சட்டத்தின் கடமை முடிந்ததால் அடுத்த கட்ட நகர்வு என்ன? | தினகரன்

சட்டத்தின் கடமை முடிந்ததால் அடுத்த கட்ட நகர்வு என்ன?

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி விட்டது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015 மே 11-இல், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு, நீதிபதி குன்ஹாவின் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்திய நாட்டில் ஊழல் மேலிருந்து அடிமட்டம் வரை புரையோடிப் போய் விட்டிருக்கிறது என்றும், சட்டம் பண பலம் படைத்தோரையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும் எதுவும் செய்து விடாது என்றும் பரவலாகப் பேசப்பட்டாலும், யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. முதல்வராகப் பதவியில் இருக்கும் போதே ஜெயலலிதாவே தண்டிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார் என்பதும், இப்போது மேல்முறையீட்டிலும், உச்சநீதிமன்றம் அந்த தண்டனையை உறுதிப்படுத்தி இருக்கிறது என்பதும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றுச் சுவடுகள்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மது கோடா, ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த துணைப்பிரதமர் தேவிலாலின் மகனுமான ஓம் பிரகாஷ் செளதாலா ஆகியோரைத் தொடர்ந்து தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் ஊழல், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருப்பது, தாமதமாகச் செயல்பட்டாலும் சட்டமும் நீதியும் தனது கடமையைச் செய்யாமல் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. மது கோடாவும், ஓம் பிரகாஷ் செளதாலாவும் ஊழல் வழக்கிலும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலும் தண்டனை பெற்றிருக்கிறார்கள் என்பது மட்டுமே வித்தியாசம்.

அதே நேரத்தில், அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளில், விசாரணை முடுக்கி விடப்பட்டு விரைவில் தீர்ப்பு வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதைத்தான் 21 ஆண்டுகள் நீண்டு நின்ற ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நமக்கு எடுத்துரைக்கிறது. லோக்பால் அமைக்கப்பட்டால் மட்டுமே, அரசியல்வாதிகள், பொறுப்பில் உள்ளவர்கள் தொடர்பான வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்குவதற்கு வழிகோலப்படும்.

ஜெயலலிதா மறைந்து விட்டார் என்பதால் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் செயல்படுத்தாமல் விட்டு, ஏனைய மூன்று குற்றவாளிகளான வி.கே. சசிகலா, ஜெ. இளவரசி, வி.என். சுதாகரன் ஆகிய மூவரும் எஞ்சியிருக்கும் தண்டனை காலத்தை சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இப்போது நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. இப்படியொரு அவமானத்தை எதிர்கொள்ளாமல் அவர் மறைந்ததுகூட நல்லதுதான் என்று கூறத் தோன்றுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி, அ.தி.மு.க. சட்டப்பேரவை குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே. சசிகலா தண்டனை பெற்றுள்ள நிலையில், தமிழக அரசியல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தாக வேண்டும். முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜிநாமாவைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ், அடுத்த ஆட்சி அமைவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருந்தது போல இனியும் காலதாமதம் செய்ய முடியாது; கூடாது.

ஆளுநர் என்கிற முறையில், உடனடியாக அடுத்த ஆட்சிக்கு வழிகோலாமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதே அரசியல் சட்ட முரண். நாம் நமது தலையங்கத்தில் முன்பே குறிப்பிட்டிருந்தது போல சசிகலா ஏற்புடையவரல்ல என்றால் வேறொருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி ஆட்சி அமைக்க அனுமதித்திருந்தால், அ.தி.மு.க.வில் பிளவோ, இன்றைய அரசியல் நிலையற்ற தன்மையோ ஏற்பட்டிருக்காது. அதனால், உடனடியாக அடுத்த அரசு அமைவதற்கான நடவடிக்கையில் ஆளுநர் மாளிகை சுறுசுறுப்பாக இறங்கியாக வேண்டும்.

அ.தி.மு.க. சட்டப்பேரவைக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவை, இரு தரப்பும் கூடிப் பேசித் தீர்த்துக் கொள்வதாக இருந்தால், அதுதான் அந்தக் கட்சியை நிறுவிய எம்ஜிஆருக்கும், இப்போது உறுப்பினர்களாக இவர்கள் தேர்ந்தெடுக்கப்படக் காரணமாக இருந்த ஜெயலலிதாவுக்கும் செய்யும் நன்றி விசுவாசம். வி.கே. சசிகலா மீதான எதிர்ப்புதான், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தலைமையிலான குழுவினரின் பிரிவுக்கு உண்மையான காரணமென்றால், அந்தக் காரணம் அகன்று விட்டிருக்கிறது.

ஒருவேளை, இரண்டு பிரிவினரும் இணைய மறுத்தால், அதில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுள்ள குழுவின் தலைவரை ஆளுநர் உடனடியாக முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துத் தனது சட்டப்பேரவைப் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோர வேண்டும்.

ஒருவேளை இந்த இரண்டு குழுவினருக்கும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியான திமுக அளவுக்கு எண்ணிக்கை பலம் இல்லாமல் இருந்தால், ஆளுநர் உடனடியாக எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலினை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் யாராலும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலாத நிலையில் மட்டுமே, ஆட்சிக் கலைப்பு, குடியரசுத் தலைவர் ஆட்சி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபட வேண்டும் என்பதுதான் அரசியல் சட்டம் வகுத்திருக்கும் முறை. இதை எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியிருக்கிறது.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சட்டம் தனது கடமையைச் செய்திருக்கிறது.அதேபோல, அரசியல் சட்டமும் தனது கடமையை முறையாகச் செய்ய வேண்டும். அதை ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும்!

(தினமணி ஆசிரிய தலையங்கம்)


Add new comment

Or log in with...