Monday, April 29, 2024
Home » பிள்ளைகளுக்கு பரிசில்கள் வழங்கி வெற்றிகளை ஈட்டச் செய்வது பெற்றோர் இழைக்கும் தவறு!

பிள்ளைகளுக்கு பரிசில்கள் வழங்கி வெற்றிகளை ஈட்டச் செய்வது பெற்றோர் இழைக்கும் தவறு!

சிறார்களுக்குத் தண்டனை வழங்குவதும் ஆபத்தான செயல்!

by damith
September 25, 2023 6:00 am 0 comment

பரிசில்கள் வழங்குவதன் மூலம், பிள்ளைகளுக்கு வேண்டிய விடயங்களை அவர்களைக் கொண்டு செய்விப்பது தவறாகும். இவ்வாறான பழக்கங்களுக்கு அடிமையான பிள்ளைகளின் முழு எதிர்காலமும் பாதிக்கப்பட்ட பல உதாரணங்கள் உள்ளன.

பரிசில்கள் கிடைக்காத எந்தவொரு செயலையும் செய்வதற்கு சில மாணவர்கள் முன்வருவதில்லை. பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போன சில பிள்ளைகள் இறுதியில் பரிசில்களும் கிடைக்காமல் இக்கட்டான நிலையை அடைகின்றனர். உதாரணமாக, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் பரிசில்களை வாங்கித்தருவதாகக் கூறி ஆசை காட்டும் பெற்றோர் மத்தியில், சித்தியடையாமல் போகும் பிள்ளைகளின் நிலைமை என்ன? பிஞ்சு நெஞ்சில் தவறை விதைக்கும் பெற்றோரின் செயல்களால் பிள்ளைகள் உளத்தாக்கங்களுக்கு ஆளாகின்றனர்.

பிள்ளைகளுக்கு ‘பரிசில்களே வழங்கக் கூடாது’ என்பது இதன் பொருள் அல்ல. பிள்ளைகள் வெற்றிகளைப் பெறும் போது, அவர்களை இலக்கை அடைய வைப்பதற்காக இடையிடையே பரிசில்கள் வழங்குவது தவறில்லை. எனினும் தொடர்ந்து எல்லாவற்றிற்கும் பரிசில்கள் வழங்குவது பொருத்தமான விடயமும் அல்ல. சிலவேளை படிப்படியாக பிரிசில்களை அதிகரிக்க வேண்டி ஏற்படலாம். கடைசியில் இளைஞரானவுடன் அவர் கேட்கின்ற எல்லாவற்றையும் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படும். பிள்ளையால் அடைய முடியாத இலக்குகளுக்காக பரிசில்கள் வழங்குவேன் எனக் கூறுவது தவறு. இது பொருத்தமற்ற செயலாகும். இறுதியில் அது பிள்ளையின் எதிர்காலத்தைப் பாதிப்பதாக அமையும்.

படிக்கின்ற பிள்ளைகளுக்கு பொருட்களை பரிசாக வழங்குவதற்குப் பதிலாக வாழ்த்துதல், ஊக்குவித்தல், அன்பு காட்டுதல் போன்றவை பெறுமதிமிக்க பரிசில்களாகும். இவற்றின் மூலம் நல்ல பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம். நல்ல வேலைகளைச் செய்யும் போது பரிசில் வழங்குவதைவிட அதனைப் பாராட்டுதல், வாழ்த்துதல் போன்றவை மேலும் நல்ல வேலைகளைச் செய்ய ஊக்குவிக்கும்.

எனினும் இங்கு ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் உண்டு. மற்றப்பிள்ளைகளுடன் ஒப்பிட்டு, மற்றவர்களுக்கு மனத்தாக்கம் ஏற்படக்கூடிய வகையில், பாராட்டுதலோ, பரிசில்கள் வழங்குவதோ கூடாது. அவ்வாறான செயல்கள் மற்றப் பிள்ளைகளிடம் இருக்கும் ஆற்றலை மழுங்கடிக்கச் செய்யும்.

பரிசில்களைப் போன்றே அடிக்கடி தண்டனை வழங்கக்கூடாது. மிகச் சிறிய வயதிலே உடல் ரீதியான தண்டனைகள் வழங்குவது பொருத்தமானதல்ல. பல பெற்றோர்கள் பிள்ளைகளது தவறுகளைத் தடுப்பதற்காக பிள்ளைகளால் தாங்க முடியாதளவு தண்டனைகளை வழங்குவர். குறிப்பாக அதிகாரக் குழந்தை வளர்ப்பைக் கடைப்பிடிக்கும் பெற்றோர்கள் இவ்வாறு நடந்துகொள்வார்கள். சிறிய குற்றத்திற்கும் பாரிய தண்டனைகளை வழங்கிவிடுவார்கள்.

இதனால் குழந்தைகள் எதிர்ப்பைக் காட்டுபவர்களாக மாறிவிடுவதுடன், குழப்படி, கட்டுக்கடங்காமல் போதல் என்ற நிலைக்குள்ளாகுவர். மேலும், சினம், ஆக்ரோஷம், ஒதுங்கி வாழுதல் போன்ற விளைவுகள் ஏற்படும். இவ்வயதுப் பிள்ளைகள் பிழைகள் செய்வது தெரிந்து கொண்டால், சில பிள்ளைகள் தமது அம்மா, அப்பா, தம்பி, தங்கை போன்றவர்களைக் கூட அடிப்பார்கள். விளையாட்டுப் பொருட்களை உடைப்பார்கள். பால் போத்தலை வீசி எறிவார்கள். செய்ய வேண்டாம். எனக் கூறும் விடயங்களையே செய்வார்கள்.

குழந்தையின் வளர்ப்பில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் விளக்கம் பெறவேண்டிய மிக முக்கியமான அம்சம்தான், ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவங்கள் பற்றி அறிந்து கொள்வதுடன், அதில் இடம்பெறும் விருத்திகள் தொடர்பாகவும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

அவ்வாறில்லாவிட்டால், முறையற்ற நடவடிக்கைகளை குழந்தை வளர்ப்பில் அறியாமல் கடைப்பிடித்து, பிறழ்வான, சமூகத்திற்கு உதவாத, ஆரோக்கியமற்ற குழந்தைகளை விளைவாகப் பெறவேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்படுவதனை தவிர்க்க முடியாது போய்விடும். அந்தவகையில், ஒரு பிள்ளையின் பிறப்பிலிருந்து கட்டிளமைப்பருவம் வரை இடம்பெறும் மாற்றங்களையும் வித்தியாசங்களையும் அறிந்து கொள்வதானது, அப்பிள்ளையை முறையாக வளர்ப்பதற்கு உந்துதலளிக்கின்றது. விருத்தியைப் பொறுத்தவரையில் ஒரு பிள்ளை உள-பாலியல் கட்டங்களைக் கடந்து செல்ல நேரிடுவதால், இக்கட்டங்களிலே தண்டனைகளால் கட்டுப்படுத்தாது, சுதந்திரமாக வளர விடுவது இப்பிள்ளையின் எதிர்காலத்திற்கு நன்மையளிக்கிறது என்றால் அது மறுப்பதற்கில்லை.

வளர்ப்பு செயல்பாட்டில் தண்டனை என்பது மிக முக்கியமான கூறு அல்ல, இதன் பொருள் குழந்தைகளில் அவர்களின் நடத்தையின் தவறான தன்மை, குற்ற உணர்வு, அவமானம் மற்றும் வருத்தம் பற்றிய புரிதலைத் தூண்டுவதாகும். கல்வியின் அளவை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே இந்த இலக்கு அடையப்படுகிறது. எனவே, ஒரு கல்வி நிறுவனத்தில் ஒரு குழந்தையின் தண்டனையைப் பயன்படுத்துவதற்கு முன், கல்வியாளர் கண்டிப்பாக: நிலைமையை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள். குழந்தை ஏன் அதைச் செய்தது (யாராவது அவரை வற்புறுத்தியிருக்கலாம் அல்லது கட்டாயப்படுத்தியிருக்கலாம்), அவர் என்ன நோக்கங்களால் வழிநடத்தப்பட்டார் (தன்னைத் தற்காத்துக் கொண்டார்) போன்றவை. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பொறுத்து, குற்றத்திற்கான பயனுள்ள மற்றும் பொருத்தமான தண்டனையைத் தேர்ந்தெடுப்பது அவசியம்;.

எனவே, பிள்ளை வளர்ப்பானது பெற்றோர்களால் மேற்போன்ற தவறான அணுகுமுறைகள் களையப்பட்டு, முறையாகக் கைக்கொள்ளப்படும் போதுதான் அது சமூகத்தில் சிறந்த பிரஜையாக உருவாகி அதன் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்வதுடன், சமூகத்தில் ஆரோக்கியமான பரம்பரை ஒன்றினைக் கட்டியெழுப்புவதற்கான தொடர்ந்தேர்ச்சியான செயன்முறையில் அதுவும் ஒரு பங்காளியாக தான் தனது வளர்ப்பில் பெற்றோர் மூலமாகப் பெற்ற அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தும். இதனைத் தெளிவாக உணர்ந்து பெற்றோர்கள் தனது பிள்ளைக்கு காத்திரமான வழிகாட்டல்கள் மற்றும் அணுகுமுறைகள் மூலமாக வளர்ப்பதற்கான நடவடிக்கையில் கரிசனை செலுத்துதல் வேண்டும்.

தாய் மற்றும் தந்தை! உங்கள் குழந்தையின் கதைகளில் மிகுந்த கவனத்துடன் இருங்கள், அவருடைய உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் உங்களுக்கு தெரிவிக்க அவர் எடுக்கும் முயற்சிகளை புறக்கணிக்காதீர்கள்! தண்டனைகள் கற்பனையாக கூட மாறட்டும், ஆனால் உணர்ச்சி அனுபவங்கள் உண்மையானவை! குழந்தையுடன் பேசுங்கள், சிக்கல்களின் சிக்கலை பின்னர் அவிழ்ப்பதை விட மொட்டில் உள்ள சிக்கலை அடையாளம் காண்பது நல்லது.

இந்துஷா சிவராசா
கல்வி, பிள்ளைநலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT