எரிபொருளின் விலை வீழ்ச்சி அரசுக்கு ரூ 600 மில். மீதம் | தினகரன்

எரிபொருளின் விலை வீழ்ச்சி அரசுக்கு ரூ 600 மில். மீதம்

உலகச் சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சி யடைந்துள்ளதால் 600 பில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு மீதமாகியுள்ளது என்றும் எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த கால கடன் சுமை பற்றியே மக்கள் மத்தியில் கூறி வருகின்றார் எனவும் கூட்டு எதிர்க்கட்சி எம். பி. பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் கடன்கள் அதிகரித்துள்ள காலமாக இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தையே குறிப்பிடலாம் என சுட்டிக்காட்டிய அவர், ரூபாயின் மதிப்பு குறைவடைந்துள்ளதால் கடந்த 2015ல் மாத்திரம் 285 பில்லியன் கடன் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க் கட்சியின் செய்தியாளர் மாநாடொன்று நேற்று பொரளை என். எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் விளக்கமளித்த பந்துல குணவர்தன எம்.பி, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க இரவும் பகலும் மஹிந்த ராஜபக்ஷ பெற்ற கடன் பற்றியே தெரிவித்து வருகிறார்.

அந்த கடன் காரணமாகவே நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள உள்ளாகியுள்ளதாக மக்கள் மத்தியில் கூறி வருகின்றார்.

இதனால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட பல தேசிய வளங்களை விற்றே இந்த கடனை அடைக்க நேர்ந்துள்ளது எனவும் பாட்டாக பாடி வருகிறார்.

உண்மையில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்காக வாங்கிய கடன் 155 பில்லியன் ரூபா மட்டுமே. அது 20 வருடங்களில் தவணை முறைப்படி செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறிருக்க அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வருடமொன்றிற்கு 658 பில்லியன் ரூபா செலவாகிறது. அவர் கூறுவதைப் பார்த்தால் அடுத்த வருடம் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் வழங்கப்படுவதில் நெருக்கடி ஏற்படுமா? என்பதை அவர் கூறவேண்டும்.

(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

 


Add new comment

Or log in with...