Monday, April 29, 2024
Home » பொருளாதார முன்னேற்றத்தில் நம்பிக்கை தரும் நகர்வுகள்

பொருளாதார முன்னேற்றத்தில் நம்பிக்கை தரும் நகர்வுகள்

by damith
September 25, 2023 6:00 am 0 comment

கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருந்த நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, ஒத்துழைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் முன்னெடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புக்களின் அடிப்படையில் இலங்கைக்கு உதவி, ஒத்துழைப்புக்களை நல்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த மார்ச் (2023) மாதம் இந்நிதியத்துடன் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.

அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், அதன் முதற்தொகுதி நிதியுதவியாக 333 மில்லியன் டொலர்களை கடந்த மார்ச் மாதமே வழங்கியது.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி கட்டம் கட்டமாக மீட்சி பெற்று வந்த இந்நாட்டுக்கு இந்நிதியத்தின் இந்த இணக்கப்பாடும் கடனுதவியும் பாரிய பக்கபலமாக அமைந்துள்ளன.

அத்தோடு உலகின் பல நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் இலங்கைக்கு உதவி ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவும் சர்வதேச நாணய நிதியத்தினுடனான இந்த உடன்பாடு உதவியுள்ளதோடு நாடு பொருளாதார ரீதியில் மறுமலர்ச்சிப் பாதையில் பயணிக்கவும் வழிவகுத்துள்ளது.

பொருளாதார ரீதியில் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காக அந்நிதியத்தின் சிரேஷ்ட தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ப்ரூயர் தலைமையிலான குழுவினர் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளளனர். அவர்கள் நாளைமறுதினம் 27 ஆம் திகதி வரையும் மீளாய்வுக் கூட்டங்களை முன்னெடுக்க உள்ளனர். ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பவற்றின் உயரதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இக்கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அரச வருமானங்களை அதிகரிப்பது குறித்து இந்தக் கூட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும் பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரட்நாயக்கா, ‘மக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை சுமத்தாது அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது’ என்றுள்ளார்.

இது மக்களால் பெரிதும் வரவேற்கப்படக்கூடிய நடவடிக்கையாகும். பொருளாதார நெருக்கடியில் இருந்து கட்டம் கட்டமாக மீட்சி பெற்று நம்பிக்கை அளி்க்கும் வகையில் பொருளாதார மறுமலர்ச்சி பாதையில் நாடு பிரவேசித்துள்ளது. ஆனாலும் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் மக்கள் எதிர்கொண்ட தாக்கங்களும் அழுத்தங்களும் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. இந்நிலையில்தான் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்கா இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொருளாதார மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் பயனாக பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. வெளிநாட்டுக் கடன்களை மீளச்செலுத்தும் நிலைக்கு நாடு முன்னேற்றமடைந்துள்ளது. அதன் பயனாக பங்களாதேசத்திடம் பெறப்பட்டிருந்த 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் மூன்று கட்டங்களில் மீளச் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் கூட்டங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டுள்ளன. மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் கலந்துரையாடல்களும் சாதகமான முறையில் அமைந்துள்ளன. இந்நிலையில் இம்மீளாய்வு கூட்டங்கள் நாளைமறுதினம் 27 ஆம் திகதி நிறைவடைய இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட இருக்கின்றது.

இதன் ஊடாக இந்நிதியத்தின் இரண்டாம் கட்டக் கடன் தொகை கிடைக்கப் பெறுவதோடு இந்நாடு பெற்றுக்கொள்ளும் பொருளாதார ரீதியிலான அனுகூலங்கள் மேலும் அதிகரிக்கும். இது மக்களுக்கான பிரதிபலன்களையும் நிவாரணங்களையும் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். பொருளாதார நெருக்கடி காலத்தில் முகம்கொடுத்த நெருக்கடிகள், அசௌகரியங்கள் முழுமையாக நீங்க வேண்டும். அதுதான் மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி ஒத்துழைப்புக்கள் நிச்சயம் பக்கபலமாகும். அத்தோடு பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பவும் இது பாரிய ஒத்துழைப்பாக இருக்கும்.

ஆகவே நாட்டைக் கட்டியெழுப்பவென முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். அது கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால் பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பாக இருக்க வேண்டும். அது மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளாத வாழ்வுக்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT