Saturday, April 27, 2024
Home » ஞாயிறு தினங்களில் மாணவருக்கு அறநெறி தவிர்ந்த பாடங்களை நடத்துவோர் மீது சட்டநடவடிக்ைக!

ஞாயிறு தினங்களில் மாணவருக்கு அறநெறி தவிர்ந்த பாடங்களை நடத்துவோர் மீது சட்டநடவடிக்ைக!

-ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கண்டிப்பான தீர்மானம்!

by sachintha
September 5, 2023 12:09 pm 0 comment

 

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் அரச பாடசாலைகளிலும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் 9ஆம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு அறநெறி தவிர்ந்த ஏனைய வகுப்புக்கள் நடத்துவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை மீறுவோர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பாடசாலை அதிபர்கள், தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் சிகையலங்கார நிபுணர்கள் உடையலங்கார நிலைய உரிமையாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சட்டத்தரணி கு.ஜெகசுதன், பிரதிக் கல்விப்பணிப்பாளர் கங்காதரன் மற்றும் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் அறநெறி உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகளை முறையான கட்டமைப்பின் கீழ் கொண்டுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் கூட்டத்தின் நோக்கம் பற்றி பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தினார். மாணவர்களின் தற்கால செயற்பாடுகள், அவற்றை திருத்தி அமைக்க வேண்டியதன் சமூகப்பொறுப்பு தொடர்பிலும் அவர் எடுத்துக் கூறினார்.

அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்கள் சிகையலங்கார ஒழுங்கமைப்பு சீருடைகளின் சீரின்மை போன்ற விடயங்களையும் அவர் எடுத்துரைத்தார். இதனை வழிப்படுத்த பெற்றோர்களின் கண்காணிப்பு, சிகையலங்கார மற்றும் உடையலங்கார நிலைய உரிமையாளர்களின் ஒத்துழைப்பு தேவை போன்ற விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய வலயக் கல்விப்பணிப்பாளர் தமிழ் மொழியின் வரலாறு, அதன் தொன்மை பற்றி விரிவாக விளக்கியதுடன் இச்சிறப்புமிக்க மொழியினை பேசும் நாம் ஒழுக்கமுள்ள மாணவ சமுதாயத்தை உருவாக்கி அடுத்த பரம்பரைக்கு கையளிக்க பாடுபடவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அத்தோடு மாணவர்களின் ஒழுக்கம், சிகையலங்காரம், உடை போன்ற விடயங்களில் அதிககவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக அங்கு கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி ஜெகசுதன், மாணவ சமுதாயத்தை ஒழுக்கமுள்ள சமூகமாக மாற்றுவதற்கு தங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் வழங்குவதாகவும் இதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொதுவான நடவடிக்கைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்படுவதுடன் ஆலையடிவேம்பில் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தரணிகள் ஒன்றியத்தினூடாக 25 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் வழக்குத் தாக்கலை இலவசமாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களும் தங்களது கருத்தைப் பதிவு செய்ததுடன் இறுதியாக சில தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

9ஆம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை நேர வகுப்புக்கள் நடத்த தடை விதிக்கப்படுவதுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து பிரத்தியேக மற்றும் பாடசாலை வகுப்புக்களையும் நடத்த தடை விதித்தல்.

அறநெறிக்கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல், மாணவர்களின் சிகையலங்காரங்களிலும் உடையலங்காரங்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தல், இதனை மீறுவோர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

வி.சுகிர்தகுமார்…

(வாச்சிக்குடா விஷேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT