணவே நான் முயற்சிக்கிறேன்.

நீங்கள் பேராயர் கொடுத்த கடதாசியை எடுத்து அவர் பார்க்கும் வகையில் அதனை வாசிக்கின்றீர்கள். நீங்கள் கத்தோலிக்க திருச்சபையுடன் பேசியிருக்கிறீர்களா? நீங்கள் கத்தோலிக்க பாதிரியார்களிடம் பேசியிருக்கிறீர்களா?

கே: இல்லை. நான் பேசவில்லை.

பதில்: –அப்படியானால் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க உங்களுக்கு உரிமை இல்லை. இது முற்றிலும் தவறானது, எந்தவொரு பிரச்சினைக்கும் சர்வதேச விசாரணைகள் தேவையில்லை.

இங்கிலாந்தில் அப்படி நடக்கவில்லை. ஜெர்மனியில் அப்படி நடக்கவில்லை. உங்களிடம் என்ன இருக்கிறது? நீங்கள் எந்த சர்வதேச விசாரணைகளில் பங்கேற்றீர்கள்? இங்கிலாந்து எதில் பங்கேற்றது? ஆதரவற்ற இலங்கையில் உள்ள எங்களுக்கும் ஆசியர்களுக்கும் மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள்? நாங்கள் இரண்டாம் தர நாடுகள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கே: இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை.

பதில்:- அப்படியானால் ஏன் கேட்கிறீர்கள்?

கே: ஏனெனில், 2008 முதல் இன்றுவரை எதுவுமே நடக்காத ஆணைக்குழுக்கள் தொடர்பாக உங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. என்னால் பட்டியலிட முடியும். உதலாகம, கற்றுக்கொண்ட பாடங்கள்.

பதில்: –உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவே இதுவாகும். அதற்கெல்லாம் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்.

கே: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கை தொடர்பில் எந்த அளவிற்கு மோசமாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், அமெரிக்க காங்கிரஸின்ல் 12 பேர் உங்கள் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பைடன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைபாடுகளை கண்டறிருந்து அவற்றை சீரமைக்க உங்களால் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று அறிவிக்கப்பட்டது. நான் மேற்கூறிய விடயங்களை போன்றே அந்த ஆணைக்குழுவிற்கும் அதிகாரங்கள் இல்லை.

பதில்:- நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் பாரதூரமான பிரச்சினைகள் எவையும் ஏற்படவில்லை. அதனை நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள். அது ஜனாதிபதி ஆணைக்குழு அல்ல. நாம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நிறுவுவது தொடர்பில் மேற்படி நாடுகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறோம். தற்போது கட்சிகளை போன்றே மேற்கத்திய நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். செனட் சபை உறுப்பினர்களுக்கும் தலையீடு செய்ய முடியும். உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான சட்டத்தை வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

கே: சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகியிருந்த ஐ.நா அறிக்கையை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

பதில்: –ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கே: நிராகரித்தவர்கள் யார்?

பதில்: –இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அதனை யார் பெற்றுக்கொடுத்தது? ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை நான் ஏற்கப்போவதில்லை.

கே: இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடு தவறானது என்றா கூறுகிறீர்கள்?

பதில்: –ஐக்கிய நாடுகள் சபை அல்ல மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாடு தவறானது.

கே: மனித உரிமைகள் பேரவை தவறு என்பதைப் போன்றே Amnesty மற்றும் human rights watch?

பதில்: மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாடு தவறானது.

கே: குற்றப் புலனாய்வு ஒன்றை நீங்கள் செய்வீர்களா? உங்கள் அரசாங்கத்தின் சில அமைச்சர்களும் அதனை கோரியுள்ளனர்?

பதில்:- அமைச்சர்கள் யாவர்?

கே: பெர்னாண்டோ என்று நினைக்கிறேன்?

பதில்:- எந்த பெர்னாண்டோ?

கே: குற்றப்புலனாய்வு பிரிவின் ஊடாக விசாரணை ஒன்றை நடத்த நீங்கள் தயாரா ?

பதில்: –பெனாண்டோ என்ற பெயர் கொண்ட இரு அமைச்சர்கள் உள்ளனர். வர்த்தக மற்றும் வணிக அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகிய இருவரும் பெனாண்டோக்கள் ஆவர். அவர்களில் எவரும் என்னிடத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. நீங்கள் பாரதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளீர்கள், அதனால் விபரமாகக் கூறுங்கள்.

கே: பாரதூரமான குற்றச்சாட்டு என்ன?

பதில்: –எனது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களில் விசாரணை அவசியம் எனக் கூறியது யாவர் என்பது தொடர்பில்

கே: அது குற்றச்சாட்டு அல்ல, உண்மையான விடயம்?

பதில்: –நீங்கள் சொல்வதில் உண்மையில்லை, ஒருவர் மாத்திரமே உள்ளார்.

கே: இதுபற்றி தேடிப்பாருங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்க முடியுமா?

பதில்: –சட்டத்திற்கு இணங்க உங்கள் நாட்டை போலவே எனது நாட்டிலும் விசாரணைகளை நடத்தும் இயலுமை பொலிசாருக்கு மட்டுமே உள்ளது. அதனையடுத்து பொலிஸார் நீதிவானுக்கு வழங்கும் அறிக்கையை மையப்படுத்தி அவர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்.

கே: குற்றப்புலனாய்வு திணைக்களத்தை அழைத்து விசாரணையை நடத்த நீங்கள் விரும்புவீர்களா?

பதில்:- உண்மையாகவே விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கே: அதன் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சர்வதேச மேற்பார்வையாளர்கள் அல்லது அவர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் உங்களுக்கு சிக்கல் உள்ளதா?

பதில்: –இல்லை, உங்கள் நாட்டில் காணப்படும் வழக்குகளில் சர்வதேச மேற்பார்வையாளர்களின் பங்களிப்பு உள்ளதா?

கே: 60,000_- 100,000 இடைப்பட்ட அளவிலான இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர். நீங்கள் தற்போதும் இல்லை என்று சொல்கிறீர்கள்?

பதில்: இல்லை. எண்ணிக்கை குறைவு என்றே நினைக்கிறேன்.

கே: அது தொடர்பில் செயற்பட வேண்டும் அல்லவா?

பதில்: –காணாமல் போனோர் தொடர்பிலான ஆணைக்குழு அது தொடர்பில் செயற்படும். அந்த செயற்பாடுகள் சில காலமாக இடம்பெற்று வருகின்றன. நான் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே ஆகியுள்ளது.

கே: ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளீர்கள் என்ற வகையில் இதுவும் உங்களது பொறுப்பாகும்?

பதில்: –நான் பிரதமராக பதவி வகித்த காலத்திலேயே அதற்கான ஆரம்பப்புள்ளி இடப்பட்டது.

கே: நான் இறுதியாகக் கேட்கப்போகும் கேள்வியில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் இந்தக் கேள்வி மிகவும் பாரதூரமானது என நான் அறிவேன். இலங்கை பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்டல் என்பவற்றை செய்யவில்லை. அது குறித்து உங்களது நிலைப்பாட்டை பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

பதில்: –வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார். அவர்கள் அனைவருக்கும் அதுபற்றிய புரிதல் உள்ளது. சர்வதேச தரப்புக்களுடன் இணைந்து அதனை சரிசெய்வோம். நாம் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம். அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாம் கலந்தாலோசிப்போம்.

கே: இது மிகவும் சிறந்த விடயமாகும்.

பதில்: –நீங்கள் என்னிடத்தில் கேள்விகளை கேட்டீர்கள், நானும் பதிலளித்தேன். அது கவலைக்குரிய விடயமல்ல. நான் மனித உரிமைகளை மதிப்பவன் என்ற வகையில் அது தொடர்பிலான நற்பெயரும் என்னைச் சார்ந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT