Monday, April 29, 2024
Home » ஈராக்கில் திருமண வைபவத்தில் தீ: புதுமண தம்பதியுடன் 114 பேர் பலி

ஈராக்கில் திருமண வைபவத்தில் தீ: புதுமண தம்பதியுடன் 114 பேர் பலி

by gayan
September 28, 2023 5:37 am 0 comment

வடக்கு ஈராக்கில் திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் மணமகள் மற்றும் மணமகன் உட்பட 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

வடக்கு நின்வே மாகாணத்தில் உள்ள குரகோஷ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) இரவு இடம்பெற்ற இந்தத் திருமண வைபவத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையிலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளது.

தீ ஏற்படுவதற்கான காரணம் உறுதி செய்யப்படாதபோதும் பட்டாசு கொளுத்தப்பட்ட நிலையிலேயே தீ பரவி இருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமண மண்டபத்தில் இருந்த எரியக்கூடிய பனல்கள் தீ தீவிரமாக பரவக் காரணமாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் மண்டபத்தின் உட்கூரைகள் தீப்பிடித்து உள்ளே இருந்தவர்கள் மீது விழந்துள்ளன.

தீ மூண்ட ஒருசில நிமிடங்களிலேயே கட்டடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக ஈராக்கின் சிவில் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டது. இதனால் பலரும் மண்டபத்திற்குள்ளேயே சிக்கியுள்ளனர்.

“அதிகம் தீப்பிடிக்கக் கூடிய மலிவான கட்டட பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் மண்டபத்தின் ஒரு பகுதி தீப்பிடித்த சில நிமிடங்களிலேயே தீயில் கருகி விழுந்துள்ளன” என்று ஈராக்கின் சிவில் பாதுகாப்பு பணியகம், அரச செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது. இந்த தீக்கு பின்னர் அந்தத் திருமண மண்டபத்தில் இரும்புக் கதிரைகள் உட்பட அனைத்து பொருட்களும் கருகிய நிலையில் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

திருமண ஜோடிகள் நடனமாட ஆரம்பித்த நேரத்தில் தீ பரவ ஆரம்பித்ததாக காயங்களுடன் உயிர் தப்பிய ஒருவர் உள்ளுர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“அவர்கள் பட்டாசு கொளுத்தினார்கள். அதனை அடுத்து உட்கூரை பகுதியில் தீப்பற்றியது. வினாடிகளிலேயே ஒட்டுமொத்த மண்டபத்திற்கும் தீ பரவியது” என்றார்.

இந்தத் தீயில் 114 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டபோதும் அந்த எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தீயில் 450க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தும் காயமடைந்தும் இருப்பதாக ஈராக் செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மூச்சுத்திணறல் மற்றும் பலமான தீக்காயங்கள் காரணமாகவே உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாக ஈராக் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மோசமாக தீக் காயங்களுக்கு உட்பட்டிருப்பதாக மாகாண சுகாதார அதிகாரியான அஹமது துபர்தானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் ஈராக் பிரதமர் ஷியா அல் சுதானி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும்படி உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டுள்ளார்.

இந்த திருமண மண்டபத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருக்கும் நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல தசாப்தங்கள் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈராக்கில் நிர்மாண துறையின் பாதுகாப்பு தரங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

2021 ஜூலையில் தெற்கு ஈராக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொவிட் பிரிவில் ஏற்பட்ட தீயில் 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஒக்டோபரில் பக்தாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒட்சிசன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீயில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT