Saturday, May 4, 2024
Home » உலக துறவியர் தினம்

உலக துறவியர் தினம்

பெப்ரவரி 2 ஆம் திகதி திருச்சபை சிறப்பிக்கின்றது

by damith
January 30, 2024 6:00 am 0 comment

திருத்தந்தை புனித 2ம் ஜோன் போல் அவர்கள், 1997ம் ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான உலக தினத்தை உருவாக்கினார்.

இல்லறம் தவிர்த்து, இறையோடு மகிழ்ந்து, தனிமையில் நிலைத்து, தபத்தில் சிறந்து, துறவை தூய்மையாக போற்றியவர்கள் துறவிகள்.

துறவு என்பது ஆசையைத் தவிர்த்து அன்பை விதைத்து அன்போடு பயணிப்பதே. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 2 ஆம் திகதி அதாவது, இயேசு பிறப்பின் 40ஆவது நாள் கோவிலில் காணிக்கையாக அவர் அர்ப்பணிக்கப்பட்ட நாளன்று அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளின் உலக நாளை திருச்சபை சிறப்பிக்கின்றது.

அதன்படி வரும் பெப்ரவரி 2 வெள்ளிக்கிழமை 27ஆவது ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான உலக நாள் சிறப்பிக்கப்படவு ள்ளது.

ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் என்னும் வார்த்தைப்பாடுகளை ஏற்று தங்களையே இறைவனுக்கு அர்ப்பணித்த, ஆண் பெண் துறவிகளின் வாழ்க்கை அழகையும் அதன் தாக்கத்தையும் உலக மக்களுக்கு அடையாளப்படுத்துவதற்காகவே இந் நாளானது கொண்டாடப்படுகின்றது.

இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட அன்னை மரியாவிற்கான தூய்மைச்சடங்கு என்று சிறப்பிக்கப்படும் இந்த நாளில் மெழுகுதிரிகள் ஆசீர்வதிக்கப்படுகின்றன.

மெழுகுதிரிகள் தியாகத்தின் அடையாளம். தன்னையே உருக்கி உலகிற்கு ஒளி கொடுக்கும் திரிகள், குடும்பத்திற்காக சமூக முன்னேற்றத்திற்காக என்று தன்னையே அர்ப்பணித்து வாழும் மனிதர்களுக்கு அடையாளமாக குறிப்பிடப்படுகின்றன.

மேலும் தியாகத்தின் இலக்கணமாய் தன்னையும் தன் வாழ்வையும் இறைத் திருவுளத்திற்காக அர்ப்பணித்து, உலகின் ஒளியாகத் திகழும் இயேசுவையும் அடையாளப்படுத்துகின்றன. இயேசுவைப் பின்பற்றி அவர்பணி செய்ய தங்களையே அர்ப்பணித்திருக்கும் துறவிகளும், உலகின் ஒளியான இயேசுவின் ஒளியைப் பிரதிபலிக்கக்கூடியவர்களாக வாழவும் இந்த மெழுகுதிரியானது அர்ச்சிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது.

அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளின் மறை பணி வாழ்க்கையானது திருஅவையின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்றும் இந்த சிறப்பானது துறவற அழைத்தலைப் பெற்றவர்கள் மட்டுமன்றி முழு கிறிஸ்தவ சமூகத்திற்குமானது என்றும் திருத்தந்தை புனித 2ஆம் ஜோன் போல் இந்நாள் தொடர்பில் எடுத்துரைக்கின்றார்.

துறவிகள் அழைத்தல் என்னும் கடவுளின் அற்புதமான பரிசிற்காக நன்றி தெரிவிக்கும் இந்த நாளில் கடவுளை மிகவும் உறுதியாக ஆராதித்தல், அழைத்தல் என்னும் உயரிய கொடைக்காக நன்றி தெரிவித்தல் என்பதனை அதிகதிகமாக வலியுறுத்துகின்றார் புனித இரண்டாம் ஜோன் போல்.

உலக மக்கள் அனைவரும் அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை பற்றிய அறிவையும் அவர்கள் வாழ்வின் மதிப்பையும் நன்று அறிந்து ஊக்குவிக்கவேண்டும். அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள், இறைவன் தங்களுக்குச் செய்த அற்புதங்களை எல்லாம் நினைத்துக் கொண்டாடி மகிழ வேண்டும்.

தூய ஆவியால் பரவிய தெய்வீக அழகின் கதிர்களை தங்களின் வாழ்க்கை முறைகளில் ஒளிரும் நம்பிக்கையால் கண்டறியவும் மேலும் பல அற்புதங்களைப் பெறவும் துறவிகள் அழைக்கப்படுகின்றார்கள். இதன் வழியாக திருஅவையிலும், உலகிலும் அவர்களின் ஈடுசெய்ய முடியாத பணியின் தெளிவான உணர்வானது வெளிப்படுகின்றது.

திருப்பீட துறவியர் பேராயத் தலைவர் கர்தினால் Braz de Aviz அவர்கள் துறவிகள் தங்களையே மற்றவருக்கு வழங்காதபோது, அவர்கள் தங்கள் வாழ்வில் தளர்ச்சியை அனுபவிக்கின்றனர். இவ்வுலகின் கடினமான சூழல்கள் மத்தியில் துறவியரின் வாழ்வு சாட்சியம் பகரக்கூடியதாய் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் இல்லாத உலகத்தையோ, திரு அவையையோ நினைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் நீதியும் அமைதியும் நிறைந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும், இளையோரோடும் ஏழைகளோடும் இறைவாக்கைப் பகிர்ந்து கொள்வதிலும் துறவிகள் புளிக்காரமாய் உள்ளனர் என்று வலியுறுத்துகின்றார் திருத்தந்தை பிரான்ஸிஸ்.

மெரினா ராஜ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT