Sunday, April 28, 2024
Home » பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் சாதக அறிகுறிகள்!

பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் சாதக அறிகுறிகள்!

by gayan
October 5, 2023 6:00 am 0 comment

நாடு கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அதன் காரணத்தினால் நாட்டு மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம்கொடுத்தார்கள். எரிவாயு மற்றும் எரிபொருளுக்காக வரிசையுகம் நாட்டில் உருவாகி இருந்தது.

அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இறக்குமதிக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது. அதனால் உள்நாட்டுச் சந்தையில் பல பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது. எரிபொருளுக்காக எரிபொருள் நிரப்புநிலையங்களில் நாட்கணக்கில் பாவனையாளர்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தது. இதன் விளைவாக வீதிவாகனப் போக்குவரத்துத்துறை பெரும்பாலும் ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது. எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கலான பொருட்களின் விலைகளும் பெரிதும் அதிகரித்துக் காணப்பட்டன.

இப்பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டின் அரசியலும் கொதிநிலையை அடைந்தது. அதனால் பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியதோடு சொற்ப காலத்தில் ஜனாதிபதியும் தம் பதவியை இராஜிநாமா செய்தார்.

இவ்வாறான இக்கட்டான நிலையில் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்பதவியை ஏற்றார். அத்தோடு பொருளாதார நெருக்கடியின் அசௌகரியங்களில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதை இலக்காகக் கொண்ட பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலானார். அவ்வேலைத்திட்டங்களின் பிரதிபலன்களை மக்கள் குறுகிய காலம் முதல் பெற்றுக் கொள்ளலாயினர்.

குறிப்பாக எரிவாயு, எரிபொருட்களுக்கான வரிசையுகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கலாக பல பொருட்களின் விலைகளும் அவ்வப்போது குறைக்கப்பட்டன.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 2022 இல் 81 சதவீதம் மதிப்பிழந்திருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி 11 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தோடு அந்நியச் செலாவணி கையிருப்பும் பெரிதும் அதிகரித்துள்ளது.

இவை இவ்வாறிருக்க, 70 சதவீதமாகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம் 19 மாதங்களுக்குள் ஒற்றை இலக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வட்டி வீதமும் குறைவடைந்துள்ளது. இவ்வருடம் உல்லாசப் பயணிகளின் வருகை நம்பிக்கை தரும் வகையில் அதிகரித்துள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் பாரிய முன்னேற்றமாகும்.

வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் அனுப்பி வைக்கும் அந்நிய செலாவணியும் கடந்த வருடத்தை விடவும் அதிகரித்து இருக்கின்றது. இறக்குமதிக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அசுவெஸ்ம திட்டம் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு விவசாய ஊக்குவிப்பின் நிமித்தமும் நிவாரணத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இவை மாத்திரமல்லாமல் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பங்களாதேசத்திடம் இருந்து பெறப்பட்டிருந்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகள் அனைத்தும் நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கை தரும் வகையில் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறான நிலையில் உலக வங்கியின் பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர், ‘இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரம் மற்றும் மீட்சிக்கான சாதக அறிகுறிகளை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்துப்பட சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளும் இலங்கையின் பொருளாதாரம் குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரம் உண்மையில் நம்பிக்கை அளிக்கும் வகையில் மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கிறது. இதன் விளைவாகவே பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த சமயம் உதவ முன்வராத நாடுகள் கூட உதவி ஒத்துழைப்புகளை நல்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த நாடு குறுகிய காலப்பகுதிக்குள் சாதகமான முறையில் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களின் பிரதிபலன்களே இவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதனால் இத்திட்டங்களுக்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பது அவசியம். அது நாட்டைக் கட்டியெழுப்ப அளிக்கப்படும் பங்களிப்பாக அமையும் என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT