Friday, May 10, 2024
Home » பொலிஸ் அதிகாரம்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – த.தே.கூ. எம்.பிக்கள் இடையே விசேட கலந்துரையாடல்

பொலிஸ் அதிகாரம்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – த.தே.கூ. எம்.பிக்கள் இடையே விசேட கலந்துரையாடல்

- இரு தரப்பு நியாயங்கள் முன்வைக்கப்பட்டு ஆலோசனை

by Rizwan Segu Mohideen
August 10, 2023 5:18 pm 0 comment

13ஆவது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பில் நேற்று (09) பிற்பகல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் அதிகாரங்களைக் கோருவதற்கான காரணங்களைக் கேட்டறிந்தார்.

உலக நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு அதிகாரப் பகிர்வின் அவசியத்தை தமிழ் கூட்டமைப்பினர் இங்கு விளக்கியதுடன் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் கூட அதிகாரப் பகிர்வு மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள், அங்கு பயன்படுத்தப்படும் முறைகளை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் விளக்கமளித்தனர்.

இதன்போது, இங்கிலாந்து மற்றும் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக கலாச்சாரங்கள் முற்றிலும் வேறுபட்டவை என அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டினார்.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கேட்டறிந்தார்.

மாவட்டக் குழுக்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நீண்ட தூரம் சென்று கொழும்பு வர வேண்டியிருப்பதாலும், சிலரது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான உத்தேச விடயங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும், ஆனால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுவையும் நியமிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தமிழ் எம்.பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வட மாகாணம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், அதிகமான சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் இதன்போது தெரிவித்தனர்.

போதைப் பொருள் மற்றும் பாதாள உலக அமைப்புகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவிற்கு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கிடைக்கும் தகவல்களை எந்த நேரத்திலும் வழங்க முடியும் என்றும், அவ்வாறான தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்தார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் உரிய விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான தகவல்களை பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் எந்த நேரத்திலும் கலந்துரையாட முடியும் எனவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பொலிஸ் மா அதிபர், சி.டி.சி.டி.விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்காயன் இராசமாணிக்கம், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடேக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு வாரங்களுக்குள் இதுகுறித்து அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்த இரு தரப்பினரும் இணக்கம் கண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT